Thursday, October 20, 2011

பூச்சுடி வந்த நிலவு..! 1965


            

விண்தொட்டு நின்றகோ புரமே! என்னுள்
விளங்கிவர் கின்றநல் லுரமே!
பண்பட்ட நெஞ்சத்தின் எழிலே! நான்
பழகவர் கின்றநறும் பொழிலே!

பழிகாண முடியாத மணீயே எந்தன்
விழிகாண முடியாத அணியே!   
மொழிகாண முடியாத நினைவே! என்னை
முழுதாக்க வந்தகற் பனையே!

களிகாண முன்வந்த கனியே! யாரும்
காணாத பேரின்பச் சுனையே!
வழிகாண உதவிவரும் ஒளியே! பொங்கி
வழிகின்ற உள்ளத்தின் அளியே!

வாடுற்ற பயிருக்கு மழையே பொல்லா
வறுமைக்கு வாய்த்திட்ட தளையே!
தேடுற்று நிற்பாரின் இறையே நல்ல
தெளிவுற்ற பெரியோரின் பொறையே!

ஈடற்ற கலைஞானத் துறையே! மக்கள்
ஈடேறப் புகலுமரு மறையே!
நாடுற்று நானுள்ள சிறையே! இமை
நாட்டத்தின் கீழுள்ள அறையே!

 பேச்சோடு வருகின்ற ஒலியே! நெஞ்சப்
பேச்சாக வளர்கின்ற சிலையே!
மூச்சோடு பயில்கின்ற காற்றே! என்னுள்
மூண்டோடி வழிகின்ற ஊற்றே!

பூச்சூடி வருகின்ற நிலவே!ம் மென்மைப்
பூச்சோடு பொலிகின்ற கலையே!
தீச்சுடு பட்டதொரு சருகே! உன்னைத்
தினக்காண முடியாஎன் உருவே!

                       

அவளற்ற நான்..! (1965)




எழுத உதவா எழுதுகோல்! ஏரின்
உழுத்கு பயனில் உவர்மண்! முழுதுமே
காண உதவாத கண்ணாடி! கன்னிதனை
நாண மணக்காத நான்!

 முடியாத் தொடர்கதை! முற்றாத திங்கள்!
படியாத் துயர்க்கடல்! பாரில் விடியா
இரவு! மலைத்தேன் எறிந்த முடவன்!
பிறவும் இவையுமென் பேர்!

காரற்ற மேகம்! கலையற்ற வான்மதி!
நீரற்று நிற்கும் நெடுங்குளம்! தூரற்ற
சின்மரம்! ஓட்டைச் சிறுகலம்!; செந்திருவாள்
நன்மணம் கிட்டாத நான்!

சிதைபட்ட ஓவியம்! சீரற்ற சிற்பம்!
வதைப்பட்ட பல்லி! வகையாய்ப் பதிகெட்ட
பாவயாம்! இன்னும் பலவுமாம்! பேதையென்
பூவைநான் பெற்றிடாப் போது!

உடைந்த கருவி! உடுத்தொணா ஆடை!
குடைந்த மலை!கரும்பின் கோது! மிடைந்தே
இகழ்ந்ததலம்! துன்பம் இறங்குமிசை! வீணே
அகழ்ந்தநிலம் ஆமென் அகம்!

                       

இதயமே கேட்பாய் இது..! (அக்டோபர்..64)




மாவின் இளந்தளிரே! மாலைப் பொழுதலரும்
பூவின் புதுவுருவே! பூமகளே! நாவலதன்
தீங்கனியே! நீசென்ற தேதிமுதல் என்னுயிரும்
நீங்கிவரும் காணாய் நிதம்!.

முல்லை நகைமலர மொய்க்கின்ற வண்டாக
எல்லைக் குழையோ டிருவிழியும் புல்லவரும்
தோற்றம் இலையென்கத் துன்பவினைக்கு என்றனுயிர்
ஆற்றல் அறியா(து) அறி!.

எண்ணம் எனும்வானில், எந்தன் உயிர்வெளியில்
வண்ண நிலவாக வந்தவளே! கண்முன்
உதயமா காதே இளிப்பையேல், வாழேன்
இதயமே கேட்பாய் இது!

                       

நீந்தாத கடல்..! (நவம்பர்-63)




நீருண்ட மேகம்போல் நீண்ட கூந்தல்!
  நிறையகத்துக் கயலேபோல் மையுண் ண்கள்!
காருண்ட நிலவேபோல் காணும் நெற்றி!
  கதிரில்லாப் பகலோன்போற் காணும் பொட்டு!
சீருண்ட கடற்சிப்பி போலும் செவ்வாய்!
  சிரித்தாலோ முத்தாக வெட்டும் பற்கள்!
தேரொன்று வந்தாற்போல் தோன்றும் நங்கை
  தெவிட்டாத அமுதாமே தெரியின், அம்மா!

