Friday, August 26, 2011

தாவீதின் காலை மன்றாட்டு

நீதியின் அரசே! முன்வாரும்!
   நீரே எனக்கும் அருள்தாரும்!
வேதனை நெருக்கும் நாட்களிலே
   வேண்ட உதவி செய்தவரே!
சோதனை வந்து கதறிடுவேன்!
   சொல்கேட் டிடுவீர்! செவிசாய்ப்பீர்!
ஆதர வின்றிக் கைவிட்டால்,
   அடியேன் நீதிக் கென்செய்வேன்?                 1

பாதகம் செய்யும் மானிடரே!
  பலகா லம்நான் பார்த்தவனே!
சோதர ராக என்மாட்சி
  சொல்லிக் காத்து நிற்காமல்
தீதுகள் செய்தே இழுக்கெனக்குத்
  தேடித் தருவீர் ஏனோ?நீர்
சூதினைப் பொய்யை நாடுவதேன்!
   சூனியத் தின்பின் ஓடுவதேன்!                    2
 
என்னைத் தனக்கே அன்பனென
   ஏற்றுக் கொண்டார் ஆண்டவரும்!
முன்னர் முழங்கால் இட்டவனாய்
    முறையிட் டுள்ளேன் செவிசாய்ப்பார்!
தன்னுட் சினமும் கொள்ளாதீர்!
   தவிர்ப்பீர்! அமைதி காத்திடுவீர்!
‘மன்னா’ கொடுத்த ஆண்டவரை
   மனத்தால் நம்பித் தொழுவீரே!                  3

முறையாம் பலிகள் செலுத்திடுவீர்!
    முன்னோர்க்கு உதவிய நம்மிறைவன்
குறைகள் நீங்கக் கண்பார்ப்பார்!
    குறையா நிம்மதி கைவருமே!
நிறைவாய்த் திராட்சை, தானியங்கள்
    நீடித் திருந்த நாட்களினும்
குறைவில் லாத மகிழ்வுநமைக்
    கூடும் படிக்கே செய்திடுவார்!                   4

உறையும் அமைதி மனத்துள்ளே!
    உறக்கம் இனியும் தினமுண்டே!
இறைவன் நீதிக் கரசரென
    இருக்கின் றார்நாம் தனித்தில்லை!
முறையாய்ப் பாது காத்திடுவார்!
    முன்னமர்ந் தழைப்பீர்! கலங்காதீர்!
விரைவோம் ‘அப்ச லோம்’வருமுன்;
                          வேதத் தலைவன் துணையுண்டே!              5

No comments:

Post a Comment