Sunday, October 30, 2011

இன்னுமொரு மொட்டை..!


கூடி அணிசேர்த்துக் கொள்ளையிட்ட நாட்களிலே
நாடி எமையணுகி, நல்லபல கிடைக்காமல்
வாடி மனஞ்சலித்து வாரறுந்த செருப்புடனே
ஓடி ஒதுங்கியவாக் காளர்களே! ஒருசெய்தி:


“இந்தியத் திருப்பதியில் இன்னுமொரு மொட்டையிட
வந்துளது தேர்தலுமே! வாக்குறுதி இலவசமே!


                                                    †

மின்வெட்டு..ஒரு போர்க்காலம்..! (06/2010)



01. அந்திமகள் மல்லிகையின் மணத்தை வீசி
                       ஆதவனைக் கீழ்சாய்த்துத் தானெ ழுந்தாள்!
      பந்துநிலா முகங்குன்றிப் பாதி யானாள்!
                      பறக்குமொரு முகில்பிடித்து முகம்ம றைத்தாள்!
     சந்தடிசெய் யாதுகொசுப் படைம றைந்து
                      சார்ந்திருந்த இலைக்கூடம் விட்டெ ழும்பும்!
     முந்துவிமா னப்படைபோல் முனைந்து தாக்கும்!
                       மூடியவீட் டுள்மனிதர் பதுங்கிக் கொள்வர்!
     அந்தவொரு வேளையினை ஆமோ தித்தே
                       அரசெங்கள் விளக்குகளை அணைத்துப் போடும்!
     வந்துதித்த மின்வெட்டால் போராட் டம்தான்!
                       வாய்த்தயிந்த நேரமொரு போர்க்கா லம்தான்!
                                   †




அந்தி சாயும் நேரம் ..! [1986]


01. அந்தி சாயும் நேரம் -எந்தன்
                 ஆவி போகும் தூரம்!
      வந்து நின்று நீயும் -காதல்
                 வார்த்தை சொல்லப் போமோ?

02. கூடி வாழ்ந்த நாட்கள்; -அன்பைக்
                கொடுத்து மகிழ்ந்த நாட்கள்;
     வாடி நின்ற நாட்கள் -தேவை
               வளர்ந்து நின்ற நாட்கள்
     ஓடிச் சென்ற போதும் -அந்நாள்
               உணர்வி ழந்த நாட்கள்;
     தேடி வந்து நீயும் -இன்றுத்
                திரும்பக் கூட்டு வாயோ?

03. இளமை தந்த மோகம் -புதிய
                  இணக்கம் தந்த வேகம்
      கழியும் போது கூடக் -கண்கள்
                  காண மறுத்த நாட்கள்
     அழகுப் பிள்ளை ராகம் -பின்னர்
                அதுந டந்த வேகம்
     பழகிக் கண்ட இன்பம் -மீண்டும்
               படித்துக் காட்டு வாயோ?

04. பள்ளி சென்ற பிள்ளை -வந்து
              படித்த வற்றைச் சொல்லி
     அள்ளி அள்ளித் தந்த -கேள்வி
             அணைக டந்தும் ஓட
     எள்ளி, வியர்த்துத் தள்ளி -மீண்டும்
            இரவில் நமக்குள் பேசித்
    துள்ளி மகிழ்ந்த நாட்கள் -இன்னும்
            தொடரச் சொல்லு வாயோ?

05. துள்ளி வளர்ந்த பிள்ளை -தன்னுள்
              துடுக்கும் அடங்கி நின்றாள்;
     தள்ளி ஒதுங்கிச் செல்வாள்; -வானைத்

            தரையைப் பார்த்துப் பாடி
     உள்ளுக் குள்ளே மகிழ -நாமும்
            ஒளிந்து மறைந்து கண்டோம்!
     புள்ளி வைத்த நிலையில் -இன்று
            புறத்தில் கிடக்கின் றேனே!


                             அந்தி சாயும் நேரம் -எந்தன்
                                   ஆவி போகும் தூரம்!
                             வந்து நின்று நீயும் -காதல்
                                    வார்த்தை சொல்லப் போமோ?
                                                       
                                                     †

காமமும் காதலும்..!


மின்னிருக்கும் எண்ணுகையில்! மிகுந்திருக்கும் தனிமைதனில்!
            மெல்ல வந்து,
முன்னிருக்க விட்டாலோ மூவுலகும் மறைத்துவிடும்!
            முளைத்து விட்டால்
பின்னிருக்கும் விளைவெண்ணிப் பேசுகின்ற அறிவினையும்
            பிழைசெய் விக்கும்!
தன்னிருப்பில் களைபோலத் தான்தோன்றித் துளிர்க்கின்ற
            தன்மைக்  காமம்!                                                          01

கண்பார்க்கக் கைசாடை காட்ட, நெஞ்சில்
          கனலாகத் தனிமைநிலை காண, அஞ்சி
மண்பார்க்க, மற்றெவரும் உண்டோ? என்ற
          மருள்பார்க்கக், கண்ணொடுகண் மீண்டும் நோக்க,
விண்பார்க்க அதிசயிக்கும் மனித ரைப்போல்
          விருந்தாக நிற்பவர்க்கும் விருந்தாய் நின்றே
எண்பார்க்க முடியாத கற்ப னையில்
          இருவரையும் மாட்டிவிடும் காதல் தன்மை!! 02

                                              †

பொங்கல் !

திங்கள்தன் முகமும் நாணித்
     தென்பட மறுத்து, மேலைக்
கங்குலுள் புகுந்து கொள்ளக்
     கறவைகள் கறங்கப் புட்கள்
அங்குமிங் காக ஓடி
    ஆர்ப்பர வங்கள் செய்யத்
தங்களில் பொங்கல் காணத்
     தடபுடல் செய்வர் பெண்டிர்!                                                        01

அஞ்ஞான இருளை நீக்கி
     அவனிமேல் தொன்று கின்ற
மெஞ்ஞான உருவே போன்று,
     மெல்லோலி புட்கள் வேதம்
செய்ஞான உருவோர் போலச்
     செய்திடும் அந்த வேளைத்
தைஞ்ஞான மகளோடு இந்தத்
     தரணிமேல் கதிரும் தோன்றும்!                                                02

மீனன அரிசி வெந்து
    மேல்வரு கின்ற தான
பால்நிற நுறைபோல் வந்து
    பரிதியும் தொன்றி நிற்பான்!
வானிடை ஓடி யாடி
    வருத்தமில் லாது புட்கள்
தானியப் பொங்கல் இட்ட
    தன்மைபோல் உள்ள தம்மா!                                                      03


அப்பொழுது


நன்கலத் தரிசி பொங்க,
     நகை,முகத் தட்டில் பொங்க,
மென்னொளி வானில் பொங்க,
     மேதினி இன்பம் பொங்க,
இன்மொழி நெஞ்சுள் பொங்க,
     இன்தமிழ் காதில் பொங்க
நன்மைகள் மலிந்து பொங்க
      நாட்டுளே பொங்கும் பொங்கல்!                                             04


அந்நியர் படைகள் பொங்க
     ஆத்திரம் நெஞ்சுள் பொங்கத்
தன்னுளே பொங்கு வார்போல்
     தணலதும் அடுப்பில் பொங்க
மின்னிடும் பானக் குள்ளே
     மேல்வரும் அரிசி பொங்கும்!
அந்நிலை அடங்கத் தானே
     அமைதியின் சுவையும் பொங்கும்!                                        05


