Friday, November 23, 2012

பேசுவேன் பேசிக்கொண்டே இருப்பேன்!

[ இது கவிஞர் திரு ரவுத்திரன் அவர்களின் 'என்செய்வீர் என்னை ' என்ற கவிதையைப் படித்த பொழுது மனதில் தோன்றியது -கருத்தாகப் பதிவும் செய்யப்பட்டது.] 



வாசத்தை அனுப்பி 
வாகை சூடும் 
வண்ண மலரே! 
உன் வண்டு நான் பேசுகிறேன்! 
உன் வண்ணத்தின் 
மெருகுநான் பேசுகிறேன்! 

உனது 
வண்ணமுகம் கிடைக்காததால்தான் 
மண்ணில் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்! 

நிமிர்ந்த உன் நெஞ்சின் 
கர்வப் புடைப்பைப் 
புடவைஎன்ன, 
எந்தத் துணி போர்த்தினாலும் 
அது 
என் கண்களைக் கவர்வதைத் 
தடுக்க முடியாது! 

அதன் உயரத்திலேயே 
மயங்கிக் கிடக்கும் நான் 
உனது உருவத்தை 
-
விசுவ ரூபத்தை- 
எங்கே பார்க்கப் போகிறேன்? 

உனது தமிழ்க் கற்பைத் 
தட்டிப் பறிக்க அல்ல 
தொட்டுத் தழுவத்தான் 
ஆசை! தவறா? 

உன்னை யாரடி! 
பணியச் சொன்னது? 
பணிய விரும்பாத நீதான் 
எனக்காக உனது பாதத்திலேயே 
பணிவை வைத்துள்ளாயே! 
அதற்கு நன்றி! அதுபோதும் எனக்கு! 

புத்தனைப் போல் 
நீ இருந்துவிட்டுப் போ! 
நான் புத்தன் அல்லவே! 

மமதையில் ஆடவில்லை நான்! 
உன் மகா போதையில் ஆடுகிறேன்! 

உன் கண்களின் நாணேற்று ! 
கைகளையே அம்புகளாக்கு! 
உன் அன்பின் வேகத்தை அதிகப்படுத்து! 

சமுத்திரமாகவே வா! 
புழுதி நான் 
ஏன் மிஞ்சவேண்டும்? 
உன்னுள் கரையக் 
காத்திருக்கிறேன்! 

மலையை 
மயிரால் கட்டி இழுக்கும் 
மடையனாகவே 
இருந்துவிட்டுப் போகிறேன்! 

கன்னித்தமிழ்க் கவிஞன் நான்! 
உன் கால்கள் 
காலங்கள் என்ன 
யுகங்களையும் தாண்டி நடக்கட்டும்! 
என் கவிதையைத் தாண்டி 
நடந்துவிடுவாயா? 
கடந்துவிடுவாயா? 

நான் பேசுவேன்! 
பேசிக்கொண்டே இருப்பேன்! 
என் சப்தங்கள் 
வெறும் சருகுகள் அல்ல! 
உன் மெருகுகள்! 
!!!!!!!!^349^!!!!!!!!!

குறுகுறுப் பாக்கள்-16


புள்ளிகளாய் நிற்கும் 
பெண்டிரைச் சுற்றி விட்டுப் 
புறப்பட்ட இடத்துக்கே 
வந்து சேரும் கோடுபோல் 
வீடு சேர்வேன்.. 
இதுதான் 
இளமைக் கோலமோ? 
!!!!!!!!!!!!!!!xx!!!!!!!!!!!!!xx!!!!!!!!!!!!
 
பல அபஸ்வரங்கள் 
கூட்டாக 
இசைக்கப் பட்டுவிட்டால் 
அது குடும்பமென்னும் 
கச்சேரி ஆகிவிடுமா..? 
!!!!!!!!!!!!!!!!!!!!xxx!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
பெண்ணே! 
உன் பேச்சை யாரும் 
கேட்பதில்லை என்றா வருந்துகிறாய்! 
நீ எது வேண்டுமானாலும் 
பேசிக்கொள்ளலாம் 
யாரும் கேட்கப் போவதில்லை என்பது 
உனக்குக் கொடுக்கப்பட்ட 
சுதந்திரம்..! 
!!!!!!!!!!!!!!! x !!!!!!!!!!!!!! x !!!!!!!!!!!!!!!!!!!
 
