பட்டப் படிப்பு மாணவரே!
பள்ளி முடித்த தோழர்களே!
நட்டப் படுமிந் நாட்டினரின்
நலிவைப் போக்க எழுவீரே!
பட்டுச் சிறகு மனங்களையே
பலவண் ணத்துக் கொடிமீது
கட்டு விரித்துச் சாய்த்திடுவீர்!
கைகள் கொடுத்துத் தூக்கிடுவீர்! 01
நட்டப் பட்டோம் ஒற்றுமையில்
நாட்டம் இல்லா திருந்ததனால்;
கட்டப் பட்டோம் அந்நியரால்
கலந்து வாழத் தவறியதால்!
ஒட்டப் பெற்றொம் பின்பவரால்;
உணர்ந்தோ மில்லை அன்றும்நாம்!
வெட்டிப் பிரித்தார் இருநாடாய்
விட்டுப் பிரியும் முன்னாலே! 02
கெட்டுப் போக நினைப்போர்க்கும்
கிடைக்கும் வழிகள் ஆயிரமே!
ஒட்டுப் போட்டச் சட்டைபோல்
உடனே நாட்டை மொழிவாரித்
திட்டுக் கள்போல் பிரித்தோமே!
திரும்பப் பிரிவிற் குள்போக!
எட்டி நடக்க முடியாமல்
இழுக்கும் கால்கள் கொண்டோமே! 03
கொட்டிக் கிடக்கும் வழிகளினைக்
கொள்ளை யடிக்க நினைப்போர்முன்
பட்டி ஆடாய்ச் செல்லாமல்
பலதே சத்துப் பூமியிதில்
முட்டி மோதி முன்னேறும்
முயற்சி தூக்கும் ஒருநாடாய்
இட்டம் வைத்துச் சிதறாமல்
எழுந்து நடக்க முன்வாரும்! 04
மொழிகள் நதிகள் போன்றவையே!
முடக்கி வைக்க நினையாதீர்!
வழிகள் கூட்டி நமக்கவைகள்
வாய்க்கா லாக இருக்கட்டும்!
பழிகள் சேர்த்து நமை,மீண்டும்
பழங்குடி மக்கள் ஆக்காமல்
இழிவை நீக்கித் தெளிவுடனே
எழுந்து நடக்க உதவட்டும்! 05
கொழித்துக் கிடக்கும் நலங்களெலாம்
கூட்டுச் சொத்தாம்; இவைகளினை,
வழித்துக் கொண்டு சுயநலத்தை
வளர்க்க எண்ணி வருவோரின்
ஒளித்து மறைத்த உணர்வுகளை
ஓர்ந்து தெரிந்து தடுத்தெழுவே
விழிப்புக் கூட்டிப் படியுங்கள்!
வெறுப்பு நீங்கப் படியுங்கள்! 06
நாட்டு வளங்கள் நமக்காக!
நாமெல் லோரும் ஒன்றாகக்
கூட்டுப் பொறுப்பில் அவைகாப்போம்!
கொள்ளை யடித்து வெளிநாட்டில்
போட்டு வைப்பார் சொல்கேட்டுப்
பொதுநல மற்ற பிரிவினைக்குள்
மாட்டி யழிந்து போகாதீர்!
மகிழ்பா ரத்தை எழுப்பிடுவீர்! 07
< 0 >
No comments:
Post a Comment