Friday, December 23, 2011

அன்பால் கூடி ஒன்றாய் வாழ்வோம்..!

உன்னுள் இருக்கும் திறமைகள் தம்மை
        உணர்ந்து பெருக்க வேண்டும்!
உன்னை மட்டும் உயர்த்த எண்ணி
       உழைத்தல் தவிர்க்க வேண்டும்!
தன்னை மட்டும் வளர்ப்பதை நல்ல
       தகப்பன் விரும்ப மாட்டார்!
தன்னோடு உலகைத் தாங்கும் செயலைத்
       தலைவன் வெறுக்க மாட்டார்!                                    01

கள்ளமும் கபடும் உழைப்பிற் காட்டிக்
         கைத்திறன் அழிக்காதே!
பள்ளமும் மேடும் பார்த்திட மாறும்,
         படைத்தவன் விளையாட்டே!
உள்ளதைப் பெருக்கி உலகுக்குக் கொடுக்க
         உண்மையில் மறவாதே!
தள்ளியும் சேர்த்தும் வைப்பவன் கைகளில்
         தண்டனை தப்பாதே!                                                    02

உலகுக் காக வாழ்வதை விரும்பு!
          உனக்கென வாழாதே!
கலகக் காரக் கைகளில் உன்னைக்
           கருவியென் றாக்காதே!
பலவகைத் தாலந் துகளின் நல்ல
            பலன்களை மறுக்காதே!
பலனைக் கேட்டு வருவார் கர்த்தர்;
            பயம்,உனைக் காவாதே!                                          03

பின்னால் எல்லாம் விட்டே போவோம்
            பிறருக்கு ஈயாப் போதும்!
உன்பால் ஏதும் ஒட்டாது ஓடும்!
            உறவும் கைவிட்டு ஓடும்!
தன்னால் ஏதும் வந்த தில்லை!
            தந்தவை கர்த்தர் ஈவே!
ஆன்பால் கூடி ஒன்றாய் வாழ்வோம்!
            அவருள் உண்டும் வாழ்வே!                                  04
                                   <0>     

மீண்டும் வருவார் கர்த்தர்..!

கட்டை மீறிக் கனியை உண்ணக்
                 கண்டனம் செய்தார் என்றாலும்
கட்டிக் கொள்ள உடையைத் தந்து
                 கருணை செய்தவர் கர்த்தரே!

வெட்டிக் கொன்றான் ‘கேயீன்’ தன்னை,
                  வெளியில் அலைய விடுமுன்னர்;
பொட்டில் குறியைப் போட்டுத் தந்தே
                  பாது காத்தவர் கர்த்தரே!

ஏனிம் மனிதரைப் படைத்தோம் என்றே
                 எண்ணி நீரால் உலகழிக்கத்
தானே நினைத்தும் ‘நோவா’ மூலம்
                 தந்தார் தோணி கர்த்தரே!

வானை நிலனைப் பாலவாம் உயிரை
                 வஞ்சித்து அழிக்கும் மானிடரைத்
தானே மீண்டும் தட்டிக் கேட்கத்
                தரணியில் வருவார் கர்த்தரே!
                                      <0>

முன்னிலும் புதிய ஆண்டு தாரும்..!

காலங்கள் தோறும் கனமழை வந்து
          களிப்புக் கூட வேண்டும்               -இறைவா
          கனிவு சேர்க்க வேண்டும்.
ஓலங்கள் மறி ஒற்றுமை தேறி
          உதவி வாழ வேண்டும்                  -இறைவா
          உந்தன் ஆசி வேண்டும்!

ஒப்பனை இல்லா உணர்வுகள் ஒன்றி
          உயிர்கள் களிக்க வேண்டும்       -இறைவா
          உலகு செழிக்க வேண்டும்!
சொப்பன மில்லா  சுவர்க்கமும் இங்கே
          சுயத்தில் தொடங்க வேண்டும்  -இறைவா
          சுற்றிப் பெருக வேண்டும்!

நாடி ஓடியே நல்ல செல்வமே
           நாளும் சேர்க்க வேண்டும்          -இறைவா
           நலிவு போக்க வேண்டும்!
பாடி ஆடியே பரமன் உன்முனே
           படையல் போட வேண்டும்!       -இறைவா
           பகிர்ந்து உண்ண வேண்டும்!

தன்னை உணார்ந்து தவறுகள் போக்கத்
           தயவு செய்ய வேண்டும்!               -இறைவா
           தடைகள் நீக்க வேண்டும்!
முன்னிலும் புதிய ஆண்டினை எங்கள்
            முன்பு கூட்ட வேண்டும்!               -இறைவா
            முழுமை யூட்ட வேண்டும்!

                                        <0>