இன்பமும் அறனும் பொங்க
     ஏதுவாம் கல்வி பொங்க
வன்பருள் அறிவு பொங்க,
     வரிப்பணம் போல இன்றி
அன்பருள் அருளும் பொங்க
     அமைதியும் வளனும் பொங்க
முன்பொரு நாளும் காணா
     முறையினில் பொங்கும் பொங்கல்!                                     06

                           [வேறு]


செந்நெல் வளம்பொங்கச் செல்வத் திரள்பொங்கக்
கன்னல் தமிழ்போல் களிபொங்க -நன்மை
எழில்பொங்க, இன்ப இசைபொங்க எங்கும்
தொழில்பொங்கப் பொங்கலே பொங்கு!                                  07


ஏறிப் பருத்தும் எழிலார்ந்தும் மேல்வந்து
சீறும் நுரையடங்கச் செய்வளைபோல் -ஊரில்
விலையேற்றம் போக்கி விளைவேற்றம் கூட்டி
நிலையேற்றப் பொங்கலே பொங்கு!                                        08


‘எம்பால் எமர்பால் இடரறுக’ என்பதுபோல்
என்பால் எழுகின்ற எண்ணங்கள் -உன்பால்
வழிவதுபோல் நீங்கி வளரட்டும் பாரில்
பழியேதும் இல்லாத பண்பு!.                                                         09


                                                †

[மொழிபெயர்ப்புக் கவிதை..]BEYOND THE REACH OF TIME அழியாப்பெயர்


மூலம்     
I wrote my name upon the sand
And trusted it would stand for aye ;
But soon the refluent sea
Had washed my feeble lines away.
I carved my name upon the wood,
And after years returned again;
I missed the shadow of the tree
That stretched of old upon the plain.

To solid marble next my name
I gave as a perprtual trust;
An earthquake rent it to its base
And now it lies overlaid with dust;

All these have failed; in wiser mood
I turn and ask myself what then?
If I would have my name endure
I will write it on the hearts of men;
In charecters of living light
From kindly words and actions wrought
And these beyond the reach of time
shall live immortal as my thought!.

[பைபிள் புத்தகங்களில் ஒன்றான II கொரிந்தியரில் 2-ஆம்,3-ஆம் வசனங்கள்
இவ்வாறு கூறுகின்றன : “ எங்கள் இதயங்களில் எழுதப்பட்டும், சகல மனிதர்களாலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம்(கடிதம்-மடல்) நீங்கள்தானே! ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறித்துவின் நிருபமாய் இருக்கிறீர்கள் என்று வெளியரங்கமாய் இருக்கிறது. அது மையினால் அன்று, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும், கற்பலகைகளில் அன்று, இருதயங்களாகிய சதையினாலான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது..”


இதை அறிவதற்கு முன்பாகவே மேற்கண்ட பாடல், பின்வரும்
மொழிபெயர்ப்பு [தழுவல்] கவிதையை எழுதுவதற்கு உந்துதலாய் இருந்தது. அதற்காக திருமதி அவர்களுக்கு எனது நன்றிகளைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.


                                  இனி மொழிபெயர்ப்பு :         02/65 அழியாப் பெயர்..!


காலம் கடந்து வாழும் நினைவைக்
     கருதித் துணிந்த கருமத்தேன்
நீலம் கரைத்த நெஞ்சம் இரைக்க
     நிமிரும் படியும் கடலின் எழில்
சாலும் குறுமண் சார்ந்தென் பெயரைச்
     சடிதில் எழுதிக் களிப்புறுமுன்,
ஓலம் உடைத்தாய் ஓடி நடந்தே
     உழலும் அலைகள் அழித்தனவே!

ஆற்றும் வலிமை இல்லாப் பெயரும்
     அழியக் களியேன், அதைவிட்டு,
மாற்றும் அதற்கு மண்மேல் உளதாம்
     மரத்தில் அதனைப் பொறிப்பதெனத்
தேற்றி மனமும், தேவை முடித்துத்
     திரும்பி நடந்தேன் பிறிதொருநாள்..
காற்றில் விழுந்து கரையான் அரித்துக்
     காழ்ப்பம் இழந்த கதைகண்டேன்..!

ஏற்றும் சலவைக் கற்கள் இருக்க
     எதற்குக் கவலை, அதில்தீட்டக்
காற்றும், கடலும், காலப் புனலும்
     கரைத்தல் இயலா தெனச்செய்தேன்!
போற்றும் குணமில் பூமிக் கதன்மேல
     பொறாமை வரவே, பிளந்தது வாய்!
தோற்றம் இலதாய்த் தூசுக் கிடையே
     தொலைபா தளமது புகுந்ததுவே!

எல்லாம் மறந்த எண்ணம் தகிக்க
     எதிலே பொறிப்ப தெனவருந்த,
நல்லாம் வழியும், நம்பும் வகையும்
     நமதிப் பெயரை நிறுவுதலும்
எல்லாம் இனிமேல் எய்தும், மனிதர்
     இதயத் தெழுதும் பொழுதிலெனெத்
கல்லா மதியேன் காதல் மிகவே
     கருத்தை வருத்திக் கண்டனனே:

தண்மை அழகால், தாழ்வில் உரையால்
     தகவாம் செயலால் நடைகொண்ட
உண்மை ஒளியால் ஓங்கும் குணங்கள்
     உணர்ந்து மகிழ்ந்து மனந்தேறிப்
பெண்மைக் குயர்வும், பேதம் இலவும்
     பெரியோர் புகழும் நினந்து,ஆற்றி
வண்மைக்கு உருவாய் வாழின் பெயரும்
     வளரும் அழியாது எனக்கண்டேன்!

இன்னும் இவைபோல் என்றும் பெயரை
     எதிலும் அழியா வழிகாத்து
மன்னும் படிக்கு மற்றிவ் வுலகில்
     மறையா திருக்க உதவிடுமால்,
தன்னுள் நினைத்துத் தம்முள் உணர்ந்து
     தயங்காது எடுத்துச் செயல்செய்யும்!
என்றும் நிலைக்கும் என்சிந் தனைபோல்
     இங்குஉம் பெயர்,இது சத்தியமே!

                            • • • •

’65 தொல்லைகள் மறப்போம்..!

அகிலம் முழுதும் ஒன்றாய் வாழ
            ஆவன செய்வோமே! -அதற்காம்
            ஆவணம் செய்வோமே! -நல்
முகிலும் வானும் போலே இணையும்
           முயற்சிகள் செய்வோமே! -நமது
           முனைப்பினில் உய்வோமே!                                             01

பகையும் வறுமைப் பிணியும் தீரப்
            பணிகள் எடுப்போமே! -இன்னும்
            பலமைல் நடப்போமே!
நகையும், நட்பும், அன்பும் நெஞ்சில்
            நட்டதை வளர்ப்போமே! -நிலைத்த
            நாட்டமும் வளர்ப்போமே!                                                   02

சொல்லும் செயலும் சிந்தனை அழகும்
     சோம்பிடப் பண்ணோமே! -நாமதை
      ஓம்பிடக் கண்ணாமே! -தர்மம்
வெல்லும் வெல்லும் வெல்லும் என்பது
     விளங்கிடும் பண்ணாமே! -ஞாலம்
     துலங்கிடும் பண்ணாமே!                                                         03

கல்லும் முள்ளும் கிடக்கும் நிலத்தில்
     கழனிகள் காண்போமே! -எதிலும்
     விழலினிக் காணோமே!
புல்லும் பூண்டும் பாரதப் புகழைப்
     பேசிடக் காண்போமே! -பலர்
     பேசிடும் மாண்பாமே!                                                                 04

நல்லோர் வாயில் நல்லன கேட்டு
     நன்மைகள் கொள்ளுவமே!-பலவாம்
     நலிவுகள் தள்ளுவமே! -ஒன்றாய்ப்
பல்லோர் கூடிப் பகுத்துணும் நிலையே
     பண்பெனல் அறிவோமெ! -உலகே
     பயனுறச் செய்வோமே!                                                              05

எல்லா நாட்டின் மக்களும் இங்கே
     எம்முடன் பிறந்தோரே! -இங்கே
     எம்முடன் பிறந்தோரே! -நம்
எல்லாக் கைகளும் சேர்ந்தே செயல்பட
     எல்லைகள் கடப்போமே! -இன்ப
     எல்லைகள் கடப்போமே!                                                            06

                                   †

நன்மார்க்கம் மொழிகாக்கும் நமது மார்க்கம்!