வாழ்க்கை என்பது 
ஒரு 
கூட்டுக் கொள்ளை முயற்சி ! 
ஒருவரை ஒருவர் 
கொள்ளையடித்துக்கொள்ள வேண்டும் 
ஒருவருக்கும் தெரியாமல்..! 
!!!!!!!!!!!!!!!!!!350 !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

குறுகுறுப்பாக்கள்-17


எழுதிச் செல்லும்           
விதியின்கை 
எழுதி எழுதி 
மேற்செல்லும்.. 
அழுதாலும், தொழுதாலும் 
உங்களுக்கு ஒன்றும் 
கிடைக்காது.. 
அதுதான் அரசியல் சட்டம்..! 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!xxx!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 

கழனி திருத்தி 
கதிர்கள் அறுத்து 
கழிந்த சுள்ளிகளால் 
அடுப்பை எரித்து 
அதில் உணவு செய்தோம்! 

சுள்ளிகள் மறைந்தன.. 
கலப்பையை எரித்துக் 
கஞ்சி உண்டோம் .. 
இன்று 

கைகளை எரிக்கின்றோம் 
எங்கள் அரசியல்வாதிகள் 
குளிர்காய்வதற்காக..! 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 

மீட்கப்பட்ட மக்களுக்காக 
வீடுகள் கட்டினோம் 
'
ரோடுகள்' போட்டோம்! 
இப்பொழுது 

மீட்கமுடியாத ஊழலில் 
அரசியல் செய்துகொண்டுள்ளோம்..! 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!xxx!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
எழும்பிக் கொண்டிருக்கின்றோம் 
எங்கோ ஒரு கிரகத்தில் 
எங்களுக்கென வீடு கட்ட.. 
உதிர்ந்துகொண்டிருக்கும் 
சிறகுகளைப் 
பூக்களாக எண்ணிக்கொண்டு.. 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!351!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

குறுகுறுப் பாக்கள் -18


எத்தனையோ பட்டங்கள் 
வாலறுந்து போய்விட்டன.. 
இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறான் 
என்மகன்.. 
மற்றுமொரு பட்டம் வாங்க.. 
தடுக்கமுடியாமல் 
நான் நடந்துகொண்டிருக்கின்றேன்.. 
வாக்குச் சாவடி நோக்கி.. 
!!!!!!!!!!!!!!!!!!!xxx !!!!!!!!!!!!!!!!!!!!!!
 

தராத மாநிலத்தோடு 
எதற்கு வீண் சண்டை.. 
தங்கியுள்ள குட்டைகளில் 
தண்ணீர்த் தாவரங்கள் வளர்ப்போம்.. 
தண்டிலிருந்து நீரேடுக்கலாம்.. 
தழைகளை உண்டு 
பசியாறலாம்.. 
!!!!!!!!!!!!!! xxx !!!!!!!!!!!!!!!!!!!!!!
 

உடைந்த கண்ணாடியில் 
முகம் பார்க்காதே! 
வீட்டுக்கு ஆகாது! 
மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள் 
மகளிடம்.. 
உடைந்துகொண்டிருக்கும் 
ஜனநாயகத்தால் 
நாட்டுக்காகுமோ ... 
கவிதைக்குப் 
பொருள்தேடிக் கொண்டிருப்பேன் நான் ! 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!352!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கவலையை விடுங்க!


எழுந்தவுடன் கேட்கவேண்டும் 
செய்திகள் 
இன்று என்ன கொடுக்கிறார்கள் எங்கு 
இலவசமாய் 
என்றறிய.. 

கால்கடுக்க நின்று வாங்கியதைக் 
காசாக்க வேண்டும் மீண்டும்.. 
களைப்பினைப் போக்க 
மருந்து வாங்க வேண்டும் 
'
சீசா'க்களில் ..! 
உற்சாகத்தைப் பருகி 
உறங்கிட வேண்டும் எங்காவது.. 

மனைவி மக்களைப் பற்றி 
யோசிக்கச் சொல்கிறீர்களா.. 
மாற்றுத் திட்டங்கள் 
அதற்கு அரசு வைத்திருக்கும்.. 
கவலையை விடுங்கண்ணே ! 
பின் எதற்காக ஜனநாயகம்.. 
எதற்காக ஓட்டு....! 
!!!!!!!!!!!!!!!!!!!! 353 !!!!!!!!!!!!!!!!