Thursday, October 20, 2011

இதந்தரும் இனிய சுதந்திரம்..!




பார்த்து இரசித்திடு! படுத்து உறங்கிடு!
      பாடி எழுப்ப நினையாதே..!
கூர்த்த மதியினர் கோடியில் உள்ளனர் !
      கூவி யழைக்க முனையாதே!

ஆலைக் கள்ளில் அமோக வரும்படி;
      ஓலைக் கள்ளுக் குதைக்காதே!
சோலைக் குள்ளே சுவைக்கும் வண்டுகள்,
      சோதித்து மலரை ஒதுக்காதே!

சேர்ந்து நின்றிடு! செய்கை இன்றிரு!
      சேதம் கண்டு கொள்ளாதே!
ஊர்ந்து செல்பவர் உனைப்போல் பலருளர்!
      உதைத்துக் கொண்டு தள்ளாதே!

எங்கே இலவயம் அங்கே சென்றிடு!
      எவர்சொல் கேட்டும் துடிக்காதே!
இங்கே விதிவசம் இதுவே பரவசம்!
      ஏழையாய்த் தொடர்ந்திரு! வெடிக்காதே!

எதற்கினி உழைப்பும்! எமக்கிலை களைப்பும்!
      இதுதான் தேசிய மந்திரமே!
இதுவே சுகம்தரும், இனிய சுதந்திரம்!
      இதற்கும் மேலெது நிரந்தரமே!

(வாசல் கவியரங்கில் 01-08-2010-இல் வாசித்தது ..)


< 0 >

No comments:

Post a Comment