விண்தொட்டு நின்றகோ புரமே! –என்னுள்
விளங்கிவர் கின்றநல் லுரமே!
பண்பட்ட நெஞ்சத்தின் எழிலே! –நான்
பழகவர் கின்றநறும் பொழிலே!
பழிகாண முடியாத மணீயே –எந்தன்
விழிகாண முடியாத அணியே!
மொழிகாண முடியாத நினைவே! –என்னை
முழுதாக்க வந்தகற் பனையே!
களிகாண முன்வந்த கனியே! –யாரும்
காணாத பேரின்பச் சுனையே!
வழிகாண உதவிவரும் ஒளியே! –பொங்கி
வழிகின்ற உள்ளத்தின் அளியே!
வாடுற்ற பயிருக்கு மழையே –பொல்லா
வறுமைக்கு வாய்த்திட்ட தளையே!
தேடுற்று நிற்பாரின் இறையே –நல்ல
தெளிவுற்ற பெரியோரின் பொறையே!
ஈடற்ற கலைஞானத் துறையே! –மக்கள்
ஈடேறப் புகலுமரு மறையே!
நாடுற்று நானுள்ள சிறையே! –இமை
நாட்டத்தின் கீழுள்ள அறையே!
பேச்சாக வளர்கின்ற சிலையே!
மூச்சோடு பயில்கின்ற காற்றே! –என்னுள்
மூண்டோடி வழிகின்ற ஊற்றே!
பூச்சூடி வருகின்ற நிலவே!ம் –மென்மைப்
பூச்சோடு பொலிகின்ற கலையே!
தீச்சுடு பட்டதொரு சருகே! –உன்னைத்
தினக்காண முடியாஎன் உருவே!
†
No comments:
Post a Comment