Sunday, November 27, 2011

மறைந்ததேன் பொருளே!




வெள்ளைச் சலவைத் தாளிலும் இருப்பாய்!
     வேண்டி இறைஞ்சும் குரலிலும் இருப்பாய்!!
கொள்ளை யடிக்கும் கும்பலில் இருப்பாய்!
     குடிம கன்களின் நாவிலும் பிறள்வாய்!
கள்ளமற் றோரின் கருத்துளும் இருப்பாய்!
     கருணைக் கலைவோர் கைப்பை ஒளிப்பாய்!
உள்ள தாம்பொருள் உன்னையே தேடி
     உழைப்பேன் என்கை உரசயேன் மறுப்பாய்?

மாதர் சிமிட்டும் கண்களில் ஒளிர்வாய்!
     மக்கள் கொஞ்சும் மழலையில் தவழ்வாய்!
கீதம் இசைக்கும் தட்டினிற் சுழல்வாய்!
     கிழவர் ஏக்கக் கண்களில் துடிப்பாய்!
போதைப் பொருட்களில் தடுமா றிடுவாய்!
     புண்ணியக் கோயில் உண்டியல் விழுவாய்!
வாதப் பண்டிதர் வாக்கினில் நடிப்பாய்!
     மாடாய் உழைப்பேன் மறைந்தெங் கிருப்பாய்?

                        < 0 >

Thursday, November 24, 2011

வெளிப்படும் இறைவனே! வெளிப்படும்..!


      GOD IS NOT OBVIOUS AND NOT OBLIVIOUS TOO!
    வெளிப்படும் இறைவனே! வெளிப்படும்..!

அறிவெனும் நெருப்பினில் கருகிடும் ஆவியுள்
    அன்பெனும் நீரூற்ற வாரும்!
    அருளெனும் குளிரூட்டிக் காரும்!

அகந்தையாம் புரையினால் முகங்களைக் காண்கிலேன்!
    அகற்றிடும் துயரினைத் தாரும்!
    அதன்வழி தேற்றியே காரும்!

நுண்ணிய அறிவினோய்! நுண்ணுயிர்ச் செறிவினோய்!
    நோக்கமும் ஆக்கமும் தாரும்!
    நீக்கவும், சேர்க்கவும் வாரும்!

கண்ணிலே தெரிவதைக் காட்டியேன் மறைந்துளாய்?
    கருத்திலே விருத்தியைக் காட்டும்!
    கைவரும் பலன்களைக் கூட்டும்!

வேரினில் நீரிடக் கிளைகளில் கனிவரும்
    ஏறிடும் வழியதைக் காட்டும்!
    மாறிடும் புதுமையைக் கூட்டும்!

நேரிடும் சுயநலப் பார்வையும் சோர்வுமே
    நிகழ்வதைத் தடுத்தெம்மைக் காரும்!
    இகழ்வினை விடுத்தும்முள் சேரும்!

                  <25-Nov-11>

பாரத விடியலில் பாரதி.. ..! [ஒரு கூட்டணிக்கு அழைப்பு]


மதம்என்றால்ஓருணர்வு தன்னில் ஓங்கி
     மதகின்றி வழிவதெனில் மறுப்பார் உண்டோ?
கதவென்றால் வருவோரைப் போவோர் தம்மைக்
    கட்டுக்குள் வைத்துதவும் கருவி யன்றோ!
கதவிருந்தால் அடைப்பதுவே குறியென் போரைக்
    கண்ணிருந்தும் குருடரெனச் சொல்லார் உண்டோ?
மதமிங்கு கடவுளினை மறைக்க இல்லை!
    மனவுணர்வு களைஒழுங்கு படுத்தும் வாசல்!


இதமான சிந்தனை,சொல் செயலை ஊக்கி
    ஏற்றத்தை எல்லோர்க்கும் எடுத்துச் செல்லும்
விதமாக வாழ்வதினை விளக்கி வாழ்ந்து
    வேதனைகள் கிடைத்தாலும் விரும்பி ஏற்று
முதலாவ தாயிங்கே இறந்து யிர்த்த
    முழுமுதலை இயேசுவினை முன்இ ருத்திப்
பதமான தமிழ்ப்படித்த பாவ லர்முன்
    பணிந்தவனாய்த் தொழுவான்,இக் காளி யப்பன்!


