தேடும் பொருளும் தெரியாதே
தினமும் ஓடி இளைக்கின்றீர்!
ஊடும் துயரை இன்பமென
உம்முட் கூட்டித் திளைக்கின்றீர்!
கூடும் பொருளை உணராதே
குறிக்கோள் விற்றுப் பிழைக்கின்றீர்!
ஏடும் கையும் ஆகவேநீர்
இருந்த நாட்கள் மறந்தீரே!
விற்றுப் பிழைக்கத் தெரிந்தவராய்
விளங்கு கின்றீர் இந்நாளில்!
கற்றுப் பிழைக்க வந்தவராய்க்
கல்வி விற்க நினைக்கின்றீர்?
சுற்றுப் புறத்தை அவமாக்கும்
சுதந்தி ரத்தில் வாழ்கின்றீர்!
வெற்றுக் கவிதை கேட்பீரோ?
விளக்கை இருளும் மணந்திடுமோ?
பஞ்சம் தொலையப் பணம்தேடிப்
பறந்து திரியும் மானிடாரே!
கொஞ்சம் தமிழின் மேற்பற்றுக்
கொண்டு திரும்பிப் பாரீரோ?
செஞ்சொல் விரியும் தேன்சோலைச்
சபைகள் வந்து கேளீரோ?
அஞ்சல் எதற்கு? வந்தாலே,
அமுதம் பருகிச் செல்வீரே!
†
No comments:
Post a Comment