Monday, November 14, 2011

கண்ணுறங்கு மகளே! கண்ணுறங்கு..!


[முதலமைச்சர் பிறந்த நாளுக்கு ஏழைகளுக்கு 5 படி அரிசி அளிக்கப்படும்-செய்தி]

கண்ணுறங்கு மகளே!நீ
        கண்ணுறங்கு! கண்ணுறங்கு!
கஞ்சி யின்னும் வரவில்லை
       கண்ணுறங்கு! கண்ணுறங்கு!

அரசாணை வரவில்லை,
       அஞ்சுகமே கண்ணுறங்கு!
அதுமெல்லப் பிரசவிக்கும்!
       அதுவரைக்கும் கண்ணுறங்கு!

பஞ்சையென் வாழ்வினிலே
       பட்டுப்போல் வந்தவளே!
பஞ்சமிது பட்டுப்போம்
       நாள்வரலை கண்ணுறங்கு!

நெஞ்சுதைத்துப் பயனில்லை!
      நேசமணி ! கண்ணுறங்கு!
நெடுநாளைக் கனவிதுவும்
      நிசமாகும் கண்ணுறங்கு!

காரிருளை மையாக்கிக்
        கண்களிலே இட்டவளே!
நீராலே தரைநனைய
       நிலமகளும் தாங்காளே!

நீராடி அப்பனுமே
      நெடுங்கிடையாய்க் கிடக்கின்றான்!
போராடி அழவேண்டாம்!
      பொய்த்தூக்கம் அவன்கலையான்!

உன்பிறந்த நாளிதிலே
       உழக்கரிசி வீட்டிலிலை!
ஏன்பிறந்தாய் எனக்கேட்க
      என்மனசு தாளவில்லை!

எட்டுப்பட்டி ஊர்த்தலைவர்
       எடுக்கின்றார் பிறந்தநாள்!
கிட்ட,இதோ நாள்வருது!
       கிடைக்குமடி அரிசியுமே!

தட்டித் தவிடெடுப்பேன்!
       தரமான பாலிடுவேன்!
கட்டித் தங்கமேநான்
       கஞ்சியுமே தந்திடுவேன்!

கட்டிவெல்லம் இட்டுத்தாரேன்!
       கற்கண்டும் அதிலிட்டுக்
கட்டாயம் நான்தாரேன்!
       கரையாதே கண்ணுறங்கு!

காவி சுவர்விட்டுக்
        கழன்று விழுகுதடி!
ஆவி போவதுபோல்
        அழுவாதே பொறுத்திடடி!

துன்பம் பழகிக்கொள்!
        தூங்கிடவும் கற்றுக்கொள்!
அன்பே! இரத்தினமே!
        ஆருயிரே! கண்ணுறங்கு!

கண்ணுறங்கு மகளேநீ
          கண்ணுறங்கு! கண்ணுறங்கு!
கஞ்சி யிதோ வந்துவிடும்
          கண்ணுறங்கு! கண்ணுறங்கு!

                                < 0 >



இன்றைய பாமரன்..!


வறுமையெனும் கோட்டிற்குக் கீழே வாழ்வான்!
         வாழ்க்கையெனும் மேட்டிற்குப் படியாய் நிற்பான்!
பொறுமையெனும் கோட்டிற்குக் கீழே ஊர்வான்!
        போலிகளை விற்பதற்குச் சந்தை யாவான்!
உரிமையெனும் கம்பெடுத்தார் கையில் ஆடி,
        உண்பதற்கே அவர்விரித்த இலையாய் வீழ்வான்!

சாதியெனும் கோலத்தில் புள்ளி யாவான்!
        சாய்க்கடையில் நெளிகின்ற புழுவாய்ப் போனான்!
வாதியெனும் வாழ்க்கையின்முன் தோற்று நிற்பான்!
       வாக்குடையோர் பட்டியலில் வாழ்ந்தி றந்தான்!
சோதியெனும் தேசத்தின் சொத்தாய் நிற்பான்!
       சூழ்நிலையின் கைதியிவன் மவுனி யாவான்!


                                               < 0 >

சிரிப்பிலே எழுந்த கவிதை..!

வானம் சிரிக்கக் கண்டேன் -மழைநீர்
                  வந்தே விழுந்தது!
மேகம் சிரித்து நின்றது -கண்ணில்
               மின்னல் தெறித்தது!