இனி : தலைப்புக் கவிதை:

வீர சுதந்திரம் வேண்டி நின்றாய் -நாங்கள்
    வேறொன்று கண்டோமோ?  -மொழி
கூறி நிற்பார் நாட்டைக் கூறிடுவார்      -அந்தக்
    கூட்டமும் தவிர்த்தோமோ?

புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும்
    பொய்யுரை என்றாயே!             -நாங்கள்
இகழுறு செயல்களை எண்ணிடார் தம்மையே
    இருக்கையில் வைத்தோமோ?

பிறந்தவர் யாவரும் இறப்பதும் உறுதியாம்
    பெற்றியைப் பேசினாயே!    -நாங்கள்
இறந்தபின் சந்ததிக் கெண்ணிலாச் செல்வமே
    இருந்திட உழைக்கிறோமோ?

மானிடப் பிறப்புமே பெறுதற் கரிதெனும்
    மாண்பினைப் பாடினாயே!   -நாங்கள்
ஊனுடல் விற்றுமே உறவுகட் காகவே
    ரினைச் சுரண்டுவோமோ?

விண்ணிடை இரவியை விற்றுவிட் டாலினி
    விடியலுக் கென்ன செய்வோம்?     -நாங்கள்
மண்ணிதில் இருப்பதை, மக்களைச்  சுரண்டுவோம்!
    மாற்றிதற்கு உண்டுமாமோ?!

மண்ணிலின் பங்களை விரும்பியே சுதந்திர
    மாண்புகள் பேசி னோம்தான்!
கண்ணிரண் டும்விற்றுக் கஞ்சிக்கு நிற்பவர்
    கண்டுமே கூசினோமோ?

 ‘வந்தே மாற்றுவோம்என்றுதான் கூவினோம்!
    வாய்ப்புகள் தேடிநின்றோம்!
தந்தார் மக்களும்! தன்னிறை வுக்கெனத்
    தவிக்கிறோம்! உழைக்கிறோமே!

வந்திடு பாரதி! வாக்குகள் கேட்டிடு!
    வாய்ப்புகள் கிட்டலாமே!
 ‘இந்தவோர் பாரத விடியலை’ப் பாரதி!
    ஏற்று,வந்து ஒட்டலாமே!
                  < 24-11-2011 >

சுயதொழில் செய்!



கற்க, கசடறக் கற்றபின், தன்தொழிலில்
நிற்க, சிறப்பின் நிமிர்ந்து!                                                                    01

கற்றதனால் ஆய பயனென்கொல்? கைகட்டி
நிற்கின் பிறர்முன்பு நீ.                                                                          02

கற்றானின் நாணுடைத்தக் கல்வி, குடியோம்பக்
குற்றேவல் ஒன்றோ குறி!                                                                   03

கற்றாரைக் கற்றாரே காமுறுவர், கைத்தொழில்
மிக்காரை ஏத்தும் உலகு!                                                                    04

கல்லானென் றாலும் உலகேத்தும் கைத்தொழிலில்
வெல்வானைப் பார்த்து வியந்து!                                                      05

காதல் சுயதொழிலாய்க் காதலி! அஃதூட்டும்
ஊதியத்தோடு ஆன்ற உயர்வு!                                                           06

ஆய்ந்தறிந்து செய்யாத் தொழிலானும், வட்டாடிச்
சாய்ந்தழிவான் தானும் சமம்!                                                           07

சென்ற இடத்தால் செலவிடாது நன்றாய்ந்து
போட்டமுதல், ஈட்டும் புகழ்!                                                             08

கொள்ளற்க வேண்டாக் கடனை! கொடுக்கற்க
கள்ளற்கே என்றும் கடன்!                                                                  09

ஈதல் இசைபட வாழ்தல் இவைகூட்டும்
நீதொழில் செய்ய நினை!                                                                  10

                        < Nov.88>

இளந்தலை வங்கியே! கிளர்ந்தெழு…!




செய்வன திருந்தச் செய்யும், சிந்தனை உளத்து வேண்டும்;
மெய்வருந் திடஉ ழைக்கும் மேன்மைநீ ஏற்க வேண்டும்!
பொய்வரும் போது கண்டு, புனைந்துரை களைய வேண்டும்!
கைவரும் செயல்கள் தேர்ந்து கடிவினை முடிக்க வேண்டும்!

