எழுத உதவா எழுதுகோல்! ஏரின்
உழுத்கு பயனில் உவர்மண்! –முழுதுமே
காண உதவாத கண்ணாடி! கன்னிதனை
நாண மணக்காத நான்!
படியாத் துயர்க்கடல்! பாரில் –விடியா
இரவு! மலைத்தேன் எறிந்த முடவன்!
பிறவும் இவையுமென் பேர்!
காரற்ற மேகம்! கலையற்ற வான்மதி!
நீரற்று நிற்கும் நெடுங்குளம்! – தூரற்ற
சின்மரம்! ஓட்டைச் சிறுகலம்!; செந்திருவாள்
நன்மணம் கிட்டாத நான்!
சிதைபட்ட ஓவியம்! சீரற்ற சிற்பம்!
வதைப்பட்ட பல்லி! வகையாய்ப் – பதிகெட்ட
பாவயாம்! இன்னும் பலவுமாம்! பேதையென்
பூவைநான் பெற்றிடாப் போது!
உடைந்த கருவி! உடுத்தொணா ஆடை!
குடைந்த மலை!கரும்பின் கோது! –மிடைந்தே
இகழ்ந்ததலம்! துன்பம் இறங்குமிசை! வீணே
அகழ்ந்தநிலம் ஆமென் அகம்!
†
No comments:
Post a Comment