ஒப்பில்லாத் தமிழ்காக்க ஊர்வ லத்தில்  
    உணர்ச்சியுடன் தமிழ்வாழ்க என்று கூவி
ஒப்புக்கோ செல்கின்றோம்! உணர்வைக் கட்டி
   உள்ளத்தே சிந்திப்பீர்! உரிமை கோரல்
தப்பில்லை! தவறியவர் தலையைச் சீவத்
   தாம்,முயற்சி செய்வதிலே தகவும் உண்டோ?
எப்பெரிய தவறெனினும் எதிரா ளிக்கு
   எடுத்தோதித் திருத்துவதில் இழிவும் உண்டோ?                    01

அந்நியரை மட்டுமல்ல அவர்கைக் கொண்ட
   அக்கிரம வழிகளையும் கூட இந்தப்
பொன்னிலத்தை விட்டகற்றப் பாடு பட்டுப்
   போராடி அகிம்சையினைப் புகுத்தி வாழ்ந்து,
தன்முறையை உலகேற்கச் செய்தார் காந்தி!
   தாமுமதைப் பின்பற்றி மார்ட்டின் லூதர்
என்னபலச் சான்றோரும் ஏற்று யர்ந்தார்!
   இதையறிந்த பின்னாலும் இம்சை நன்றோ?                              02

அந்நியரை மட்டுமல்ல அண்ணல் காந்தி
   அகிம்சையினால் தானிந்த அகிலம் வென்றார்!
அந்நிலையே பண்பாட்டின் சிகரம் என்றார்
   அகிலத்தின் பலநாட்டார்! அதையே காந்தி
பொன்னாட்டில் நாமின்று புறக்க ணித்தால்
   புகழுண்டோ? இழிச்சொல்லும் போமோ சொல்லும்!
முன்னிருந்த நிலைக்கேநாம் செல்வோம் என்றால்
   முன்னேற்றம் என்றிதனைச் சொல்லப் போமோ?                   03

மொழிநட்டப் படுமென்று மூளுங் கோபம்
   முழுநாட்டின் பொருள்நட்டம் ஏற்கப் போமோ?
‘வழிகெட்டுச் செல்வோர்க்கு வாய்ப்பு கள்தாம்
   வந்தெளிதிற் கிட்டு’மெனும் வார்த்தை மெய்யோ?
விழிகெட்டோர் போல்ச்சென்று வீழ்வோம் என்று
   விழிமூடிச் சென்றழிவை விரும்ப லாமோ?
மொழிப்பற்று பிறமொழியை வெறுப்ப தன்று;
   முயன்றுனது மொழிவளர உழைப்ப தன்றோ?                          04

செக்கிழுத்துச் சிறைசென்றார் செல்லா மார்க்கம்!
   சிந்தித்துப் பலநூற்கள் செய்தார் மார்க்கம்!
திக்கெதிர்த்தும் கப்பலினை விட்டுக் காட்டித்
   திருப்பணியைத் தமிழ்க்களித்தார் தேர்ந்த மார்க்கம்!
எக்கொடுமை நேர்ந்தாலும் எடுத்துச் சென்ற
   எம்நாட்டுக் கொடியைவிடேன் என்பார் மார்க்கம்!
அக்கறைநம் மொழிமேல நமக்கி ருக்க
   அடுத்தமொழி அதைவளர்க்க அடிமை செய்யும்!                     05

என்மார்க்கம் என்றிதனைச் சொல்ல வில்லை!
   எந்நாடும் மதிக்கின்ற வழியைச் சொல்வேன்!
‘துன்மார்க்கன், கருங்காலி, துணிவில் கோழை,
   துப்பில்லான்’ என்றெல்லாம் தூற்ற லாம்நீர்!
வன்மார்க்கம் விட்டகிம்சை வழியில் நிற்க
    வலிமிகவும் வேண்டுமுளத் துறுதி வேண்டும்!
நன்மார்க்கம் இதுநமது நாட்டின் மார்க்கம்!
   நாமிந்த வழிச்சென்று மொழியும் காப்போம்!                             06

                                                    †

’65. புத்தாண்டே வருக..!


புத்தாண்டே புத்தாண்டே வருக! -இன்பப்
பூமணமும் அமைதியுமே தருக!
கர்த்தாவின் ஏவலை அன்புருகத் -தந்து
கடமைதனை யாம் செய்ய வருக!


போலி,ஒளி கொண்டமது மறையப் =பூமி
போர்த்தியுள்ள இருட்போர்வை கிழிய,
நீலவொளி வானமதில் தெரிய -நேர்மை
நெஞ்செனவே சூரியனும் பொலிய..                            [புத்தாண்டே]


புன்மதியார் கூட்டம்போல் இருளில் -கூடிப்
பொய்,ஒளிசெய் விண்மீன்கள் நொடியில்
தன்னிலையும் கெட்டோடும் படியே -தோன்றும்
தன்னிகரில் ஆதவனின் வடிவில்..                                 [புத்தாண்டே]


சாதிமத பேதங்கள் கொண்டு -தம்முள்
சண்ண்டையிடும் மாக்களைநீ கண்டு
‘பேதமிலா வாழ்க்கைநெறி உண்டு,நிறை
பேரொளிபோல் நிலை’ எனும் சொற் கொண்டு       [புத்தாண்டே]


ஒருகோடி பேதங்கள் நீக்கி -உலகில்
உளகோடி மக்களைஒன் றாக்கி,
வருங்கோடி இன்பங்கள் கூட்டி -வறுமை
வலிந்தோடும் நிலைதன்னைக் காட்டி..                       [புத்தாண்டே]


வீட்டுக்கே வாழுநிலை வீழ -வயிற்றுப்
பாட்டுக்கே படிப்பதெனல் மாள
நாட்டுக்கே நாடுகை கோர்த்துப் -பல
நன்மையுடன் வாழக்கண் பார்த்து..                                [புத்தாண்டே]


‘உள்வீட்டுள் வேற்றுமையை நீக்கிப் -பின்
உள்நாட்டுள் ஒற்றுமையுண் டாக்கிப்
பன்னாட்டுள் கூட்டுறவைத் தேக்கி -நல்ல
பல,ஆண்டு நீ வாழ்’என் றூக்கிப்..                                    [புத்தாண்டே]


                                              >>> 0 <<

Thursday, October 27, 2011

01/ ’65 தியாக நிலை !