பூந்தாதின் நறுமணமோ! பொன்னோ! தேனோ!
  பூத்தமலர் இவள்முகமோ! புதுமை தானோ!
மாந்தாத கனியாமோ மங்கை கன்னம்!
  மயலுற்றேன் தருவாளோ இலையோ? இன்னும்
ஏந்தானோ இன்மீதே இந்தக் கோபம்?
  ஏங்குவதும் அறிகிலளோ, இரவில் நானும்?
நீந்தாத கடல்தனோ நங்கை காதல்?
  நீந்துமுனர் மடிவேனோ? நெறியும் ஈதோ?

                       

நம்பிக்கை தளராதே சங்:42


   
நீருக் கலையும் கலைமான்போல்,
   நிமலா! நெஞ்சும் கலங்கக்,கண்
நீரைக் குடித்துப் பகலிரவின்
   நினைப்பும் இன்றித் தவிப்பேனே!
வேரிற் கொட்டும் வெந்நீராய்
   வெஞ்சொல் மாந்தர் சொல்கின்றார்:
‘யாருன் கடவுள்? அவரெங்கே?
   யானென்  சொல்வேன்? செய்வேனோ?

 தெள்ளத் தெளிந்த நீர்போலும்
   தேவை அறிந்த தாய்போலும்
அள்ளித் தெளித்த பனிபோலும்
   அலையாய்த் தழுவும் அன்போனே!
வெள்ளி முளைக்கும் வேளையிலும்
   விடியா இரவுப் பொழுதிலுமே
உள்ளம் புழுங்கி அழுகின்றேன்!
   உம்மை நினைத்துத் தொழுகின்றேன்!
  
கறையில் லாத தூயோனே!
   கரையில் லாத அன்போனே!
துறையாய் இருந்து காப்போனே!
   துதிப்போர்க் கே,செவி சாய்ப்போனே!
மறைகள் காட்டி நடந்தோனே!
   மனிதர் உய்யப் பிறந்தோனே!
மறைந்தே கைவிட் டொளித்தாயோ?
   மாற்றார் கேலி பேசிடவோ?
  
நம்பிக் கைநான் கெடமாட்டேன்!
   நன்றி  மறந்து விடமாட்டேன்!
வெம்பித் தளர்ந்து வீழ்ந்துவிடேன்!,
   விரக்தி கொண்டு தாழ்ந்துவிடேன்!
எம்பி ரானும் நீரன்றோ!
   என்றும் வாழும் இறையன்றோ!
அம்ப ரத்தில் இருந்துமுகம்
   அடியேன் மேல்வைத்து அருள்வீரே!
  
யோர்தான், எர்மோன், மீசாரில்
   இருந்து கலங்கித் தவிக்கின்றேன்!
நீர்தான் எல்லாம் என்றுள்ளேன்!
   நெருங்கி வரக்காத் திருக்கின்றேன்!
சோர்வேன்! தளர்வேன்! என்றாலும்
   சொந்தம் கூடி உடன்வரவே
ஓர்நாள் உமதா லயத்துள்ளே
   உருகிப் பாடி வருவேனே!

நம்பி னார்க்கே அருள்கின்ற
   நதியே! கடலே! நறும்புனலே!
எம்பி ரானே! கற்பாறை,
   என்றென் வாழ்வைத் தாங்கிடுவோய்!
‘கம்பி காய்ச்சி என்புருவக்
   காயம் செய்தாற் போற்சொற்கள் 
அம்பில் இட்ட இரும்பாக
   அவற்றை அழிக்க வருவீரே!

நம்பிக் கைநான் கெடமாட்டேன்!
   நன்றி  மறந்து விடமாட்டேன்!
வெம்பித் தளர்ந்து வீழ்ந்துவிடேன்!,
   விரக்தி கொண்டு தாழ்ந்துவிடேன்!
எம்பி ரானும் நீரன்றோ!
   என்றும் வாழும் இறையன்றோ!
அம்ப ரத்தில் இருந்துமுகம்
   அடியேன் மேல்வைத்து அருள்வீரே!

       

கண்ணீரைத் தினங்குடித்துக் காத்து நிற்கிறேன்! உன்
காலடியில் நான்நடந்து சோர்ந்து நிற்கிறேன்!
தண்ணீரைத் தேடுகின்ற கலைமான் போலே உன்
தயவுக்கே இரவுபகல் தவித்து நிற்கிறேன்!!
வெண்ணீராய் எனக்குள்ளே பூத்து நிற்கிறேன்! நீ
விலகிடவே பிறரிகழப் பார்த்து நிற்கிறேன்!
மண்ணூறும் தோண்டிடவே! கண்டி ருக்கிறேன்! நீ
மறுத்துவிடின் வாழ்வதுபோல் மாண்டு நிற்கிறேன்!

                                 

நம்பிக்கை தளராதே



 
நம்பிக்கை தளராதே நன்னெஞ் சே!நீ
    நன்றிசொல்லிப் பாடிடவே மறந்தி டாதே!
நம்மீட்பர் கற்பாறை, நமது வாழ்வு!
   நம்மீது நாள்தோறும் பொழிவார் அன்பு!

