01. வரிசையாய் வேலைக் கான
வழிவகை செய்து, வாழ்க்கைப்
பரிசென அரிசி ஈந்து,
பருப்புகள் எண்ணெய் ‘ரேசன்’
வரிசையில் கிடைக்கச் செய்து,
வளம்பட அடுப்பும் பொங்க
எரிதிரவ வாயு தந்தால்
ஏனிவர் கணவ ரெல்லாம்..
02. அரசியல் அதிகம் பேசி
அரட்டையில் நாளைப் போக்கி
வரிசையில் ‘டாஸ்மார்க்’ பானம்
வாங்கியே குடித்து விட்டுத்
திரிசங்கு சொர்க்கம் தேடித்
தெருவிலே கிடப்பார்? எங்கள்
தரிசனத் திட்ட மெல்லம்
தரிசெனக் கிடக்கும் அய்யோ!
03. கனவுகள் கண்ணில் தேக்கிக்
கனத்தபை முதுகில் தூக்கி
மனத்திலே கல்வி ஊக்கி
மழலைகள் பள்ளி சென்றால்
தினமொரு நியாயம் கேட்டுத்
தெருவிலே நிற்கும் வண்ணம்
மனமிலா அரசோ நாளும்
மாற்றுதே பாடத் திட்டம்!
04. காரியம் ஆற்றும் கைகள்
கடைச்சரக் கெடுத்து நிற்கும்!
கூரிய அறிவை வேண்டும்
குழந்தைகள் கொடிபி டிக்கும்!
சீரிய திட்ட மெல்லாம்
சிதறிய பாலாய் ஓடும்!
யாரினித் தமிழர் வாழ்வை
எப்படி உயர்த்து வாரோ?
<0>
No comments:
Post a Comment