வசந்த காலம் தனில்மலரும்
  வண்ணப் பூக்கள் பலவெனினும்,
ஒசந்த மரத்தை அவைவிட்டே
  உதிரத் தவறி வாழ்வதில்லை;
நிசமென் றறிவாய் இவ்வாழ்வும்
  நீர்மேல் எழுத்தாம் என்பதுவும்!
கசந்து வீணே பயனில்லை!
  காலம் அறிந்து செயலாற்று!                                                 01

நீயே யன்றி இவ்வுலகில்
நித்தம் தோன்றும் எல்லோரும்
போயோர் முடிவை எய்துவதால்
போதும் வெறும்வாழ்வு எனல்வேண்டாம்!
காயாய்ப் பழமாய்ப் பலமலர்கள்
கனிந்து மாயும் நிலையெண்ணு!
தாயாய் மனிதர் பலர்வாழத்
தன்னால் ஆகும் செயல்பண்ணு!                                          02

ஆரும் இங்கே நிலைப்பதிலை;
அகிலம் அறிந்தது இந்தநிலை!
சேரும் பொருட்கள் தொடர்வதிலை!
சேர்ந்தோர் பிரிவும் இயற்கைநிலை!
ஊரும் நாடும் உயரநினை!
உலகம் ஒன்றாய் வாழமுனை!
ஊறும் அன்பில் உதவநினை!
ஊட்டும் அதுவே தியாகநிலை!                                             03
                                    †

’65 நல்லைநீ இல்லை நெஞ்சே..!

உட்பகை புறப்ப கையால்
உறுதுயர் கொண்ட நாடு
நட்புகை வாரா நின்று
நலிவுறும் இந்த வேளை
உட்புகும் துயர்க ளைந்தே
உவப்புநா டேற்க ஏதும்
பெட்பொடு செய்தல் எண்ணாய்
பெண்ணினுக் கழிவாய் நெஞ்சே!                         01

கொல்லுமோர் சிந்தை கொண்டு
  கூற்றெனப் பகைவர் வந்தார்!
புல்லிடும் வெங்க ளத்தில்
  புண்படப் புண்ப டத்தம்
சல்லடை மேனி சாய்த்துச்
  சத்தியங் காகும் வீரர்
அல்லலை எண்ணாய்! அன்பின்
  அழகியை எண்ணல் ஏனோ?                                 02

எல்லையில் பகைவர் கூட்டும்
  இன்னலை ஏற்று வீரர்
அல்லலுற் றலையும் சேதி
  அறிந்தும்,உன் காதற் பெண்ணின்
முல்லைவெண் முறுவல் எண்ணி
  முன்வராள் என்று மாய்ந்து
நெல்லுமி யாவாய் நெஞ்சே!
  நல்லையோ நீயே சொல்லு!                                03

சத்தியம் முன்னே தள்ளச்
  சாவுமுன் நின்றே கொள்ளத்
தத்தமாய் உயிரைப் போக்கித்
  தாயர்நா டிதனைக் காக்க
நித்தமும் அழிவார் தங்கள்
  நினவுகள் மறந்தே உந்தன்
சித்திரைப் பெண்ணைச் சிந்தை
  செய்வதும் சிறப்போ நெஞ்சே!                            04

                                    †







’64. பகுத்தறிவால் ஆகும் பயன்..!

தன்னலம் வாழ்வு! பேசித்
தருக்கலே தொழிலாம்! சூழ்ச்சிப்
பின்னலே உள்ளம்! பேணும்
பெட்டியே தெய்வம்! வாழ்க்கை
நன்னெறி மடமை! நாவில்
மறைபொருள் திறமை! என்ற
இந்நிலை கொண்டு வாழும்
இவனொரு மனிதன் ஆமோ? 01

சுகமெனில் வரவு; சூழும்
துயரெனில் செலவு! வெற்றி
இகமதில் தானே வாழ்தல்!
இகழ்ச்சிகள் காற்றில்! நிற்கும்
புகழொடும் இகல்! அப் பாதை
போவதோ நட்டம்! என்றிச்
செகமெலாம் மாறு மானால்
சேருமோ இன்பம் தானே?! 02

[ இகல் –பகை; போர் ]

தனக்கென மரந்தான் வாழும்!
தன்னினம் மிருகம் கொல்லும்!
இனப்பற்று அவைகட் கில்லை!
இருப்பதோ அறிவில் ஐந்து!
மனப்பொருள் அவைகட் கேது?
மனிதனுக் கதுவொன் றுண்டே!
நினைத்ததும் ‘அவைகள்’ செய்யும்!
நிறுத்தபின் செய்வார் ‘மக்கள்’!

பகுத்தறிவு என்றொண் றுண்டு!
படைப்பினில் உயர்ந்தது அஃதே!
வகுத்தறி செயல்கள் உண்டு!
வாழ்க்கையின் பயனைக் கண்டு
தொகுத்தவர் மூடர் ஆமோ?
துணிந்திடு! அவரே தெய்வம்!
மிகுத்த,இவ் வறிவால் என்னாம்,
மிருகமாய்த் திரியப் போனால்?

                                  †

03/64 அம்மா ! அம்மா ..!


கனிகொண்ட விதையைப்போல் உன்னுள் என்னைக்
கனிவோடும் பஞ்சுடலால் மூடிக் காத்தாய்!
நினைவுள்ளே மாதத்தை எண்ணி எண்ணி
நிறைமேகம் கொடுமிடியுள் துளிர்த்தார் போல
இனைத்தென்று சொலவொண்ணாத் துயரில் பெற்றாய்!
எழுகதிர்முன் தாமரைபோல் இன்பங் கொண்டாய்!
சினந்தென்னைக் கடிகில்லாய்! சீரும் செய்வாய்!
சிறப்பான மகனென்றும் சொல்லிக் கொள்வாய்!

பெற்றெடுத்த குறையென்றும் எண்ண மாட்டாய்!
பேணியெனைப் பலவாறாய்ப் புகழ்ந்து கொள்வாய்!
நற்றவத்தின் மகனென்றும் சொல்லிக் கொள்வாய்!
நாட்டமெலாம் என்மேலாய்த் தூக்கம் விட்டாய்!
கற்றறிந்த புலவனுமே கருத்தைக் கூட்டிக்
காவியத்தை முடிக்குமுனர் படும்பா டெல்லாம்
உற்றவளாய் மனஞ்சலியாது எனைவ ளர்த்தாய்!
உலகில்யான் உயிர்வாழ ஓடாய்த் தேய்வாய்!

உன்னுளமும் யார்க்குவரும்! உன்போன் றோர்கள்
உள்ளதனா லன்றொஇம் மனிதர் வாழ்வும்!
தன்னுடலைப் பேணுதலைத் தானேன் விட்டாய்?
தன்னுயிரும் என்னுள்ளே ஒலிக்கக் கேட்டோ?
என்னுடலை நோய்பற்ற இருப்புங் கொள்ளாய்!
ஏதுக்கோ அறிகில்லேல் மருந்தும் உண்பாய்!
இன்னவையோ தாயேநீ எனக்காய்ச் செய்தாய்!
எங்கினியோ நான்காணல் இவைபோல் எல்லாம்!

பிறப்பாலும் துன்பத்தைத் தந்தேன்! அந்தப்
பிறப்பாலே இன்பத்தைக் கண்டாய்! எந்தன்
மறப்பாலும் மனத்தாலும் தந்தேன் துன்பம்!
மழலை,படு சுட்டியென மகிழ்ந்தாய் உன்னுள்!
சிறப்பாலும் பலவிட்டுத் தாய்மை கொண்டாய்!
சிந்திக்காப் பொறுமையிலோ நிலத்தை வென்றாய்!
இறப்பில்லாப் பெருங்குலமும் உனதே அம்மா!
இறப்பில்லாப் பெருமையெலாம் உனக்கே அம்மா!