அய்யநின் அடிக்கண் ஏவல், அறிந்துசெய் பவரி டத்தும்
பையவே பேச வேண்டும்; பண்புடன் உறுதி சேர்த்தே
ஐயமில் குறிப்புக் காட்டி, அவருடை நன்மை கேட்டுச்
செய்வதில் தயக்க மில்லாச் செயலினில் ஓங்க வேண்டும்!

தானையர் போல்,இல் லாத தலைவனென்று உன்னைத் தானே
ஏனையோர் கருதும் வண்ணம் ஏற்புடன் நடக்க வேண்டும்!
வானவர் தொழிலைக் கூட்டி, வந்தவர் என்றெ எண்ணி
மானமும் பரிவும் காட்டி மதிப்புடன் நடத்த வேண்டும்.

அண்டினோர் இடத்தே அன்றி, அறிவகை யில்லார், வங்கி
கண்டிலார் இடத்தும் சென்று கனிவுடன் சேமிக் கின்ற
பண்டமும் விரித்துக் கூறிப் பணமவர் கொடுக்கப் பெற்றுக்
கொண்டு,அவர் வைப்புச் சேர்க்கும் கொள்கையன் ஆதல் வேண்டும்!

உள்ளிடை ஊர்க்கண் கேட்டும், உரைமொழி தெளியத் தேர்ந்தும்,
தெள்ளிய வகுப்பால் கேட்ட தேவையை அளந்தும், பின்னர்க்
கொள்வன ஈடாய்ப் பெற்றுக் கொடுப்பன அளவில் நல்கும்
உள்ளமும் உவக்கக் காட்டி உறுதொழில் வளர்க்க வேண்டும்!

கிளர்ந்தெழு! சோர்வறு! கிளைநடத் திடு!உடன்
வளர்ந்தெழு! வாமனன் மாநிலம் அளந்தவாறு!
இளந்தலை வங்கிநாம்! இனிவரும் நாட்களில்
ஒளிர்ந்திட! உயர்ந்திட! உடன்வரும் அவனருள்!
                       < May 1983 >

Wednesday, November 23, 2011

‘தப்பாத சாவு’.


05/1965    தப்பாத சாவு..  முன்னுரை

நாம் உயிரோடிருக்கிறோம், செயல்படுகிறோம் என்பது சக்தி நம்முள் இருப்பதைக் காட்டுகிறது. அச்சக்தி நம்மைப் பிரிந்ததும் நாம் ‘சவம்’ எனப்படுகின்றோம்; ‘நேர்தலும்’ பிரிதலுமான தொழிலைக் கொண்ட ‘சாவு’ சக்தியின் மற்றோரு பெயரே என்று சொல்ல வருகிறது               ‘தப்பாத சாவு’.


குழந்தை:

 ‘ஒளியறியா இருட்குகையில் ஒருபத்து பாதங்கள்
   ஓய்ந்தி ருந்து,
விழியுணர்வோ, மொழியுணர்வோ விளங்காத நிலையதனில்
   வெறுமே உண்டு
பழியுணர்வோ, தொழிலறிவோ பாபமெனும் செயலுணர்வோ
   படிதல் இல்லாக்
குழிச்சிரிப்புக் குழந்தையெனைக் கொள்ளான்’என்று இருந்தேனைக்
   கொண்டான் தானே!

வாலிபன்:

 ‘வளர்ந்தவரை பெற்றவரின் அடிமைகளாய் வளர்ந்தோம்,நாம்
   வாலி பத்தில்
தெளிந்துள்ளோம் இப்பொழுது தானே,இவ் வுலகத்தைத்
   தெரிந்த மட்டும்
களியுந்தும் மனத்தோடும் கலந்துணர்ந்து சுவைத்திடுவோம்,
   காலன் நம்மை
அளியுந்தப் பரிவோடும் ஆதரிப்பான் எனநினைத்தேன்’
   அடடா கெட்டேன்!

பருவ மங்கை:

 ‘ பட்டினைப்போல் பவளம்போல் பளபளக்கும் கண்ணாடிப்
   பருவ மேனிக்
கட்டழகைக் கண்டுவிடின் கூற்றுவனும் ஆண்தானே
   கவிழ்ந்து, வாழ்க்கைச்
சட்டமதன் பிடிதளர்த்திச் சாவெனக்கு வாராது
   சரணிட் டோடும்;
இட்டமுடன் இருந்திடலாம் எனநினைத்தேன்’ இறுமாப்பை
   எரித்தான் அய்யோ!

