Thursday, December 22, 2011

ஏசுவைப் பாடெம்பாவாய்..!

1செங்கழுநீர் தான்மலரச் 2சிற்றாம்பல் வாய்மூடச்
செங்கற் பொடி,உடையார் செவ்வாய் துதிபாடப்
3பங்கமிலா நன்னெறியான் பாதம் பணிகின்றோம்!
அங்கமெலாம் மூடி அணியிழையே தூங்குதியோ?
வங்கம் கதிர்தாண்டி வந்துனையும் தானெழுப்ப
4இங்கிதமோ? எம்பெருமான் யேசுநம் பாவமறச்
5செங்குந்தம் உவாங்கிச் சிந்தியநீர் வான்சிவக்கும்!
இங்கெழுந்து வந்தவ் 6இரங்கலைப்பா டெம்பாவாய்!                  01

(1-சிவந்த குவளை மலர்; 2-சிறிய குமுத மலர்; 3-பாவமிலா;
 4-இனிமையோ; 5-இரத்தத்தால் சிவந்த ஈட்டி; 6-அருளுதலை;)

வேதப் பொருள்பாடி விண்ணிறங்கி வந்திங்குப்
பாதம் பதித்துற்ற பாடுகளை யாம்பாடி
7ஓதும் பொருள்கேளா உன்செவியும் வன்செவியோ?
போதும் உறக்கமிது! 8போதே  எழுந்திலையோ?
9வாதங் கடந்தவனின் 10வாட்டத்தில் நம்பாவத்
தீதும் கரைந்ததுபோல் 11தேய்மீன்கள் தாம்மறையும்!
சோதி அவரெழல்போல் சூரியனும் தானெழுவான்!
12பேதாய் அவர்புகழைப் பேசிப்ப டெம்பாவாய்!                              02

(7-சொல்லும்; 8-பொழுதே; 9-தர்க்கம்; 10-துன்பத்தில்
11-மறையும்விண்மீன்கள்;12-சிறுபெண்ணே! )

ஆதியில் தேவனாய், 13ஆர்த்தெழுந்த வார்த்தையாய்,
வேதமாய்ச் சோதியாய் விண்ணிறாங்கி வந்திங்கே
14ஏதமே போக்கும்,எம் ஏசுபிரான் பொற்கமலப்
பாதமே சேரநம் பாவங்கள் தீருமெனக்
கீதமே பாடினோம் 15கீர்த்திபல பேசினோம்!
பூதமே போற்துயிலும் 16பெற்றிதனை விட்டெழவே
பாதமே 17நோகுமோ? பஞ்சாணையுன் காதலோ?
18சீதமே நீக்கி,எமைச் சேர்ந்தேபா டெம்பாவாய்!                               03


(13-ஒலித்த;14-கேடுகள்;15-புகழ்ச்சிகள்;16-குணத்தை;
 17-வலிக்குமோ;18-உயிர்வேதனை;)

19பாசம் பழத்தின்மேற் பாவையவள் வைத்திறைவன்
20நேசம் இழந்தகதை நீயறிவாய்! என்னேஉன்
வேசமோ? 21பாம்பின்வாய் வீழவும் எண்ணினையோ?
ஈசன் இறைவனெம் ஏசுவின் பேர்பாடி
வாசலிடை வந்துள்ளோம் வந்துன் கடைதிறவாய்!
22தேசன் 23பரதீசில் தேர்ந்துனக்கும் ஓரிடத்தைப்
பாசமுடன் கேட்டுப் பரமனிடம் 24பெற்றசீர்
25 பூசை பலசெய்து புகழ்ந்தேபா டெம்பாவாய்!                                    04

(19-அன்பு; 20-நட்பு(ஆர்வம்);21-அரவமெனும் சாத்தான்;
22-ஒளிமயமானவன்;23-விண்ணுலகில்; 24-பெற்ற சிறப்பு;
25-ஆராதனை; போற்றிகள்;)

தன்னை நினைத்தும் தனக்காக வேவாழ்ந்தும்
என்ன கிடைத்தும் எதற்குமே நன்றிசொலார்
என்னே பிறவி எடுத்திட்டோம்? ஏன்வாழ்வோம்?
என்றே சலிப்பில் இயலாமல் கைகூப்பி,
முன்வந் தழுது முகம்பார்க்க எங்கேயோ
மின்ன வருமொளியின் மேலாய் விரைந்துவந்து
அன்னை தனிற்பரிந்து அன்பால் உதவிடுவான்
என்னேசு வின்கருணை ஏத்திடப்பா டெம்பாவாய்!                               05

