நோய்களிலே அறியாமை நோயொ ழிந்து
நூற்றுக்கு நூற்றுவரும் படித்து வந்து
தாயகத்துத் தமிழரினம் முதன்மை எய்தத்
தனித்தலைவர், கருத்தமன மில்லா ‘ராசர்”
வாயார உணவிட்டு வழிசெய் தார்;பின்
வந்தவர்கள் செய்ததென்ன? உழவர் கூட
வாயார உண்பதற்கு வழியுண் டோ?நம்
‘வயற்புரட்சி’ உழவரையே உரமாக் கிற்றோ? 01
கால்முளைத்து நடந்ததுமே, கல்விச் சாலை
காட்டுகிறோம்; சரிதான்;இக் கல்வி கூட்டும்
‘சால்’களில்தான் களைநீக்கி உரமிட் டோமோ?
சந்து,பொந்து நிறைந்தயிடம் வயலு மாமோ?
நூல்களையே இடம்மாற்றும் சுமையுந் தோ,நாம்?
நோய்பரப்பும் இடம்,மருந்து மனையென் றாமோ?
சூல்பெருக்காப் பதர்விளைந்த பயன்தான் நம்மைச்
சுற்றிலுமிக் கேடுகளை வளர்க்கு தம்மா! 02
துறைதொறுமே புதுமைகளைத் தோற்று வித்துத்
‘தொழிற்புரட்சி’ வெடித்ததுவோ? மின்வெட் டின்று
பறைகொட்டிச் சிரிப்பதுவும் இதைப்பார்த் தாமோ?
பாம்பொத்த வரிசையில்லா இடமொன் றுண்டோ?
பிறைக்கைகள் ஏந்துகின்ற பிறப்பாய்த் தானே
பிறக்கின்றோம், இருக்கின்றோம், இறக்கின் றோநாம்!
சிறைச்சாலை நெரிசலையும் குறைக்கத் தானே,
சீர்மிகுந்த கட்டிடங்கள் திறந்துள் ளோம்,நாம்! 03
மீன்குஞ்சே மக்களெலாம்! வாக்குச் சீட்டால்
வெறிப்பாம்பின் வயிற்றுணவே! பதவி கொண்டே
தேனீக்க ளாம்மக்கள் வரிப்ப ணத்தைத்
திட்டமிட்டுச் சொத்தாக்கும் திருடர் தம்மை
ஏனென்று பகுந்தறிவோர் கேட்ட துண்டோ?
எம்மக்கள் நடுகல்லாய் இருக்கத் தானோ?
மான்குட்டி மக்களெலாம் வளரப் போமோ?
வளர்ந்தாலும் புலிகளுக்கே இரைதா னாமோ? 04
தொட்டிலிலே குழந்தையழும் பாலுக் காக!
தொடர்ந்ததற்குப் பின்னரழும் கல்விக் காக!
எட்டிவிட்டால் கல்லூரி இடங்கி டைக்க,
இலட்சங்கள் வேண்டியழும்; அதுவும் கூடக்
கிட்டிவிடப் பட்டத்தின் பின்னால் வேலை
கேட்டழுகை; தினக்கூலி கேட்டுப் பெற்றுக்
கட்டுபடி யாகிறதோ இலையோ வேண்டுங்
கலியாணத் திற்கழுகை தொடரும் அன்றோ? 05
‘எதிர்கால விடியலே!எம் வரலாற் றேட்டில்
இணையவந்த புதுவரியே!’ என்ற பேர்க்குப்
புதிதாக என்செய்தோம்? மற்று மிங்கே
பொறுப்பான திட்டங்கள் என்ன கண்டோம்?
கதிர்தோன்றி , நிலாத்தொன்றி, விண்மீன் தோன்றிக்
கண்டங்கள் தோன்றிடுமுன் தோன்றி வந்த
மதியார்ந்த குலமெனவே பலவாய்ப் பேசி
மயக்கத்தை கொடுத்தோம்;நம் மதிய ழிந்தோம்! 06
சாதியெனும் உடும்பெறிந்தும் உணர்வென் கின்ற
சாளரத்தின் உள்நுழைந்தும் திருட னைப்போல்
போதைகளாம் இலவசங்கள் புகட்டித் தூங்கும்
பொதுசனத்தின் கைப்பொருளாம் வாக்குச் சீட்டைச்
சேதமிலாது எடுத்தோடிக் கோட்டை பற்றிச்
செய்வதெலாம் மக்களுக்கே என்று காட்டி
மோதிடுவார் உடன்கூட்டுச் சேர்ந்து கொண்டும்
முழுக்கொள்ளை யிடுவார்தம் மூளை என்னே! 07
மனிதகுலக் குளத்துள்ளே தேளி மீன்கள்
மறையாமல் பெருகியதால் குளங்கள் ஏரி
இனியில்லை யெனும்படிக்கே வீடாய்ப் போச்சு!
எழுந்தமலை முடிகளுமே கொட்டிப் போச்சு!
இனிக்கின்ற சேதிகளோ, நாளி தழ்கள்
எகிறிவிழும் சத்தத்தில் பதறும் நெஞ்சம்!
புனிதரென ஆனோமோ? இலஞ்ச மின்றும்
பொய்த்ததுவோ? பொய்த்தூக்கம் போம்நாள் என்றோ? 08
இனியுமொரு விதிசெய்ய எழுவோம் நாமே!
இந்தவொரு தேர்தலிலே முயல்வோம் நாமே!
தனிமனித ஒழுக்கத்தில் விழுந்தோர் தம்மைத்
தவிர்த்திடுவோம்! ஒதுக்கிடுவோம்! கட்சி பாரோம்!
மனிதரெலாம் மனிதருக்கு மனித ராலே
மாண்புதரும் ஆட்சிதர வாக்க ளிப்போம்!
வனிதையரே! இளைஞரேநீர் விழித்து வாரும்!
வருங்காலம் புதுச்சரிதம் படைக்க நேரும்! 09
ஃ 0 ஃ