குடும்பத் தலைவன்:

பெண்மனத்தின் பொருளுணர்ந்து பேருலகின் நிலையறிந்து
   பெருமை தோன்ற
மண்வளர்த்த பெரியவர்கள் மதித்துரைத்துப் புகழ்கொடுத்த
   மனைவாழ் வைநான்
உண்மையுடன் கைக்கொள்வேன், ஒளிவில்லா நெறிகளுடன்
   உணர்ந்து வாழ்வேன்;
கண்ணொளியில் லாதவனோ கூற்றுவனும்?’ எனவிருந்தேன்
   கவர்ந்தான் தானே!


துறவி:

நான்மறையும் கற்றுணர்ந்து ஞானமுடன் தனித்திருக்கும்
   நல்லோ னாக
ஆன்மநெறி நிற்பவனாய் ஆண்டனின் அருள்வேண்டி
   அமைந்த வாழ்வால்
ஊன்வெறுத்தும் உயிர்வெறுத்தும் ஒருமையுடன் ஒன்றியுள்ள ,   
    உயர்வைக் கண்டும்
தான்வருவ னோகூற்றும்? என்பா’லென்று இருந்தேனைத்
   தவிர்த்தா னில்லை!

மன்னன்:

தேர்முரசு கொடியென்றும், திரவியங்கள், நாடென்றும்
   தேடிச் சென்று
பேரரசன், வள்ளலெனப் பேரெடுக்கப் பிறர்பொருளைப்
   பிறருக்கு ஈந்து,
போர்முகத்தில் புலியெனவே புலவர்பலர் பாட்டெழுதிப்
   புகழக் கேட்டுப்
பார்முகத்தில் எனையெதிர்க்கும் பகையுளதோ? எனவுரைத்தேன்!’
   பணிந்தேன்! உண்மை!

சிந்தனைவாதி:

மனிதமனங் கல்லானால் மற்றெனது சிந்தனையே
   உளியாம்; நானோ
கனிச்சுவையும் செந்நெருப்பும் கலந்தெடுத்து வீசிவரும்
   காற்றாய்ப் பேசித்
தனித்தவழி நம்மதுவே, தள்ளாத சொர்க்கத்தின்
   திறவு கோல்,என்று
இனித்தமொழிச் சுவையுணர்வால் இயமனையும் இழுத்திடவே
   இருந்தேன்’ ஏய்த்தான்!

கவிஞன்:

ஞாலமெனது எழிற்கோட்டம்; நானிலமென் பூஞ்சோலை;
   நல்லது எல்லாம்!
சாலவும்,எல் லாமினிதே! சாவினிலும் அமைதி,அதைச்
   சார்ந்த இன்பம்!
கோலமயில் பெண்ணெனினும் குளிர்மதியின் உருவெனினும்
   குவல யத்தே,
நாலுமெனக்கு அழகேதான்! அளவில்லா நளினத்தால்
   நாட்டும் இன்பம்!

என்றெல்லாம் பித்தேறி, எழுத்தென்னும் மாயக்க்கைக்
   கோலால் பல்லாம்
நன்றென்றும் தீதென்றும் நாடாத நடைகொண்டு
   நகரைக் கூட்டி
என்றென்றும் வாழ்வேன்நான், இறவேன்,என் எழுத்துக்கள்
   இறவா மைபோல்
என்றெல்லாம் வரிகூட்டும் எழுத்தாளர் களும்,என்போல்
   ஏமாந் தோரே!’

சாவு:

பழுத்தகிழ உருவத்தான்! பாரினுக்கும் உனக்குமொரு
   பற்று நானே!
முழுத்துறவு பூண்டவர்க்கும், முத்தியடை கின்றவர்க்கும்
   முன்பு நானே!
உளுத்தமரம் எனவுதிர்ந்து, வயிரமிழந்து ஒழிந்துவிடும்
   மனிதா! உன்னுள்
அழுத்தமெனும் சக்தி,கடல் அறியாத வாறு,அதனுள்
   அமைந்த தைப்போல்

புகுந்திருந்து, சக்தியெனும் புதுமையென வாழ்க்கையினைப்
   புரட்டிக் காட்டித்
தொகுத்தவைகள் நீயறியத் துணையாகும் அறிவென்றும்
   துலங்கி நின்று
வகுத்து,உனது மனமென்ற வாய்க்காலாய் உன்னுடலில்
   வடிந்து, மாயப்
பகுத்தறிவாய்த் தோன்றிநின்று பறந்துவிடும் நான்,நீ,தப்
   பாத சாவே!