                                                    †

12/64 விடைதந்தேன் ஆண்டே..!

காலத்தில் ஏவலைநீ தாங்கி வந்தாய்!
கண்ணாடி போலுன்னைக் காட்டி நின்றாய்!
ஞாலத்தின் சுழற்சியிலே நடனம் செய்தாய்!
நானிலமும் வாழ்ந்திட,உன் பாடு பட்டாய்!
மூலத்தின் கட்டளையை முடித்து விட்டாய்!
முன்னோர்க்கும் பின்னோர்க்கும் தொடர்பாய் நின்றாய்!
கோலத்தை அழகுசெய்யும் மாந்தர் இன்று
கூறாத விடைதருவேன் செல்வாய் ஆண்டே!

புத்தாண்டின் வரவெண்ணிப் பாடு வார்கள்!
புதிதான வாழ்க்கைதனை நாடு வார்கள்!
மத்தாப்பின் ஒளிபோல வானில் உள்ள
மங்காத மீன்களென எங்கள் வாழ்வில்
எத்தனையோ இன்பநிலை எல்லாம் தந்தாய்!
இருளதுவும் தோற்றாத நிலையில் வந்தாய்!
சத்தான நிகழ்வுகளே எம்முள் தங்கும்!
சற்றுமுளம் வருந்தாது செல்வாய் ஆண்டே!

                                           †



வாசல் கவியரங்குக் கவிதை – நாள்: 06-11-2011.



நேசக் கரங்கள் நீட்டியவர்
நிற்கும் சிலுவை தனைநோக்கிப்
பாசக் கைகள் தமக்காணி
பரிசாய்க் கொடுத்த நினைவேந்தி
வேசக் குறிகள் விலக்கி,உளம்
வெதும்பி, வருந்தித் திருந்தி,அவர்
வாசல் நின்று குழந்தையென
வரும்நாள் எண்ணிப் பணிகின்றேன்!

பூசல் மனங்கள் மாறிடவேப்
புதிதாம் கவிகள் பாடிவரும்
ஆசைக் கவிகாள்! அனைவர்க்கும்
அன்பன் வணக்கம் செய்கின்றேன்!

வாச மலராய்க் குடும்பத்தில்
வருமாம் குழந்தை ஒவ்வொன்றும்
ஈசன் மனத்தில் எமக்காக
இருக்கும் நம்பிக் கைதானே!

அதுபோல் தோன்றி மனங்கவர
அழகு மழலை இவள்,மலருள்
மதுசேர்க் கின்ற வண்டாக
மயங்கித் தூங்கி வருகின்றாள்!
புதுமை யின்றிச் சொன்னாலும்
பொறுத்துக் கொள்வீர்! அவளழகை
மெதுவாய்ச் சொல்வேன் கேட்டிடுவீர்!
மெலிந்த குரலும் எழுப்பாதீர் ! இனித்

தங்கை அழகு..!

காற்றில் அசையும் மாந்தளிரைக்
கையால் தொட்டுப் பெறுஞ்சுகம்போல்
தோற்றம் அழகின் நின்முகத்தைத்
தொட்டுப் பெறலும் ஒருசுகமோ!
நாற்றங் காலின் நீர்மூட்டில்
நனைந்து குனிந்த நெல்முளைபோல்
தோற்றம் அழகாம் தலைமுடியின்
துவளும் அழகும் ஓரழகோ!                                                   01

கொட்டும் இமைகள் சுருங்காமல்,
கொவ்வை இதழும் மூடாமல்
பட்டுக் கரங்கள் ஆடிடநீ
பண்ணும் அழகும் ஓரழகோ!
குட்டிக் கால்கள் மடங்கிடநீ
குதித்தே எழுந்து வருவதுபோல்
நெட்டித் துயிர்த்து நிகழ்த்துவன
நினைக்க நினைக்க ஓரழகே!                                               02

தாய்ப்பால் அருந்தி அதில்பெற்ற
தணியா மகிழ்வில் இமைமூடி
வாய்ப்பாம் தவங்கள் இயற்றிடுவார்
வடிவை ஒத்த அமைதியுடன்
நோய்ப்பா டில்லா உலகெண்ணி
நோற்கும் தவமோ உன்தூக்கம்?
தோய்ந்து புருவம் மேலோடித்
துலங்குங் குறிகள் எதன்தாக்கோ?                                    03

நீண்ட வாழ்க்கைப் பயணத்தில்
நிகழ்த்த வுள்ள செயல்களினைத்
தூண்டும் விதியாய்த், தொல்பொருளாய்த்
துலங்கும் இறைவன் சொல்லிடவே
வேண்டிக் கேட்கும் பாவனையோ!,
விளங்கிக் கொண்ட சொற்களினால்
மூண்ட தாமோ உன்முகத்தில்
முறுவல் நெளிவு போன்றவையே!                                    04

தரைமேல் பிறந்து முதற்கண்ட
தாயின் மலர்ந்த முகத்தழகோ?
வரையும் துகிலின் வசம்வந்த
வடிவம் போன்ற உருவங்கள்
நிறைந்து வந்து மனத்துள்ளே
நின்று காட்டும் மருட்கையதோ?
இறைவன் மேனி உருவழகோ?
எதற்கோ சிரிப்பாய், பயந்திடுவாய்!                                    05

என்ன கண்டோ இம்முறுவல்?
எதனால் இந்த நெளிவெல்லாம்!
சன்னம் போன்ற நகவிரலும்,
சண்ப கத்து மலரெழிலும்
தன்னுள் தங்க வந்தவளே!
தங்கை என்னும் தமிழுறவே!
உன்னை உயர்ந்து வாழ்கவென
உலகை எண்ணி வாழ்த்துகிறேன்!                                    06

                                        †

1965 – அகத்துறையில்.. ..!

தோழி வியப்பு:


       பேழ்வாய்ப் புலியும் பெருவலிச் சிம்மமும்
       தாழ்வின்றிச் செய்யும் தடையெலாம் –ஊழ்வந்தே
       ஊட்டிடத் தாண்டியோ உன்வசம் சேர்ந்தனன்
       தீட்டிய வேற்கரத் தான்!

       தலைவன்/தலைவி ஐயம் தெளிதல்:
       ‘வானின்று ஒளிசெய்யும் வெய்யோனோ? வன்தொண்டர்
       தானின் புறச்செய்யும் தண்முருகோ?’ – ‘மானினமோ?
       வெய்யயிக் கானில் விளங்கணங் காகுமோ?
       ஐயமில், மானுடமே ஆம்!

பிரிவுடற்றல்:


      ‘மஞ்சம் மலரெனினும் மன்னவரிங் கில்லாது
      நெஞ்சம் துயின்றிலதே! நற்றோழி! –பஞ்சும்
       படர்காற்றுத் தீயின்வாய்ப் பட்டாற்போ லந்தோ!
      அடர்காமத் தீயின்வாய் யான்!’


     ‘பூம்பழனத் தாமரையோ? தாமரைமேல் அல்லியோ?
     தேன்பிழியும் சந்திரனோ? தேர்கிலனே! –கூம்புபிறை
     நெற்றித் தலமுடையாள்! நேர்வந்து எதிர்நிற்கச்
     சுற்றிக் கிறுகிறுத்த நான்’!


