Tuesday, December 6, 2011

உழைப்பவர் உயர்வு..அல்லது உழைப்பீர்! உயர்வீர்!




                வள்ளியம் எனுஞ்செ ருக்கு
    வாய்த்தவர் உழைக்கின் றோரே!
தள்ளினும் தள்ள வொண்ணா
      தகவவர் தகவே! அன்பின்
உள்ளமும் அவர்க்கே! செல்வ
      ஊற்றுமக் கைகள் தாமே!
அள்ளிநற் பூக்கள் தூவி
      அவரடி பணிவன் நானே!                                    

 சாதனைகள் எதனாலே சம்ப விக்கும்?
      சாட்சிசொல நினைப்போரே முன்னே வாரும்!
வேதனைகள் படுவதிலா? விளையாட் டாக
      வெறு[ம்]முயற்சி செய்வதிலா? விரும்பிச் செய்தோம்
ஆதலினல் என்பதிலா? அதிநூ லோர்கள்
      அறிவினிலே செயல்பட்டா? அதிட்ட தேவி
சீதனமாய்க் கொடுத்ததிலா? சிரமந் தாங்கிச்
      செய்தபெரும் உழைப்பாலே தானே யன்றோ?           

ஆண்டவர் தன்னைப் போற்ற
      ஆளிலா திருந்த நாளில்,
மாண்டதோர் ஞாலம் செய்து
      மனிதனை அதனுள் வைத்தார்!
வேண்டிய செய்து தந்து
      விளக்கினார் உழைப்பின் மாண்பை!
வேண்டுமோ விளக்க?, வித்தாய்
      விளங்குவார், உழைப்போர் சாட்சி !                     

சத்தியைப் போற்றிப் பாடும்
      சந்ததி உழைப்போர் கூட்டம்!
புத்தியைப் போற்றி நாட்டில்
      புதுமைகள் படைக்கும் கூட்டம்!
சித்தியைக் கையிற் கொண்டு
      சிறப்பவர் இவர்கள் கூட்டம்!
நத்தியே இவர்பின் செல்ல
      நமக்கினி உயர்வே கூட்டம்!                                  

                அன்பினில் கனிந்த பேர்கள்!
                    ஆண்மையில் நிறைந்த பேர்கள்!
                துன்புகண் டொதுங்கி டார்கள்!
                   தூங்கிடாக் கையி னார்கள்!
                இன்பமே கூட்டு வோர்கள்!
                   இவர்க்கிணை இல்லாப் பேர்கள்!
                முன்பு,தம் உழைப்பை வைத்து
                    மூவுல கெழுப்பும் ஆட்கள்!                                                             

               வீழ்ந்தாலும், பிறர்வீழக் காண மாட்டார்!
                  வீணருக்கும், செல்வருக்கும் அடிமை யாகார்!
               தாழ்ந்தாலும் பிறருயரத் தாங்கும் மேலர்!
                  தரமிழந்து போகாநல் லுழைப்பின் சீலர்!
               வாழ்ந்தாலும், பின்னாலும், வளமே நல்கி
                   வழிநடத்திப் போகின்ற வள்ளல், தாளர்!
                சூழ்ந்தார்முன் னாலு[ம்]முகம் சுளிக்கா அன்பர்!
                   சுற்றியுள்ள உயர்வுகளுக் கிவரே மூலர்!                                     

                 எங்கிருந்து வருமிந்த உழைப்பின் கூட்டம்?
                    எவர்கொடுப்பர் இவர்கூலி? என்போ ரேநான்
                 உங்களுக்குச் சொல்கின்றேன் ஒன்று : நேற்றை
                     உழைப்பாளி இன்றுமுத லாளி !' என்றும்
                 சங்கமிக்கும் செல்வமெலாம் உழைப்பின் முன்னே!
                    சாட்சிசொலும் சரித்திரமே! சமூகத் துள்ளே
                 உங்களுக்கும் உழைப்பொன்றே உயர்வுக் கான
                     உண்மைமிகும் அழைப்பாகும்! உழைப்பீர்! வெல்வீர்!             