மீனினங்கள் உயிர்வாழத் தண்ணீரிற் கலந்துதவும்
   காற்றாய் நிற்பேன்!
தேனிருக்கும் அடைநிரப்பத் தேவையதை விருத்திசெயும்
   திரட்டாய்ப் பூவில்
நானிருப்பேன்! அரசாட்சி நடத்திடுவேன்! புரியாமல்
   நான்,நான் என்று
மானிடனே! வீணாய்,ஏன் வாய்வீச்சு? நான்நீ,தப்
   பாத சாவே!

                                  < 0 >

இதயம் ஒரு கடிகாரம்..!


 [ மார்ச்சு.1967  ]     

காலத்தை அளப்பதற்கே கருவி வேண்டிக்
   கதிரவனின் பெயர்ச்சிதனைக் கண்ட மக்கள்
வாலொளிதன் தோற்றமுடன் மறைவும் சேர்த்து
   வாய்ப்பதனை நாளென்று வகுத்தார்; அந்த
மேலொளியின் பெயர்ச்சியதோ போலித் தோற்றம்!
   மேதினி,தன் அச்சினிலேசுழலத் தோன்றும்!
ஞாலமெலாம் ஒப்பிடினும், இந்தக் காலம்
    ‘நாடி’மணி நின்றோர்க்கோ இறந்த காலம்!

ஒவ்வொருவர் நெஞ்சுள்ளும் ஓடும்! ஆனால்
   உணர்ந்தும்,ஒலி கேட்பதிலை, உடையோர் காதும்!
எவ்வொருவர் முயற்சிக்கும் இதனைப் போன்றே
   இன்னொன்றைப் படைப்பதெனல் இயலா தாகும்!
அவ்வவரே முயன்றிடினும் அடங்காது ஆனால்
   அடங்கியபின் ஆயிரம்தான் செய்தும் ஒடா(து)!
இவ்வரிய கடிகாரம் இதயம் ஒன்றே!
   இதுநிற்கக் காலமவர்க்கு இறக்கும் தானே!

                                      < 0 >

Tuesday, November 22, 2011

மன்றம்..!

மன்றம் என்பது நன்றாய்ந் திடுமிடம்!
ஓதும் பொருளிற் பேத மிருப்பினும்
வாதிற் கதனை ஏதாக் கொளலின்
தீதிற் குதவும் சாத கம்,என
எண்ணார் குழுமி, இயற்றும் பொருள்சேர்
நண்ணற் கினிய நடைபயில் மொழிகொடு,
பண்ணும் குரலும், பாடல் ஒழுக்கும்,
பரதமும், அபிநயப் பண்பும் குணனும்
உரைநடை வளமும், உளநூல் முறையும்,
மறையும், பொருளும், மத, உயிர் வாழ்க்கை,
நெறிமுறை தானும் நெடுவிண் தொட்ட
மான அறிவின் வான இயலும்,
தத்துவ சாரமும் வித்தக ராம்நிலப்
புத்திரர் வாழ்வும் பூமி இயலும்
வரலா றென்ற வகைதொகை நலனும்
திறனாய் வுடனே தெரிந்து சுவைத்து,
தேவை நினைத்து நோவை யகற்றி
அலகில் அறிவின் அகலமும் ஆழமும்
உலவிக் காட்டி உவப்புடன் கூட்டித்
தவப்பய னாம்,உயிர் அவமே பொழுதை
அழிக்காது உயர ஒளியைக் காட்டிப்
பதறாப் பண்பும், பயன்சால் உழைப்பும்
கூடிட நாட்டிற் சோடைகள் நீக்கும்
எண்ணம் உளத்தில் எடுக்கும்
திண்ணியோர் கூட்டில் திறன்விளை களமே!