வரைவு வேட்டல்:


     ‘உந்தும் மனத்தாசை ஓரானோ? ஊரறியச்
     சொந்தம் எனக்கையும் சேரானோ? –சாந்ததமும்
     கள்ளப் புணர்ச்சியிது கைவருமோ? ஊரறியின்
     எள்ளிப் பழிசொல்லு மே!’

பொருள்வயின் பிரிவு: [தோழி கூற்று]


     ‘வண்ணம் திரிந்ததுவே! வார்  குழலும் வாடியவே!
     எண்ணம் உறைந்தனளே! ஏங்கினளே! –கண்ணிங்கிக்
     காதல் பொருள்வயமாய்க் காதலர்நீர் தாம்பிரிந்து
     போதல் தனையுரைத்த போது!’


வரவு நோக்கல்:


     பொருளீட்ட வென்று புகன்றவர் கார்வந்து
     இருளீட்டு முன்னிங்கு இருக்க –அருள்கூட்டிப்
     போதித்த வார்த்தைகள் பொய்யாமோ? வாரா,இப்
     போதிற்கு நானோ புகல்!


பாங்கனுக்கு/ தேரோட்டிக்கு உரைத்தது:


     பூட்டிய தேரிதனைப் பார்க்கினும் பன்மடங்கு
     ஊட்டமாய் என்னுள்ளம் ஓடுமே! நாட்டிய
     வேல்விழி சோர்ந்தாங்கு வெந்நீர்க் குளமிடும்
     மால்விழி தன்னாள் மருங்கு!.

மணம்:


     சுற்றம் இசைந்துவரச் சோதிடர்செய் நன்னாளில்
     உற்றுப் பலர்கூடி ஒன்றாகப் – ‘பெற்றிடுக
     வாழ்பதி நாறு வகைநலனும்’ என்னவே
     யாழ்முரசு ஆர்க்கும் மணம்!
                                               †


Monday, October 24, 2011

(02/1968) பிரிந்தும் வாழ்வோம்..!



பாகான நம்காதல் பதத்தில் முற்றிப்
    பக்குவமும் கெட்டதடி! வாழ்க்கை யென்னும்
மாகாத வழிதனிலே நீயும் நானும்
    மனமறியா தெதிர்வந்தோம்! மயங்கி விட்டோம்!
ஆகாத செயலில்லை அதுவென் றாலும்
    அருகுள்ளோர் விரும்பவில்லை; ஆயின் உள்ளம்
நோகாது நொந்துகொண்டோம்! நொடித்தோம்! அன்பு
    நோயாக வளந்ததடி !மருந்தாய் இல்லை!


இல்லாத பொருளில்லை அன்பு நம்முள்
    இருந்துமதன் பயன்காண வரவேற் பில்லை
சொல்லாத கதையில்லை நமது நெஞ்சம்
    சொல்லுதற்கு மொழியின்றி வெளிப்பா டில்லை;
நில்லாத பொருளில்லை நினைப்பு நம்முள்
    நெருங்கியவர் தாமுமதை நொண்டி யென்பார்!
பொல்லாத வேளையெனப் பொய்யைச் சொல்லிப்
    போவதற்கும் பிரியமில்லை; புரிவா யோடி!


கண்பார்த்த போததனைக் காத்துத் தோற்றோம்!
    கால்நடந்த போததனைக் கடிந்து தோற்றோம்!
பண்பு,ஆர்த்த பொழுததற்குப் பணியத் தோற்றோம்!
    பலருரைத்த பொழுதுணர்ந்து பார்க்கத் தோற்றோம்!
மண்பார்த்த நடைபார்த்தே மறந்து போன
    வருங்காலப் பெரும்பொருளைக் கருதத் தோற்றோம்!
விண்பார்த்து வளர்ந்துள்ள கோபு ரத்தை
    வியந்தன்றி யதன்பொருளை விளங்கத் தோற்றோம்!


தோற்கின்ற வேலையினைத் தொடரத் தானோ?
    துன்புறுத்தும் செயல்களினித் துளிர்க்க லாமோ?
நூற்கின்ற நூலிடையில் நைந்தி ருக்க,
    நூலறுந்து போவதிலே வியப்பு முண்டோ?
பார்க்கின்ற கண்ணொளியிற் குன்றிப் போனால்,
    பதறாமற் குத்துவமோ? பயன்ம றந்து
வேர்க்கின்ற நிலைவிடுப்போம்; வியனி லத்தை
    விளக்கிடுமோர் செயலுக்காய்ப் பிரிந்தும் வாழ்வோம்!


                                                   †

 

அவருக்கே இயேசென்று பேர்!


   (அவளுக்கும் தமிழென்று பேர் என்ற மெட்டில் எழுதியது)


அவருக்கே இயேசென்று பேர் –இங்கே
அவரினும் சிறந்த இறையில்லை தேர்!
அவர்முன்பு தூசென்று சேர்! –உன்னை
அவர்க்களி! அதன்பின் மாசில்லை பார்!

மரியாளின் மகனானது ஏன்? –வானின்
மகத்துவம் விட்டவர் பிறந்ததும் ஏன்?
தெரியாமல் இருப்பதும் ஏன்? –உன்னுள்
தெளிவின்றி வேறு,இறை தேடுதன் வீண்!    (அவருக்கே..)

தாவீதின் வம்சத்தைப் பார்! -நம்மைத்
தாங்கிட அதில்வந்த இரட்சகர் ஆர்?
மாவீடும் உனக்களிப் பார்! –என்றும்
மரணமில் லா,ஒரு வாழ்வளிப் பார்!

யூதரின் சிங்கமிங் கார்? –அந்த
யூசுப்பின் பிள்ளையாய்ப் பிறந்தவர் ஆர்?
வேதரில் வேதரிங் கார்? –மனிதர்
வினைவிட் டெழ,என உயிர்விட்ட தார்?      (அவருக்கே)

மனிதரில் ஒளிகாட்டினார் – அவர்
மனம்மாறிப் பரமேர வழிகாட்டினார்!
கனிதர மரமேறினார்! –சிலுவை
காய்த்தது, கனியதில் வரக்காட்டினார்! (அவருக்கே)

தினமிவர் பதம்பணிவாய்! –பகைத்
திறமழிப் பாய்மனந் தெளிவுறுவாய்!
மனதினில் அமைதிகொள் வாய்! –உனை
மறக்கமாட் டாரைநீ கண்டுணர்வாய்!
                                          †

குறிந்தொகையில் பெருந்தகை..!

நிலத்தினும் பெரிதே! வானினும் உயர்ந்ததே!
நீரினும் ஆழமாய் நிலைத்ததே! சாரல்
கருங்கோல்ச் சிலுவை மரித்தப்
பெருங்குணத் தேசு பெருமான் அன்பே!

நோமென் நெஞ்சே! நோமென் நெஞ்சே!
சாமம் வந்துகண் சாய்த்திடும் போதும்
தீமைகள் ஏற்றுச் சிலுவையைக்
காமுற் றணைந்த காதலர் நினைப்பே!


கண்டிலம் யாமே! கேட்டிலம் முன்பே!
ஒன்று தெளிய உரைக்கப் போமே:
விண்ணர சானவர் வெறுந்தரை யுற்றுப்
பொன்னுடல் கடாஅப் பெறீஇ
மன்பதை உய்ய மரித்ததும் மெய்யே!


நல்லோன் வீடு நமக்கும் கிட்டுமோ?
இல்லையோ? என்ற ஏக்கம் தவிர்நீ!
கன்மலைச் சிலுவை நாயகன் முன்னரே
பல்வகைத் துன்பம் பட்டதும்
நல்லோர்க் கன்றி நம்போன் றோர்க்குமே!