நிலவு சிரித்து மறைந்தது -வின்மீன்கள்
               வானை நிறைத்தன!
கடலும் சிரித்துக் குதித்தது  -மீன்கள்
                கரையில் துள்ளின!
அலைகள் சிரித்து நகர்ந்தது -கரையில்
                அலவன் ஒளிந்தது!
மரங்கள் சிரித்து நின்றன -கிளையில்
                 மலர்கள் மணந்தன!


களவு சிரித்துக் கலந்தது -ஊருள்
             அலர்கள் பரந்தது!
உழைப்புச் சிரித்துக் களைத்தது -உடலில்
             வேர்வை பூத்தது!
குழந்தை சிரித்த போதோ -எதிரில்
              கடவுள் தெரிந்தது!


என்னவள் சிரித்து நகர்ந்தாள் -நெஞ்சில்
              ஏக்கம் பிறந்தது!
எட்டி நடந்து மறைந்தாள் -என்முன்
              பிரிவு சிரித்தது!
கவிஞன் சிரித்து நின்றான் -உமக்குக்
             கவிதை கிடைத்தது!
                                    < 0 >

வேடந்தாங்கல் பறவைகள் தானோ..?


திங்கள் வரினும் மங்கொளி தரினும்
எங்கணும் பகலெனும் பொங்கொளி நாட்டில்..
‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பிகள்
தங்கள் தங்கள் தனியுந்து ஏறித்
தங்கிடம் விட்டுத் தம்பணிக் கேகி
வேடந் தாங்கல் பறவைபோல்
கூடுவந்து அடையினும் குடும்பம் குடும்பமே!


                                          < 0 >

வானில் ஒரு நாடகம்..!



பரணில் ஒளிக்கப்பட்டப்
பதுக்கல்காரனின்
பணமூட்டையைப் போல,
ஒளிந்து ஒளிந்து நகரும்
திருடனைப்போல
அசைந்த்து மேகம்..


குனிந்து ஒளிந்திருக்கும்
காவலர்போல
ஒரு குன்று..

கல்லென்று அமரக்
‘கப்’பென்று பிடிபட்ட்த்
திருடனைப் போல
சிக்கியது மேகம்..!


கைபொருளை மீட்கும்
காவலரின் அடியும்
கதறும் திருடனின்
அலரலுமாக
மின்னலும் இடியும்..!


அழுது புலம்பும்
பொருளிழந்தவர் போல
அலைகடல்..

அறம் வாழ்ந்ததா!
மழை வீழ்ந்ததா?
இன்னும்
பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்..


           < 0 >

02/’89 அழிவைத் தவிர்! ஆக்கமே உயிர்..!


சிக்கலெனும் பணிகளினைத் தவிர்க்க எண்ணிச்
   சிறப்பான முடிவுகளைத் தவிர்க்க வேண்டாம்!
இக்கூலிக்கு இவ்வேலை, என்றே சொல்லி
   இயல்புதிய உத்திகளை மறுக்க வேண்டாம்!
தக்ககுறிக் கோளில்லா மனிதன் போலத்
   தான்,ஏதோ பணிசெய்வோம் என்று,இ ராதே!
அக்கரையுன் மேல்வைப்போர் விமர்சிப் பார்காண்!
   அதைப்புரிந்து நடந்திடுவாய்! அடக்கு கோபம்!                 01

வக்கணைகள் பேசாதே! வகுப்பு வாதம்
   வளரக்கை கொடுக்காதே! வறுமை ஒன்றே
இக்கொடுமை களுக்கெல்லாம் மூலம் என்றே
   எடுப்பாகப் பேசிநிற்க எண்ணா தே!நீ
தக்கதெனப் படுவதுசெய்! தளர்ந்தி டாதே!
   தளர்வாரை யும்,ஊக்கித் தாங்க எண்ணு!
பக்கபல மென்றவரைப் படைசேர்க் காதே!
   பகுத்தாள நினைத்துன்னுள் பதர்,ஆ காதே!                        02

