ஏதேன் தோட்டம் எனதிவ் வுடலே!
நாதன் அதிலே நடப்பார் மூச்சாய்!
பூதம் ஐந்தும் புலன்களில் அடக்கம்!
சேதம் அவற்றைச் செய்வதே வாழ்க்கை!
போதம் என்பது வேதமே! புத்தி
பாதை தவறிய போதையே! புலன்களை
வாதை செய்யும் வழியது கூட்டுமே!
சோதனை இதுவே சிலுவையும் இதுவே!
பேச்சும் செயலும் மூச்சின் எதிரொலி!
கூச்சல் குழப்பம் குதித்தல் அடங்கல்
காய்ச்சல் கனிதல் காணும்நா டகமே!
வீச்சைப் பொறுத்தே விளங்கிடும் பாவமே!
ஏச்சும் புகழும் எல்லாம் மயக்கமே!
தீட்சை தெளிதலே! தேவைகள் அடங்கலே!
மாட்சி பெற்றிட ஆசையோ?
மூச்சைப் பிடித்திடு முழுதுமுன் கையிலே!
No comments:
Post a Comment