                                                    †


இயேசுவின் தாகம்..!

பஞ்சமும் நோயும் பாரினில் ஏனோ?
பகைமையும் போரும் பரமனுக் கழகோ?
தஞ்சமென் றடைந்தோர் கைவிடுத் தாயோ?
தந்தைபோல் நீயும் தயவிழந் தாயோ?
அஞ்சலென் றெழவே அகம்,மறுத் தாயோ?
அய்யகோ! உன்னுள் அறம்,ஒழித் தாயோ?
வெஞ்செயல் அரக்கரை விட்டிடப் போமோ?
வேறுனக் கென்னே தாகமும் உண்டோ?

என்றுதான் தணியுமோ இயேசுவின் தாகம்!
என்றுதான் தணியுமோ இக,சுக மோகம்!
என்றெம தாசையின் விலங்குடை படுமோ?
என்றெம திச்சைகள் தீர்ந்துபொய் யாமோ?
அன்றொரு புத்துலகு ஆகவந் தோனே!
அமைதியின் வாழ்வை ஆதரிப் பவனே!
வென்றுயாம் உய்வதும் உன்னருள் அன்றோ!
வேதனை இன்னும் தொடர்வதும் நன்றோ?

                                                †


நன்னீர்க் கிணறிது ..!


நம்ம கிணறிது நன்னீர்க் கிணறிது!
நசரேயன் கிணறிது! நம்பிக்கைக் கிணறிது!
ஊற்றாய்ச் சுரப்பது! ஊருள் நிலைத்தது!
வேற்றார் வாய்க்கும் விலக்காது இனிப்பது!
செம்மைக் கிணறிது! சேர்க்கும் கிணறிது!
உம்மைக் கர்த்தரிடம் உயர்த்தும் கிணறிது!
தம்முள் அழுக்கிலாத் தண்மைக் கிணறிது!
தவித்து வருவோன் தாகம் தணிப்பது!
உம்முள் அழுக்கை ஒழிக்கும் கிணறிது!
ஒண்டும் எவர்க்கும் உயிர்தரும் கிணறிது!
உண்டிக் கிணறிது! ஒண்டிக் கிணறிது!
ஒன்றிச் சுவைத்திடு! உயர்ந்து களித்திடு!
நன்றி உணர்ந்துஎழு! நால்வர்க்கு உரைத்திடு!
வென்றி சிறந்திடு! வேதனை விட்டிரு!
                                             







(Oct. ’09) தள்ளப்படுபவர் நாமிலை..!


மெள்ளத் தமிழினிச் சாகவோ?
    மேல்நிலை பெறவழி யாகுமே!
உள்ளத் தினில்பயம் நீக்கிடு!
    ஊமைக் கனவுகள் போக்கிடு!
தெள்ளத் தெளியநற் சொற்களில்
   தேனெனுங் கவிதைகள் பாடிடு!
உள்ளக் கவலைகள் ஒட்டிடு!
   ஓடி வருகுதோர் கூட்டமே!


மெள்ளக் கிறித்துவ இலக்கியம்
    மிகவும் பலரால் படித்துளம்
கொள்ளப் போகிற நாட்களும்
    கூடி விரைவினில் வந்திடும்!
துள்ளச் செய்திடும் கவிதைகள்,
   துடித்தே எழவரும் உரைநடை,
அள்ளிக் கொண்டுடன் போகவே
   ஆவல் மிகுபலர் வருகிறார்!

எள்ளப் படுபவர் நாமிலை!
    எழுதப் படுபவர் நாமலோ!
தள்ளப் படுபவர் நாமிலை!
   தழுவப் படுபவர் நாமலோ!
கிள்ளப் படுபவர் நாமெனின்
   கிளர்ந்தே எழுபவர் நாமலோ!
வெள்ளப் பெருக்கென வாருமே!
   வேதன் துணைநமக் குண்டுமே!

                                    †






(மார்ச்சு 67) விடைதந்தேன்..!


தம்பிக்கன்று ஓடியவன் தான்விரும்பும் பெண்மணக்கத்
தும்பிக்கை காட்டித் துணைபுரிந்து –நம்பிக்கைப்
பாதை கொடுத்தோனே பாடிடுவேன் வா!எனது
காதல் விடைக்கும்நீ காப்பு!

விடைதரு கின்றேன் விடைதரு கின்றேன்!
மடமயி லேஎன் மனமகிழ் கொடையே!
அருகினில் நெருங்கா திருவரும் நாளும்
மருவிய அன்பை, மவுனத் துடனே
விளித்திட மறுத்தும், ஒளித்திட மற்ந்தும்
கழித்தோம்! உதவிக் கரங்கள் இழந்தோம்!
பொருந்தும் பழிவர இருந்தோம் அதனால்
விடைதரு கின்றேன்! விடைதரு கின்றேன்!

இடைவரை பின்னிய சடையசைந் தசைந்து
‘நடைதவிர்’ ‘துன்பப் படைதவிர்’ என்ற
உரைதெரி யான்போற் தெருவழி தொடர்ந்தேன்!
கடைவிழிப் பார்வையில் தொடைமிகு கவிதைகள்
பலவாய் எழுதி அலமரல் தவிர்த்தேன்!
அகமகிழ் வுடனே பகர்விடை கொடுப்பேன்!

எதிர்வரும் நாட்களில் எதிர்வர் வோமேல்
புதிராய் நிகழ்ந்து விதியார் கையில்
சதிராய் உழன்ற இதுநால் நினைவைப்
பறித்தொரு நெஞ்சப் படுகுழிப் புதைத்து,அதை
வெறித்தொரு பார்வையில் விளக்கா தகல்வோம்!

காதல் நினைவுகள் மோதல் தவிர்த்துப்
பாதை திரிந்தோம்! போதை தவிர்ப்போம்!
நாடி குறைந்தும், நாட்கெடு வந்தும்
ஓடி இளைத்தே ஓயும் மூச்சுடன்
உண்மையும் சீலமும் அண்மையில் நின்றழக்
கண்களைச் சொருகுமென் காதலும்
நாட்டம் இருக்குமேல் கூட்டதற் குயிரே!

                                             †

விடைபெறும் காதல்..!** (06/66 Love’s Farewell ..by Michael drayton)



Since there is no help, come let us kiss and part,-
Nay, I have done you, get no more of me;
And Iam glad, yea glad, with all mu heart,
That, thus so cleanly, I mayself can free!
Shake hands for ever, cancel all our vows;
And when we meet at any time again
Be it not seen, in either of our brows,
That, we one jot of former love retain..

ஏதொரு மாந்தரும் இணைந்துநீ என்னுடன்
     இருப்பதற் குதவினார் இல்லையால்..
தீ, தருங் காதலி! திரும்பிடா இவ்விடை
    தெரிந்துதான் தருகிறேன் கொள்கிலாய்!
ஏதுநீ பெற்றனை? எதையுனக் காற்றினேன்?
    எதையும்நான் இனியுனக் காற்றுவேன்?
பேதயேன் இவ்விடை புகலுமுன் நெஞ்சினுள்
    பெருக்கிடும் உணர்வினைப் புகலவோ?

வந்துநில் காதலை மறைத்துநில்! கண்ணினீர்

    வழித்தெறிந் துதறிநீ வல்லையே!
சிந்திநில் அஃதொடும் சிதறிநில் உன்னுளெம்
    சிறப்புகள் உறுதிகள் யாவுமே!
முந்திநில் லாதெனுள் முயங்கிநில் காதலை
    முறித்ததன் சிறுகுறிப் பேதுமே
உந்திநில் உன்னுளத் தொறுத்துநில் ஊர்ப்புறத்
    தொருவழி இருவரும் காணுமேல்!

