Tuesday, January 24, 2012

தூங்கும் புலி..!


வெட்டிப் பேச்சு வீணருக் குள்ளே
    வீரம் இல்லை வெறுமையடி!
தட்டிக் கேட்கும் கைகள் உள்ளே
    தாய்மை காட்டும், தடங்களடி!
விட்டுக் கொடுக்கும் மனத்துக் குள்ளே
    வீரம் இருந்து வலிமறைக்கும்!
தொட்டுப் பார்க்க அதனுள் தானே
    தூங்கும் அகிம்சைப் புலிமுறைக்கும் !

தூங்கும் போது காண்பது கனவா?
    தூக்க மின்றிக் காண்பது கனவு!
ஏங்கு கின்ற ஏக்கமா கனவு?
    ஏற்ற செயலை முடிப்பது கனவு!
           


எவர்க்குக் கவிதை எழுதுகிறேன்!



தமிழன் என்ற நினைப்புடையோர்
   தமிழின் உயர்வில் முனைப்புடையோர்
அமிழான் தமிழன் எனச்சொல்வோர்
   அழகிய தமிழில் மனமிழப்போர்
கமழும் தமிழின் கனமறிவோர்
   கருத்தில் அதனைத் தினமுடையோர்
இமிழ்நீர் உலகில் மிகப்பெரியோர்!
   இவர்க்கே கவிதை எழுதுகிறேன்!

அச்சம் தன்னை விலக்கிவிடு!
   அஞ்சாமை நெஞ்சில் விதைத்துவிடு !
துச்சம் எனத்துயர் ஒதுக்கிவிடு!
   துணிவைச் செயலில் தூக்கியெடு!
கொச்சைப் பேச்சை நீக்கிவிடு!
   குழந்தை மனத்தை ஊக்கிவிடு!
பிச்சை வாழ்க்கை வெறுத்துவிடு!
   பின்னும் அவர்க்கே உதவிவிடு!

துணிவை வாழ்வில் துணையாக்கு!
   துன்பம் தடுக்கும் அணையாக்கு!
துணிவைச் செயல்களின் உரமாக்கு!
   தொடரும் பயன்களைப் பிறர்க்காக்கு!

அன்போ தென்றல் தாலாட்டு!
    அடிக்கும் புயல்முன் துணிவேற்று!
தென்போ டிருக்க விளையாட்டு!
  திறமை விளங்க துணிவாட்டு!

பயில்கின்றேன்



தொடுவானம் போலிருக்கும் சிலரின் நெஞ்சம்!
தொட்டுவிடப் போனாலோ தொலைவே மிஞ்சும்
எடுப்பான இவ்வரிகள் எவர்கைத் தஞ்சம்?
எழுதியவர் அய்யாறு வாசு தேவன்!
மிடுக்காக இதையெடுத்து வேழ வேந்தர்
மேற்கோளாய்ச் சொல்லிடுவார்! மீண்டும் மீண்டும்
படிக்காதார் யாருண்டு? படித்துத் தானே
பயில்கின்றேன் தொடுவானக் கவிதை இங்கு!

அவையடக்கம்!


தரிசு நிலத்தை உழுதுழுதே
தவிக்கும் ஏழை விவசாயி!
பரிசுப் பொருள்கள் பாராதே
பாடிக் களிக்கும் பாட்டாளீ!
முரசுக் கைகள் கேளாதே
மூடி சுமக்கும் எழுத்தாணி!
சிரசில் நிற்க முடியாமல்
சிந்தி வீழும் ஒருதூசி!

தரிச னங்கள் கிட்டாதே
தரைமேல் ஆடும் பூசாரி!
கரிச னங்கள் இல்லார்க்கும்
கைப்பூண் மாட்டும் ஆசாரி!
அரச ராகக் கவியோச்சும்
அனைவ ருக்கும் அனுசாரி!
பரிச லாலே தமிழ்க்கடலைப்
பாடிக் கடக்கும் ஒருகாரி!