Friday, August 26, 2011

கர்த்தரால் ஆகும் களிப்பும் சுகமும்


கர்த்தரை நம்பு; கைவிட மாட்டார்!
கர்த்தரால் கூடும் களி,சமா தானம்!
விசுவா சிப்பாய்! உமைநே சிப்பார்!
விரும்பி அழைப்பாய்! நெருங்கி வருவார்!
கவிதை படித்தேன்! செவியவர் கொடுத்தார்!
புவியின் நெருக்கம் புழுக்கம் தடுத்தார்!
அவரின் மகிமை அறியச் செய்தார்!
உலகின் பொய்யை உதற வைத்தார்!

பத்தியில் அழைக்கச் சித்தமும் கொடுப்பார்!
கோபம் நீக்கிக் குணமும் தருவார்!
ஆபத்து எதுவும் அணுகா வண்ணம்
கோபம் போக்கிக் குளிர்ந்த கண்ணால்
நோக்குவார் நம்மை; நீக்குவார் வாதைகள்!
ஆக்கினை விடுப்பார்! அன்பொடும் கைகளில்
தூக்குவார்! கேள்விகள் தொடுத்தவர் அடைந்த
களிப்பை மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகம்
அளிப்பார்! அணைப்பார்! அமைதியைத் தருவார்!
நிம்மதி, சுகத்தொடு நீள்சமா தானம்
நம்மொடு தங்கும்; நாமும் உறக்கம்
செய்வோம்! இனியவர் சித்தமே
                        மெய்வழி ! வேறோர் உய்வழி இலையே!

தாவீதின் காலை மன்றாட்டு

நீதியின் அரசே! முன்வாரும்!
   நீரே எனக்கும் அருள்தாரும்!
வேதனை நெருக்கும் நாட்களிலே
   வேண்ட உதவி செய்தவரே!
சோதனை வந்து கதறிடுவேன்!
   சொல்கேட் டிடுவீர்! செவிசாய்ப்பீர்!
ஆதர வின்றிக் கைவிட்டால்,
   அடியேன் நீதிக் கென்செய்வேன்?                 1

பாதகம் செய்யும் மானிடரே!
  பலகா லம்நான் பார்த்தவனே!
சோதர ராக என்மாட்சி
  சொல்லிக் காத்து நிற்காமல்
தீதுகள் செய்தே இழுக்கெனக்குத்
  தேடித் தருவீர் ஏனோ?நீர்
சூதினைப் பொய்யை நாடுவதேன்!
   சூனியத் தின்பின் ஓடுவதேன்!                    2
 
என்னைத் தனக்கே அன்பனென
   ஏற்றுக் கொண்டார் ஆண்டவரும்!
முன்னர் முழங்கால் இட்டவனாய்
    முறையிட் டுள்ளேன் செவிசாய்ப்பார்!
தன்னுட் சினமும் கொள்ளாதீர்!
   தவிர்ப்பீர்! அமைதி காத்திடுவீர்!
‘மன்னா’ கொடுத்த ஆண்டவரை
   மனத்தால் நம்பித் தொழுவீரே!                  3

முறையாம் பலிகள் செலுத்திடுவீர்!
    முன்னோர்க்கு உதவிய நம்மிறைவன்
குறைகள் நீங்கக் கண்பார்ப்பார்!
    குறையா நிம்மதி கைவருமே!
நிறைவாய்த் திராட்சை, தானியங்கள்
    நீடித் திருந்த நாட்களினும்
குறைவில் லாத மகிழ்வுநமைக்
    கூடும் படிக்கே செய்திடுவார்!                   4

உறையும் அமைதி மனத்துள்ளே!
    உறக்கம் இனியும் தினமுண்டே!
இறைவன் நீதிக் கரசரென
    இருக்கின் றார்நாம் தனித்தில்லை!
முறையாய்ப் பாது காத்திடுவார்!
    முன்னமர்ந் தழைப்பீர்! கலங்காதீர்!
விரைவோம் ‘அப்ச லோம்’வருமுன்;
                          வேதத் தலைவன் துணையுண்டே!              5

சிலுவையில் வாழ்பவர்


 ‘சாவிகள்’ களைய வந்து
    சரித்திரம் விளக்கி  நின்று
சேவைகள் ஏற்க வன்றிச்
    செய்து,உயிர் தழைக்க வாழ்ந்து
‘பாவிகள் அழைத்துப் போகப்
    பரிவுடன் உயிரை விட்டே
ஆவியாய்த் தேற்றி நிற்பார்
    ஆவியுள் தூய ஆவி!           (1)

நோவுகள் நீங்கச் செய்து
    நொந்தவர் களிக்கப் பார்த்துக்
காவெனச் சிலுவை ஏறிக்
    காதலின் உயர்வு காட்டிப்
பாவிகள் பிழைக்கப் பாடு
    பட்டுயிர்த் தெழுந்த ஏசு
சாவினை வென்றெ ழுந்தார்!
    சரித்திரம் ஆகி வாழ்வார்!       (2)

                        (எழுசீர் விருத்தம்)
ஒருமுகம் ஓருரு ஓரிடம் இல்லா
    ஒருவனை உம்முள் தேடுவீர்!
திருமுகம் இரத்தம் வழியவே இறையடி,
                            திருடனைச் சேர்த்தவர் நாடுவீர்!
வெறும்,மொழி ஆறுதல் கொடுக்கலாம் ஆயின்
    விரைந்துத விடுங்கை மேலதாம்!
வருந்துயர் அறிந்தவ ராகவே சிலுவையில்
                            வாழ்பவர் அன்பினைப் பாடுவீர்!  (3)