உழைப்பின் உயர்வு: (குறள் பாக்கள்)



01.   உண்டால் அம்ம! உலகம், உழைப்பவர்
        கொண்டாடு மட்டும் குறித்து!                                                                  

02.  ஆளும் அரசுக்கும் ஆணி உழைப்பவர்;
       வீழும் அவரின்றி வேந்து!                                                                                

03.   சூழும் நலங்களே சொல்லாவோ? வாழும்
        உழைப்பே உயர்வுக் கழைப்பு!                                                                       

04.   அம்ம! அரிவை முயக்கினும் நன்றுகொல்!
        தம்மை உயர்த்தும் உழைப்பு!                                               

05.   பாடுற்றார் உண்டு பலரே; உழைப்பினால்
        கேடுற்றர் உண்டோ?சொல் கேட்டு!                                          

06.   அன்பும் அறமும் அமைந்தோர்க்கே நல்லுழைப்பின்
        இன்பும் பயனும் இயல்பு!                                                   

07.   உழைப்பெனும் ஊட்டினால் 1ஓரைந்தும் காப்பான்
        அழைப்பிலா வானோர் விருந்து !                                           

08.   உழைப்பே உயர்வுக் கழைப்பாம்! உணர்ந்து
        களிப்போம் களைப்பைக் களைந்து!                                          

09.   கோளில் உழைப்பைக் கொடுப்பவர் தாளினை
        நாளும் வணங்குவோம் நாம்!                                                

      [1. தான், தன்குடும்பம், தன்தொழிலகம், சமூகம், நாடு -என்ற ஐந்து]

உழைப்பு உயர்வுக்கு அழைப்பு -அல்லது- உழைக்கும் வர்க்கம்!



 ( வாசல் கவியரங்கக் கவிதை- )

வீணரைச் செல்வரை வீழ்ந்திவர் வணங்கிலர்!
ஆணவக் காரருக்கு அடிதரத் தயங்கிலர்!
கோணலில் உதவிகள் கொடுப்பதில் சுணங்கிலர்!
காணலில் இவர்களின் கைபடா நலங்களே!

சோர்விலும் தோழரைச் சுறுசுறுப்பு ஊட்டுவர்!
பேர்பெறும் படைப்புகள் பின்வரச் செல்பவர்!
ஆர்வமும், உழைப்பும் அமைதியும் நாடுவர்!
தேர்வடம் இவர்பின், தேசமுன் னேற்றமே!

வேட்ட உரிமைகள் மறுக்கப் படினும்
கேட்ட சலுகைகள் கிடைக்காப் போதும்,
கோட்டம் உழைப்பில் குறுக்கிட விட்டிலர்
பாட்டில் இவரைப் பாடியே மகிழடி!

சத்தியைப் பாடும் சந்ததி இவரடி!
புத்தியால் படைப்பர் புதுமைகள் இவரடி!
சித்தியின் கைகளால் சிறப்பவர் இவரடி!
நத்தியே பின்செல நமக்கும் உயர்வடி!

அன்பில் கனிந்தவர்! ஆண்மையில் நிறைந்தவர்!
துன்புகண் டொதுங்கார்! தூங்காக் கையினர்!
முன்புவைத் துழைப்பை மூவுல கெழுப்புவர்!
இன்பமும் இவர்பின்! எழுந்திநீ செல்லடி!

சாதனை இவர்க்குச் சம்பவம் ஆமடி!
வேதனை இவர்க்கு விளையாட் டாமடி!
சோதனை இவர்க்குச் சொர்க்கப் படியடி!
சீதனம் நலங்களே சிரித்து,பின் செல்லடி!

வீழினும் பிறரது வீழ்ச்சியை எண்ணிலர்!
தாழினும் பிறர்துயர் தாங்கிடும் மேலவர்!
சூழினும் சூழ்பவர் சுகத்தையே நாடுவர்!
வாழினோ உழைக்கும் வர்க்கமாய் வாழடி!

உழைப்பே பூமியில் உரிமைக் கழைப்பு!
உழைப்பே மனிதருள் உறவுக் கழைப்பு!
உழைப்பே மனிதரின் உயர்வுக் கழைப்பு!

ஃஃஃஃஃ

வழிநடத்தும் அடுத்த ஆண்டும்!




பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றப்
       பிறர்க்குதவி இறைத்தொண்டாய் ஆற்ற,
அறிவின்கண் அகங்காரம் நீக்க,
       ‘அடுத்தவரின்' பிழைமறந்து தூக்கத்
தெரிந்தவர்பால் கோடாமை ஊக்கித்
       தெளிந்தமதி யுள்ளவனாய் ஆக்கி,
வறியனெனை உயர்த்திடுவார் ஏசு!
       வாயார அவர்புகழைப் பேசு!          

செறிந்தபொருள் கவிதையிலே வேண்டு மென்றால்
       சிந்தையிலே அதுமுதலில் பிறக்க வேண்டும்!
எறிந்தபொருள் கீழிறங்கும் இலகு போல
       எடுத்தோத, அதுகாதில் இறங்க வேண்டும்!
அறிந்தவர்கள் மட்டுமிலா தனைத்துப் பேரும்
       அனுபவிக்கும் திறன்வேண்டும், ஆர்வம் வேண்டும்,
அறிந்தவனே! ஏசப்பா! அன்பின் ஊற்றே!
       அடியேனை வழிநடத்தும்டுத்த ஆண்டும்!