Now at the last gasp of love’s latest breath
When his pulse fails, passion speechless lies,
When faith is kneeling by his bed of death,
And innocence is closing up his eyes,
-Now If thou would’st , when all have given him up,
From death to life, thou might’st him yet decover.!

காதலும் தானதன் கடைசியாம் மூச்சினைக்
    கருதிவாய் திறந்தது வாயிடும்!
வேதனை யாம்மன எழுச்சியும் பேச்சறும்
    விரைந்துடன் அடங்கிடும் நாடியும்!
சாதனை நோக்கிய சதுரநம் பிக்கையும்
    சரணெனும் அவன்கடைப் பயினில்!
தீதினை எண்ணிலன் திறனுடைத் தான்குணம்
    திருவிழி அழவென முடுமே!
ஆக,இவ் வாறெலாம் அவரவர் கைவிட
     அறிந்திலள் எனமனஞ் சாற்றியோ?
போக,இப் பாவி,இப் புவிமறந் தேகியப்
    புகழுல குக்கெனப் போற்றியோ?
வேகமே எவ்வொரு வினையும்நீ செய்திலாய்!
    விதிவசம் எனநினைத் தாற்றியோ?
ஆகுமேல்! வந்துநீ அனைவருங் கைவிடும்
    அவனுயிர் திருப்பிடல் தேற்றியே
                                               †

Saturday, October 22, 2011

தேர்தல்..! (செப்டம்பர் 2006)


01.  வாருங்கள் தோழர்காள்! வாக்குரிமை பெற்றோரே!
      போருங்கள் முன்னால்! புறப்படுவீர்! –தேருவீர்
      யோசித்தே வாக்குரிமை யுத்தக் கணைதொடுப்பீர்!
      யாசிப்போர் நாளையிங் கார்?

02. வாக்கெடுப்பாய்ப் பேசி, வளம்பலவும் காட்டி,
      தூக்கிவைப்பார் கண்டு துடிக்காதீர்! –வாக்கெடுப்பு
      வந்தகன்ற பின்னாலும் வந்துழைப்பார் யாரென்று
      சிந்தனைசெய்! பின்னோட்டுச் செய்!

03. கொடுப்பார்கை பார்த்தே குறியிடினோ, கூடிக்
      கெடுப்பார்கள் ஆட்சி!இது கேட்பாய்: -எடுப்பார்கைப்
      பிள்ளையாய் இன்னும் இருந்தால் முகமூடிக்
     கொள்ளையேன் தேர்தலும் கூறு!

04. சாதுமனம் வைத்தும், சமயமதைக் கொண்டும்,உம்
      நீதிமனங் கூறும் நியாயத்தைப் பேதலித்தே
      காட்டு மிராண்டிகளாய்க் கைநாட்டாய்ப் போடுமந்த
      ஓட்டுகே வைப்பீர் உலை!

                                                             <0>

1965. துன்பச் சுடலையில்.. ..!


01. சங்கந் தமிழ்முழங்கும், சந்நிதியில் தோல்முழங்கும்,
      எங்கும் ஒலிமிழங்கும் எப்போதும் – கங்குல்
      பகலென் றறியாது பாவைநினை வென்னுள்
      புகலில் இகல்முழங்கும் போது!

02. தென்னை தலையசைக்கும், தேன்வண்டு நாவசைக்கும்,
     பொன்னின் மகரந்தம் பூவசைக்கும்! –மின்னும்
     உடலசைக்கும், கன்னி உருவெழுந்து துன்பக்
     கடலசைக்கும் என்னுளெனுங் கால்!

03. மேகம் மலைசேரும், மின்னல் வெளிசேரும்
      வேகும் கதிர்சேரும் விந்தியமே! –போகும்
      ஒளியோ டிருள்சேரும், ஒண்டொடியாள் வாராது
      அளியோ டெனைச் சேரா அன்று !

04. கடலின் அலையும், கருவண் டிறகும்
      படகின் துடுப்பும், பழமும் – மடலும்
      தொடலைப் புதுமலரும், தூங்குமே! துன்பச்
      சுடலை தனிலென்னைச் சுட்டு!
                                           <0>



Thursday, October 20, 2011

பூச்சுடி வந்த நிலவு..! 1965


            

விண்தொட்டு நின்றகோ புரமே! என்னுள்
விளங்கிவர் கின்றநல் லுரமே!
பண்பட்ட நெஞ்சத்தின் எழிலே! நான்
பழகவர் கின்றநறும் பொழிலே!

பழிகாண முடியாத மணீயே எந்தன்
விழிகாண முடியாத அணியே!   
மொழிகாண முடியாத நினைவே! என்னை
முழுதாக்க வந்தகற் பனையே!

களிகாண முன்வந்த கனியே! யாரும்
காணாத பேரின்பச் சுனையே!
வழிகாண உதவிவரும் ஒளியே! பொங்கி
வழிகின்ற உள்ளத்தின் அளியே!

வாடுற்ற பயிருக்கு மழையே பொல்லா
வறுமைக்கு வாய்த்திட்ட தளையே!
தேடுற்று நிற்பாரின் இறையே நல்ல
தெளிவுற்ற பெரியோரின் பொறையே!

ஈடற்ற கலைஞானத் துறையே! மக்கள்
ஈடேறப் புகலுமரு மறையே!
நாடுற்று நானுள்ள சிறையே! இமை
நாட்டத்தின் கீழுள்ள அறையே!

 பேச்சோடு வருகின்ற ஒலியே! நெஞ்சப்
பேச்சாக வளர்கின்ற சிலையே!
மூச்சோடு பயில்கின்ற காற்றே! என்னுள்
மூண்டோடி வழிகின்ற ஊற்றே!

பூச்சூடி வருகின்ற நிலவே!ம் மென்மைப்
பூச்சோடு பொலிகின்ற கலையே!
தீச்சுடு பட்டதொரு சருகே! உன்னைத்
தினக்காண முடியாஎன் உருவே!

                       

அவளற்ற நான்..! (1965)




எழுத உதவா எழுதுகோல்! ஏரின்
உழுத்கு பயனில் உவர்மண்! முழுதுமே
காண உதவாத கண்ணாடி! கன்னிதனை
நாண மணக்காத நான்!

 முடியாத் தொடர்கதை! முற்றாத திங்கள்!
படியாத் துயர்க்கடல்! பாரில் விடியா
இரவு! மலைத்தேன் எறிந்த முடவன்!
பிறவும் இவையுமென் பேர்!

காரற்ற மேகம்! கலையற்ற வான்மதி!
நீரற்று நிற்கும் நெடுங்குளம்! தூரற்ற
சின்மரம்! ஓட்டைச் சிறுகலம்!; செந்திருவாள்
நன்மணம் கிட்டாத நான்!

சிதைபட்ட ஓவியம்! சீரற்ற சிற்பம்!
வதைப்பட்ட பல்லி! வகையாய்ப் பதிகெட்ட
பாவயாம்! இன்னும் பலவுமாம்! பேதையென்
பூவைநான் பெற்றிடாப் போது!

உடைந்த கருவி! உடுத்தொணா ஆடை!
குடைந்த மலை!கரும்பின் கோது! மிடைந்தே
இகழ்ந்ததலம்! துன்பம் இறங்குமிசை! வீணே
அகழ்ந்தநிலம் ஆமென் அகம்!