சீவனையே அப்பமாய் உண்ணக் கொடுத்தாரத்
தேவனையே பாடித் திருமுழுக் காடிவர
ஆவலுடன் வந்தோமுன் 26ஆடிக் கதவருகே!
பாவமெலாம் தீர்க்கும் பரமனவன் பேர்பாடிக்
கூவியழு வார்குரலும் கீர்த்தனையும் கேட்டிலையோ?
சேவித் தவர்பாதம் சேர்ந்தோர்க்கு அருளேசு
சாவையும் போக்கிடுவார்! சார்மகிச்சி எண்ணிலையோ?
பாவாய் எழுந்துடனே பாடேலோர் எம்பாவாய்!                                     06

 (26-கண்ணாடி பதித்த)

வையத்து வாழ்வீர்காள்!நாமும்நம் 27பாவைக்குச்
செய்யும் கிரியைகளைக் கேளீரோ மைவிலகும்
வைகறையே 28தோன்றி 29மடிபோக்க நீராடி
மெய்யடியார் கீர்த்தனையில் மெல்ல நனைந்தவராய்ப்
பொய்யுரையோம் வாயால்; பிறர்பொருளை இச்சியோம்!
மெய்விற்கோம்! யேசுவிற்கே மெய்யாய்ப் பணிசெய்வோம்!
அய்யனவன் பேரை அகிலமெலாம் கூறிநாம்
உய்யுமாறு எம்மோடு உகந்தேபா டெம்பாவாய்!                                     07

(27-நோன்பு;விரதம்; 28-வெளிப்பட்டு; 29-சோம்பல், சோர்வு;)

கன்னம் சிவக்கக் 30களிமயக்கிற் கட்டிலின்மேற்
31சின்னம்போல்த் தூங்கும் சிறுகிளியே! 32சேணாட்டை
முன்னம் விடுத்தே முழுதும் நமக்காகக்
கன்னி வயிற்றுதித்தும் கற்பாறை மேற்சிலுவை
தன்னில் உயிர்மரித்தும் தானெழுந்த அற்புதத்தைப்
பன்னுவார் கூடியே பாடிடுவார்! கேட்டிலையோ?
இன்னும் உறக்கம் இனிக்குமோ? எங்கள்,இக்
கன்னல்த் தமிழும்தா லாட்டோசொல் எம்பாவாய்!                               08

(30-இன்ப; 31-சிறுமை; 32-விண்ணுலகை;)  


33ஆவடையில்த் தோன்றி அகிலம் 34புரந்திட்ட
தேவன் திருச்சுதனைத் தேடக் கிடைப்பவனை,
ஏவுவதற் கில்லாமல் ஏவல் தலையேற்றுப்
பாவம் நமதழியப் பாடுகள் பட்டவனைக்
35காவு படமரித்துக் காக்கும் இறைவித்தைக்
கூவிப் பறைசாற்றிக் கொண்டாடிப் பாடுகின்றோம் !
ஓவியம்போற் பஞ்சணைமேல் உன்னுறக்கம் ஒப்புவதோ?
தாவிவா! நீராடு! தமிழேபா டெம்பாவாய்!                                                  09

(33-மாட்டுத் தொழுவம்; 34-காத்திட்ட; 35-பலியாக;)


தானே மனிதனாய்த் தாழ்ந்தும் வருந்தியும்
ஊனை உயிரை உலகுய்யத் தந்தவனை,
வானும் நிலனும் வழுத்துமெய்த் தேவனைக்
கானமும் படிக் கரைந்துருகி எம்முடனே
ஏனையோர்  ஏத்திவர ஏனின்னும் தூங்குதியோ?
மானே! மணிக்கட்டில் மாயம் பிடித்துளதோ?
தானுங் கிறித்தவளோ? தம்பிரான் ஏசுபுகழ்
ஏனோர்க்கும் கேட்கவந்து 36இன்னேபா டெம்பாவாய்!                       10

( 36-இப்பொழுதே)
===                ===           ===          ===           ===          ===              ===