Monday, October 10, 2011

அகத்தைச் சுத்தி அவர் செய்வார்


செந்நாக் கொண்டு பாடாமல்,
   செம்மை வழியில் நடவாமல்,
நன்னாள் வந்தது அறியாமல்,
   நாட்கள் வீணே கழிப்பீரோ?
எந்நாள் மட்டும் பொய்களின்பின்
   ஏவல் செய்தே மாய்வீரோ?
‘மன்னா’ இயேசு முன்நின்று
   மகிமை பெறவே வாரீரோ?            1   

சுத்த மனத்தால் உமையுள்ளே
   சோதித்து அறிந்து வேண்டீரோ?
நித்தம் எமது குறைதீர்ப்பார்,
   நிழலின் கீழே வாரீரோ?
சித்தம் அவரின் முகம்நோக்கிச்
   செலுத்தி, நம்பிக் கேளீரோ?
புத்தம் புதிய ஒளிகூட்டிப்
   பொலியச் செய்யும் அவர்முகமே!   2

எவருக்கு அவரை எதிர்க்கவரும்?
   எல்லாம் அவரே கொடுக்கவரும்!
தவறே துன்பம் கொண்டுதரும்!
   தம்முள் திருந்தும்! கருணைவரும்!
சுவராய்க் கரையாய்ச் சமுத்திரமும்
   சுவடுகள் காட்டும்! வழிநடத்தும்!
உவராய், உப்பின் சாரமதாய்
   உலகில் நடந்து நலம்சேர்ப்பீர்!            3

‘வாழ்வின் பொருளை’த் தேடிடுவீர்!
   வளங்கள் கூட்டிப் பெருக்கிடுவீர்!
தாழ்வின் கதவை மூடிடுவீர்!
   தங்கும் மகிழ்வு கோடிவரும்!
ஆழ்மனத் துள்ளே அமைதிவரும்!
   அதனால் படுக்க உறக்கம்வரும்!
கேள்மனம் கொண்ட கர்த்தரினால்
   கேடுகள் நீங்கும்! சுகம்தங்கும்!     4

சகிப்பவர் கண்டு கொளவாரும்!
   சாரமற் றவைபின் செலல்தீரும்!
மகிமையின் நேரம் அறிந்திடுமே!
   மனத்துள் திருந்திச் செயல்படுமே!
நகச்சுற் றைப்போல் பாவமுமே!
   நலமுற இறைவன் முன்விழுமே!
அகத்தைச் சுத்தி அவர்செய்வார்!
   அழுது திருந்தி வழிபடுமே!              5