செய்கின்ற பணிசிறக்கச் சிந்த னைசெய்!
   சேர்ந்துழைக்க மறுத்ததையே சிதைத்தி டாதே!
உய்கின்ற வழியின்றிப் போகும் வாழ்வும்!
   உப்பிட்ட கைகளையே ஒடித்தி டாதே!
கைசெய்தல் கைங்கரியம்! கடனும் அஃதே!
   கைகொடுக்க வருங்கூலி பெரிதென்று எண்ணி
‘மை’செய்யும் செய்கைகளில் மயங்கி டாதே!
   ’மாலை’தனை விரைந்தழைக்க முயன்றி டாதே!              03

கண்ணுக்கு மையெழுது! அழகும் பார்நீ!
   கைகளிலே மையெழுதிப் பழகி டாதே!
புண்ணுக்கு மருந்திடுக! புண்,ம றைத்துப்
   புரையோட விடுவதற்குத் துணைபோ காதே!
கண்ணோடு கண்சேரக் காணும் காட்சி!
   கண்ணிரண்டாய் நின்றாலிங் கேது காட்சி!
மண்ணுக்குள் போவதற்குப் போட்டி வேண்டாம்!
   மரணத்தின் தேவதைக்குத்  தரகன் வேண்டாம்!                    04

                                 < 0 >

தேர்தல் ‘ஹோலி’..!

           
ஒப்பனை வண்ணம் பூசி
         ஊரெலாம் ‘ஹோலி’ காட்டிச்
செப்பங்கள் பேசும் நாட்கள்
          சேருமித் தேர்தல் நாட்கள்!
‘அப்பங்கள்’ ‘நோன்புக் கஞ்சி’
         அனைவரும் உண்ணும் நாட்கள்!
குப்பங்கள் கோபு ரங்கள்
         கூடியே களிக்கும் நாட்கள்!                  01

தப்புகள் மறைக்கும் நாட்கள்!
        தவறுகள் மறையும் நாட்கள்!
ஒப்பந்தப் புள்ளிக் கார்ர்
         ஒன்றாகக் கூடும் நாட்கள்!
‘சுப்பனை’ச் சுக்கா னாக்கிச்
         ’சூஃபி’க்கள் ஒன்றாய்க் கூடிக்
கப்பலைத் தரையில் ஓட்டிக்
          காட்டிட முனையும் நாட்கள்!             02

எப்பக்கம் இழப்பென் பீரோ?
          என்றுமே மக்கள் பாலே!

                       < 0 >

அன்பு..!



அன்பெனில் பொறாமை யில்லை!
          அன்பெனில் பெருமை யில்லை!
அன்பெனில் இறுமாப் பில்லை!
          அன்பெனில் பேத மில்லை!
அன்பெனில் கோப மில்லை!
          அன்பெனில் சாப மில்லை!
அன்பெனில் ‘ஓரம்’ இல்லை!
          அன்பெனில் கோரம் இல்லை!                             01


அன்பெனில் நம்ப வேண்டும்!
          அன்பெனில் சகிப்பு வேண்டும்!
அன்பெனில் பொறுமை வேண்டும்!
          அன்பெனில் கருணை வேண்டும்!
அன்பெனில் நேர்மை வேண்டும்!
          அன்பெனில் நியாயம் வேண்டும்!
அன்பெனில் உண்மை வேண்டும்!
         அன்பெனில் மகிழ்ச்சி வேண்டும்!                       02


என்மொழி எதுவா னாலென்?
         என்பொருள் அன்பா கட்டும்!
என்பலம் எதுவா னாலென்?
          என்பலன் அன்பா கட்டும்!
என்கொடை எதுவா னாலென்?
          என்செயல் அன்பா கட்டும்!
என்குணம் எதுவா னால்என்?
          என்மணம் அன்பா கட்டும்!                                     03


                               < 0 >

எங்கும் போக வில்லை- மாமா



எங்கே போனது
அந்த விழிப்பு?
உருட்டி விழித்த அந்த விழிகள்
ஒளிந்து கொண்டதும் எங்கே..?

எங்கெ போனது
அந்தச் சிரிப்பு?
தீக்குச்சியைக் கிழித்தது போலத் தெறித்ததே!
இன்று முறிந்ததும் எங்கே?

எங்கே போனது
அந்தக் கலகலப்பு?
உருட்டிவிட்ட செம்பின் ஒலிகள்
உறங்குவதும் உண்மையோ? எங்கே?

