பாகான நம்காதல் பதத்தில் முற்றிப்
பக்குவமும் கெட்டதடி! வாழ்க்கை யென்னும்
மாகாத வழிதனிலே நீயும் நானும்
மனமறியா தெதிர்வந்தோம்! மயங்கி விட்டோம்!
ஆகாத செயலில்லை அதுவென் றாலும்
அருகுள்ளோர் விரும்பவில்லை; ஆயின் உள்ளம்
நோகாது நொந்துகொண்டோம்! நொடித்தோம்! அன்பு
நோயாக வளந்ததடி !மருந்தாய் இல்லை!
இல்லாத பொருளில்லை அன்பு நம்முள்
இருந்துமதன் பயன்காண வரவேற் பில்லை
சொல்லாத கதையில்லை நமது நெஞ்சம்
சொல்லுதற்கு மொழியின்றி வெளிப்பா டில்லை;
நில்லாத பொருளில்லை நினைப்பு நம்முள்
நெருங்கியவர் தாமுமதை நொண்டி யென்பார்!
பொல்லாத வேளையெனப் பொய்யைச் சொல்லிப்
போவதற்கும் பிரியமில்லை; புரிவா யோடி!
கண்பார்த்த போததனைக் காத்துத் தோற்றோம்!
கால்நடந்த போததனைக் கடிந்து தோற்றோம்!
பண்பு,ஆர்த்த பொழுததற்குப் பணியத் தோற்றோம்!
பலருரைத்த பொழுதுணர்ந்து பார்க்கத் தோற்றோம்!மண்பார்த்த நடைபார்த்தே மறந்து போன
வருங்காலப் பெரும்பொருளைக் கருதத் தோற்றோம்!
விண்பார்த்து வளர்ந்துள்ள கோபு ரத்தை
வியந்தன்றி யதன்பொருளை விளங்கத் தோற்றோம்!
தோற்கின்ற வேலையினைத் தொடரத் தானோ?
துன்புறுத்தும் செயல்களினித் துளிர்க்க லாமோ?
நூற்கின்ற நூலிடையில் நைந்தி ருக்க,
நூலறுந்து போவதிலே வியப்பு முண்டோ?
பார்க்கின்ற கண்ணொளியிற் குன்றிப் போனால்,
பதறாமற் குத்துவமோ? பயன்ம றந்து
வேர்க்கின்ற நிலைவிடுப்போம்; வியனி லத்தை
விளக்கிடுமோர் செயலுக்காய்ப் பிரிந்தும் வாழ்வோம்!
†