காரிருளில் கண்ணீரைக் குடித்த போதும்,
   ‘காட்டிடுவாய் யாருனது கடவுள் என்று
கூரறுவாட் சொற்களுன்னைக் குத்தி னாலும்,
   கொடுமைகளை நினைத்துள்ளம் குன்றி டாதே!
யோர்தானை எர்மோனை மீசார் தன்னை
   யோசிப்பாய்! அவரன்பை எண்ணிப் பாடு!
சீர்செய்த அவருதவி சிந்தி! தேடு!
   சிதைகின்ற மனவுறுதி சேர்த்துக் கூட்டு!

நீர்தேடி அலைகின்ற கலைமான்போல
   நித்தமவர் புகழ்பாடும் நினைப்பை உன்னுள்
சேர்த்தெடுத்துக் கலங்காதே சேவி! பாடு!
   சிற்றலையைப் பேரலையும் விழுங்கு தல்போல்
நேர்த்தியுடன் அவர்வருவார் நீங்கும் துன்பம்!
   நிந்தைகளும் பிரிந்தோடும்! நேசர் சொன்ன
வார்த்தைகளை மறவாதே! வாக்கை நம்பு!
   வறண்டநிலம் செழிப்பாகும் வருகை உண்டு!   

நம்பிக்கை தளராதே நன்னெஞ் சே!நீ
   நன்றிசொல்லிப் பாடிடவே மறந்தி டாதே!
நம்மீட்பர் கற்பாறை, நமது வாழ்வு!
   நம்மீது நாள்தோறும் பொழிவார் அன்பு!


                     < 0 >

தயங்கிடாது உதவ வாரீர் ..!




மனைமலர் குடும்பத் தோடும்
       மகிழ்வுடன் படிக்கக் கூடும்!
நினைவுகள்  சிறந்த தாகும்!
       நிம்மதி எழுச்சி சேரும்!
கனவுகள் உயர்ந்து காணக்
       கைவரும் செயல்கள் யாவும்!
தினம்,இதில் வருப வற்றைத்
       தியானமே செய்யத் தோன்றும்!

சொல்லிலே விசுவா சம்,தான்
       சொற்பமும் இல்லார் தீண்டார்!
கல்லெனும் இதயம் மாறக்
       கருதிடார் கையில் ஏந்தார்!
நல்லதோர் போராட் டத்தை
       நாடிடார் திறக்க மாட்டார்!
இல்லறம் சிறக்க எண்ணும்
       எவருமே இதற்கு மாறே!

ஏங்குவார் ஏக்கம் தீர
       எடுத்துநீர் சொல்லல் ஆகும்,
தீங்கினை நோக்கிச் செல்வார்
       திரும்பிடச் செய்யக் கூடும்;
 நீங்களும் சந்தா கட்டி
       நெருங்கிய பேர்க்கும் காட்டித்
தாங்கிட அழைப்பேன்! உம்முள்
       தயங்கிடாது உதவ வாரீர்!

பிறந்தநாள் காணு வோர்க்கும்
       பெருமையால், அன்பால் வானில்
பறந்திடும் மணமக் கட்கும்,
       பழகியோர் மணநாள் கண்டு
சிறந்திடும் நன்னாள் அன்றும்
       செய்திடும் சிறப்பி னோடும்
மறந்திடாது இதற்குச் சந்தா
       வழங்கியே கொடுக்க வாரீர்!

                    

இதந்தரும் இனிய சுதந்திரம்..!




பார்த்து இரசித்திடு! படுத்து உறங்கிடு!
      பாடி எழுப்ப நினையாதே..!
கூர்த்த மதியினர் கோடியில் உள்ளனர் !
      கூவி யழைக்க முனையாதே!

ஆலைக் கள்ளில் அமோக வரும்படி;
      ஓலைக் கள்ளுக் குதைக்காதே!
சோலைக் குள்ளே சுவைக்கும் வண்டுகள்,
      சோதித்து மலரை ஒதுக்காதே!

சேர்ந்து நின்றிடு! செய்கை இன்றிரு!
      சேதம் கண்டு கொள்ளாதே!
ஊர்ந்து செல்பவர் உனைப்போல் பலருளர்!
      உதைத்துக் கொண்டு தள்ளாதே!

எங்கே இலவயம் அங்கே சென்றிடு!
      எவர்சொல் கேட்டும் துடிக்காதே!
இங்கே விதிவசம் இதுவே பரவசம்!
      ஏழையாய்த் தொடர்ந்திரு! வெடிக்காதே!

எதற்கினி உழைப்பும்! எமக்கிலை களைப்பும்!
      இதுதான் தேசிய மந்திரமே!
இதுவே சுகம்தரும், இனிய சுதந்திரம்!
      இதற்கும் மேலெது நிரந்தரமே!

(வாசல் கவியரங்கில் 01-08-2010-இல் வாசித்தது ..)


< 0 >