எங்கே போனது
அந்தக் கோபம்?
’செர்ரிப் பழம்’போல் மூக்கில் நின்ற
சிகப்பு விளக்கும் அணைந்ததோ?
மிரட்டிய கண்களை
விரட்டிய குறும்பு
திரட்டிய சிரிப்பை
மூடிய முகத்துள்
தேடிடக் கிடைக்குமோ?
தேடலும் எங்ஙனோ?



எங்கும் போக வில்லை- மாமா
என்னுள்ளே தானே என்றும் இருக்கும்!
என்னுள்ளே தானே என்றும் இருக்கும்!


                                 < 0 >

நிலவைத் தொட்டது தமிழின்று..!



தமிழின்று புகழுற்றதே -அஃது
   தமிழரின் எண்ணம்போல் திகழ்வுற்றதே!
அமிழ்திங்கு நிலமுற்றதே! -சுற்றும்
    அகிலத்து மொழியெலாம் பலமற்றதே! (தமிழின்று..)

தமிழின்று நிலைபெற்றதே! -இன்று
   தமிழ்முன்னே மற்றவை நிலைகெட்டதே!
தமிழின்று பழிகெட்டதே! -அதைத்
   தாழ்த்திய நாவுகள் மொழியற்றதே!                       (தமிழின்று..)

எழுகதிர் தமிழொத்ததே -இனி
   இரவில்லை! குறைவில்லை! விதிசெத்ததே!
பழுதென்னும் சொல்விட்டதே! -இதன்
   பலனிங்கு பலர்நாவில் தேன்சொட்டுதே!             (தமிழின்று..)

தமிழின்று கடலுண்டதே! இனித்
   தவிக்காது தமிழின்று அடல்கொண்டதே!
தமிழ்ப்பாதம் தழுவுற்றுமே -கடல்
   தவற்றினுக் கழுதுதன் கரைநிற்குமே!                   (தமிழின்று..)

நிலவினைத் தமிழ்தொட்டதே! -வேற்று
   நிலமென்ன கிரகங்கள் கைநீட்டுதே!
*அலமங்கள் தாம்விட்டுமே -மக்கள்
   அகமகிழ் வார்ஒன்றி மேம்பட்டுமே!                      (தமிழின்று..)
                             *அலமங்கள்-துயரங்கள்
புத்தாண்டு நிலம்பார்க்குமே! தமிழ்
   பொதுமொழி எனப்பூமி வலம்பார்க்குமே!
புத்தாண்டு வான்பார்க்குமே! -தமிழ்
   பொய்க்காது நன்மைகள் தான்சேர்க்குமே!           (தமிழின்று..)

                                         < 0>

மக்கள் வலி, அரசியலார் வலிமை..!


தணல்நெருப்பாம் லஞ்சத்தில் குளித்துத் தானே
           தகதகென மினுங்குவராம் அலுவ லர்கள்!
மணங்கமழும் சந்தணம்போல், இவரைப் பூசி
            மக்களாட்சி நடத்துகிறார் கட்சிக் காரர்!
வணங்குகிற நிலைபெற்ற தலைவர் யாரும்
          ’வாங்குபவர்’ தமைப்பிடித்துத் தடுத்த துண்டோ?
கணம்தோறும் அவர்பயந்து வாங்கி னாலும்
            கவலையிலே வாழ்நாட்கள் கழியும் தானே!                 01

வியர்த்திவர்கள் சேர்க்கின்ற விளைச்சல் தம்மை
          வேனிலைப்போல் அரசியலார் கனியச் செய்து
வயிற்றினிலே பசியடக்கப் போட்டுக் கொள்ளும்
            வாய்ப்புண்டே? கட்சிகளின் வளர்ச்சி சாட்சி!
இயல்பான தடைகளினைப் பொறுப்பார் மக்கள்!
           இருந்தாலும் இவர்போலத் திருடித் தின்னும்
’வயலெலிகள்’ அறியாத உழவர்’ இங்கே
           வாழ்கின்றார் எனமறுக்கும் பெரியோர் உண்டோ?     02

நால்வருணக் கொடுமையைப்போல் இலஞ்சம் தன்னை
        நம்மிடையே அழிக்கவொரு பெரியார் இன்னும்
‘கால்பதித்து’ வரவில்லை! கட்சிக் கென்று
        ’காசடித்து’த் தேர்தலுக்குச் செலவு செய்வோர்
தோலுரித்துப் பார்ப்பானும் தோன்ற வில்லை!
         தொண்டென்றே செய்யவந்த ‘ஆண்ட வர்கள்’
வாலிபத்தில் சிறைசென்றும் பெரியோ ராக
         வசதியுடன் வாழ்வதுதான் வரலா றாமே!                             03

