Friday, December 23, 2011

அன்பால் கூடி ஒன்றாய் வாழ்வோம்..!

உன்னுள் இருக்கும் திறமைகள் தம்மை
        உணர்ந்து பெருக்க வேண்டும்!
உன்னை மட்டும் உயர்த்த எண்ணி
       உழைத்தல் தவிர்க்க வேண்டும்!
தன்னை மட்டும் வளர்ப்பதை நல்ல
       தகப்பன் விரும்ப மாட்டார்!
தன்னோடு உலகைத் தாங்கும் செயலைத்
       தலைவன் வெறுக்க மாட்டார்!                                    01

கள்ளமும் கபடும் உழைப்பிற் காட்டிக்
         கைத்திறன் அழிக்காதே!
பள்ளமும் மேடும் பார்த்திட மாறும்,
         படைத்தவன் விளையாட்டே!
உள்ளதைப் பெருக்கி உலகுக்குக் கொடுக்க
         உண்மையில் மறவாதே!
தள்ளியும் சேர்த்தும் வைப்பவன் கைகளில்
         தண்டனை தப்பாதே!                                                    02

உலகுக் காக வாழ்வதை விரும்பு!
          உனக்கென வாழாதே!
கலகக் காரக் கைகளில் உன்னைக்
           கருவியென் றாக்காதே!
பலவகைத் தாலந் துகளின் நல்ல
            பலன்களை மறுக்காதே!
பலனைக் கேட்டு வருவார் கர்த்தர்;
            பயம்,உனைக் காவாதே!                                          03

பின்னால் எல்லாம் விட்டே போவோம்
            பிறருக்கு ஈயாப் போதும்!
உன்பால் ஏதும் ஒட்டாது ஓடும்!
            உறவும் கைவிட்டு ஓடும்!
தன்னால் ஏதும் வந்த தில்லை!
            தந்தவை கர்த்தர் ஈவே!
ஆன்பால் கூடி ஒன்றாய் வாழ்வோம்!
            அவருள் உண்டும் வாழ்வே!                                  04
                                   <0>     

No comments:

Post a Comment