Thursday, October 20, 2011

கர்த்தருக்குப் பயப்படுங்கள்



கர்த்தருக்குப் பயப்படுங்கள்! நீங்கள் கூடிக்
  காணவுள்ள பயன்சொல்வேன்! கேட்டுப் போங்கள்!
கர்த்தருக்குப் பயப்படுவோர் தம்மைச் சூழ்ந்து
  காப்பாரே அவர்தூதர்! கவலை வேண்டாம்!
கர்த்தருக்குப் பயப்படலே ஞானம்; வேறு
  கண்முன்னே பயமில்லை! குறைகள் நீங்கும்!
கர்த்தருக்குள் எல்லாமும் கண்டு கொண்டோன்,
  கைகளுக்குள் எல்லாமும் கண்டு கொள்வான்!

நம்பிக்கை அவர்மேலே வைக்க, உன்னுள்
  நலிவில்லை; வளங்களுக்குக் குறைவு மில்லை!
இன்பத்தைத் தேடிடுமோர் தேவை யில்லை!
  எந்நாளும் நன்னாளாய் இயல்பாய் வாழ்வாய்!
தம்பிக்கோ அண்ணனவர்; தாயெல் லோர்க்கும்!
  தம்பக்கம் உள்ளவர்க்கோ தளரா ஊக்கம்!
செம்பொருளாம், நல்வழியாம் அவரைச் சேர்ந்தால்
  சிந்தைக்குள் எட்டாத பயன்கள் சேரும்!

 நேர்மையுடன் வாழ்பவரை நினைவில் வைப்பார்!
  நித்தமவர் குரலுக்குச் செவிகொ டுப்பார்!
ஓர்மையுடன் அவர்நினைவை உள்ளம் வைக்க
  உன்னுள்ளே தீச்சொற்கள் வஞ்சப் பேச்சுப்
பார்வைகளோ வாராது! பலர்க்கும் நல்ல
  பயன்களையே செய்திடநீ பழகிக் கொள்வாய்!
ஊர்மையத் துள்ளநன் னீர்போல் வாழ்வாய்!
  உனக்குள்ளே அமைதிவரும்; உயர்ந்து நிற்பாய்!

ஏழைகளின் குரல்கேட்டே இடுக்கண் நீக்கும்
  இரட்சகராம் கர்த்தருனை என்றும், வீழ்ந்து
தாழவிட மாட்டாரே! தாங்கு வாரே!
  தன்முகத்தின் ஒளியுனக்குத் தருவார்! வெட்கம்
சூழவரும் நிலையுனக்குச் சேர ஒட்டார்!
  சுகப்படுவாய்! சூழ்ச்சிபல வென்று வாழ்வாய்!
வாழுகின்ற கர்த்தரினை வறட்சி யில்லா
  வாயதனால் தினம்வாழ்த்தி வந்து பாடு!
                                                                 

No comments:

Post a Comment