வாங்குபவர் கைகளிலும் வயிறி ருக்கும்!
          வருபசியாம் இலஞ்சமிலாது உழைப்பும் இல்லை!
தாங்குபவர் இவர்களுக்கும் இல்லை என்றால்
          தன்னாலிப் பாடுகளும் தவிர்ந்தி டாதோ?
ஏங்குகிறேன், ‘மக்களாட்சி’, ‘தேர்தல் என்னும்
           ஏலத்திற்கு’ ஏன்வந்தது  என்றே! ‘லஞ்சம்’
ஈங்கிருக்கும் மக்களுக்கு வலியே! மாற்றம்
          இங்குவர மறுப்பவர்க்கு வலிமை தானே!                             04

                                           < 0 >

குறும்பாக்கள்

              பாழும் கிணறு..!


வாழும் கிணற்றில் வந்துநீர் இறைக்க
நாளும் வருபவர் ஆயிரம் இருப்பர்..
பாழும் கிணற்றை வந்து
பார்ப்பவர் இல்லை; பார்த்து நடந்துகொள்!

                               < 0 >
             பொக்கைப் பாட்டு..

மாற்ற வேண்டும் என்ற எண்ணம்
                கல்வி கொடுக்குது..
   மாறி     விட்டால் என்ற பீதி
                மயக்கம் கொடுக்குது..
தேற்ற வந்த கைகள் போதை
                ஊற்றிக் கொடுக்குது..
    தேவை கண்டு கொண்டு வாய்க்கு
                அரிசி கொடுக்குது..
ஊற்றி வந்த வாய்கள் வாழ்த்தை
               ஓங்கி முழக்குது..
    உணர்வி ழந்த கைகள் தாமே
               ‘ஓட்டை’ அளிக்குது..
போற்றிப் பாடி ஓய்ந்த வாய்கள்
                போர்த்திப் படுக்குது..
     பொக்கைப் பாட்டுப் பாடும் என்னுள்
                பொறுமை வலிக்குது!

                       < 0 >

குறும்பாக்கள்

         சாந்தி உறங்குமிடம்..!


வன்முறை பெருகி வளருது நாட்டில்!
புதிய சக்திகள்! புதுப்புது உத்திகள்!
நிதம்நிதம் தேவை நெருக்கடி நிலைமை!
இதந்தரும் செய்தியோ இன்றும்
காந்தி சமாதியில் சாந்தி உறங்குது!
                               < 0 >

          ஒருதாரக் கணவன்..!

உன்னை விரும்பியபின்
உறக்கத்தை, மரணத்தை
எப்படித் தழுவுவேன்
இன்றும் நான்உன்
ஒருதாரக் கணவனே..!
                 < 0 >

          ஈசல்கள் பெண்கள்..!

கலியாண மழையில் பிறந்து
வரதட்சணைக்
கனலில் மடியும்
மலிவான ஈசல்கள்..!
                  < 0 >
          (10-11-11)  ஏனோ..?

உயிருள் ளவனாய் இருக்கும் போதும்
           உணர்வின் றிருக்கிறேன்!    -ஏதோ
           உலவித் திரிகின்றேன்!
தயிரின் உள்ளே தங்கிய நெய்யாய்த்
           தனித்து நிற்கிறேன்!   - ஏனோ
           தவித்தே வாழ்கிறேன்!
வயிற்றின் உள்ளே உணவாய் வந்தாய்
           வளத்தைப் பெறலில்லேன்!   - இன்னும்
           வாய்திறந் திருக்கின்றேன்!
பயிரிட் டவனே ஏனோ நீயும்
           பார்த்தே நிற்கிறாய்?    -தண்ணீர்
           பாய்ச்சா திருக்கிறாய்!
                                < 0 >

          ( 08/’2009)   தமிழர் இரத்தம்..

நீலத் திரைக்கடல் ஓரம் நின்றே
நித்தம் தவம்செய் குமரிப் பெண்ணே!
காலைத் தழுவுதே தமிழர் இரத்தம்
கண்கள் திறக்க மறுப்ப தும்,ஏன்?
                                 < 0 >