Thursday, October 20, 2011

ஒழுக்கம் ஓம்புக..! [தனிமனித ஒழுக்கம் சமுதாய உயர்வு]





குன்றா ஒழுக்கம் குறைவிலாப் பண்பாடு
நன்றாய் இவைகல்வி நல்குமேல்-இன்றேன்
பணத்தின்மேற் செல்லுமோ பள்ளிகள்? கற்றும்
குணத்தின்மேல் வையார் குறி!                                                    01

ஆன்ற குடிப்பெருமை ஆகிவரும் நல்லொழுக்கம்
தோன்றப் படிப்பறிவு தூண்டுமேல் -சான்றோரே
எங்கும் இருப்பர்! இருக்காதே கையூட்டும்!
தங்குமே நேர்மை தழைத்து!.                                                     02.

எல்லா வளனும் இருந்தாலும் எத்திறனும்
வல்லார் எனும்பெயரே வாய்த்தாலும் -செல்வார்
பொருளீட்ட வென்றே புலம்பெயர்ந்து; ஆள்வோர்
இருள்மூட்டு வாரன்றோ இங்கு!                                                   03

ஏனில்லை தூய்மை இதயத்தில்? இன்சொல்லில்
ஏனில்லை வாய்மை எமக்குள்ளே? -ஏனில்லை
நேர்மை செயலில், நிகழ்வுகளில்? காசாசை
சீர்மை அழிக்கும் சிதை!                                                04

பொருளையே ஆதாரம் போற்சொன்னோம்; வாழ்வை
இருளிலே வேட்டையாம் என்றோம்; - அருளில்லாக்
காட்டுள் அனுப்பியபின் காண ஒழுக்கமதைக்
கேட்டுப் பயனென்னிங் கே!                                                       05

கேட்டினால் ஈட்டிப்பின் கேளாதே கையூட்டை
வீட்டுள் இலவயமாய் விட்டெறிந்து - நாட்டுள்
குடியரசை நீட்டிக்கக் கூட்டமைப்போம்! மொட்டை
முடியரசன் ஆமோ முயன்று?                                           06

பகுத்தறியான் எல்லாம் பணமென்பான்! பண்பை
வகுத்தறிவான் வேட்டையே வாழ்வாய்த் -தொகுத்தறிவான்!
ஆன்றோர்கள் சொல்கூறும் ஆன்மீக மொன்றுதான்
ஊன்றுகோல் என்றே உணர்!                                                      07

நல்லொழுக்கம் ஆன்மீகம்! நாட்டொழுக்கம்  இங்கதனால்!
இல்லொழுக்கால் கூடும் இவையெல்லாம்- தொல்லொழுக்கின்
சான்றோர் பலரும் சரியென் றிவைசொன்னார்;
ஊன்றி இவைவளர்ப்பாய் உள்!                                  08

                                  < 0 >

No comments:

Post a Comment