                                    < 0 >

தொல்லைகள் மறப்போம்..!

அகிலம் முழுதும் ஒன்றாய் வாழ
    ஆவன செய்வோமே!  - அதற்காம்
    ஆவணம் செய்வோமே!  -நல்
முகிலும் வானும் போலே இணையும்
     முயற்சிகள் செய்வோமே!  - நமது
     முயற்சியில் உய்வோமே!

பகையும் வறுமைப் பிணியும் தீரப்
     பணிகள் எடுப்போமே!   -இன்னும்
     பணிகள் கொடுப்போமே!  -நல்ல
நகையும் நட்பும் அன்பும் நெஞ்சில்
      நட்டதை வளர்ப்போமே!   -நிலையாய்
      நட்டதில் வளர்வோமே!

சொல்லும் செயலும் சிந்தனை அழகும்
     சோம்பிடப் பண்ணோமே!  -நாமதை
     ஓம்பிடக் கண்ணாமே!  -தருமம்
வெல்லும் வெல்லும் வெல்லும் என்பது
     விளங்கிடும் பண்ணாமே!  -ஞாலம்
     விளங்கிடும் ஒண்ணாமே!

கல்லும் முள்ளும் கிடக்கும் நிலத்தில்
     கழனிகள் காண்போமே!  -எதிலும்
     விழலினிக் காணோமே!
புல்லும் பூண்டும் பாரதப் புகழைப்
     பேசிடக் காண்போமே!  -இனிப்
     பேசிடக் காண்போமே!

நல்லோர் வாயில் நல்லன கேட்டு
     நன்மைகள் பெறுவோமே!  -பலவாம்
     நன்மைகள் பெறுவோமே!  -ஒன்றாய்ப்
பல்லோர் கூடிப் பகுத்துணும் நிலையே
     பண்பெனத் தருவோமே!  -உலகில்
     பண்பெனத் தருவோமே!   

எல்லா நாட்டின் மக்களும் இங்கே
     எம்முடன் பிறந்தோரே! -இங்கே
     எம்முடன் பிறந்தோரே - நம்
 எல்லாக் கைகளும் சேர்ந்தே செயல்பட
      எல்லைக டந்தோமே! - இன்ப
      எல்லைக டப்போமே!

                              < 0 >

Monday, November 21, 2011

குறும்பாக்கள்-குழலின் முயற்சி,மனைவி,உயர்கநாடு,கோடைவானம்.

குழலின் முயற்சி..

ஊதியது ஒருவாய்
அடைத்த்தோ நான்கு விரல்கள்
இருப்பினும்
நாதமாய் நான்..!
< 0 >


மனைவி..
கடவுளின் தூதன்
கடமைகளின் நாட்காட்டி
உடைமைகளின் காவலன்
உள்ளத்தின் மகிழ்ச்சி
நினைவுகளின் ஊற்று
நெஞ்சத்தின் அமைதி
கனவுகளின் கடிகாரம்
காதலின் நிறமாலை
உறவுகளின் அச்சாணி
உடலுக்கு உயிர்மூச்சு..!
                < 0 >


11/ ’98 உயர்க நாடு..!
குப்பைகொட்டி வாய்க்காலும் தூர்ந்து போச்சு!
குளமெல்லாம் மேடாகி வீடே ஆச்சு!
‘மப்பு’கட்டிப் பணம்பண்ணும் மனிதர் வந்து
மண்டியதால் அரசியலும் ‘மண்டி’ யாச்சு!
கொப்புகட்டி ஊஞ்சலிடும் குழந்தை கூடக்
’குச்சிகட்டி’ வருமானம் தேட லாச்சு!
உப்பு,புளி வெங்காயம், உணவு,இ ருக்கை
உத்திரவா தம்மில்லை! உயர்க நாடு!

                          < 0 >


கோடை வானம்..!
குலுக்கல் அழகிகளும்
குத்துவெட்டுச் சண்டைகளும்
விலக்கி வெளிவந்த
வெள்ளித் திரைப்படம்போல்
விளங்கும் ஒரு வானம்..!


                 < 0 >

Friday, November 18, 2011

குறும்பாக்கள்..

ஏறும் விலைவாசிக்கு

ஏணி வைத்திடுவோம்..
வறுமைக் கோட்டின்
வரம்பை உயர்த்துவோம்..
              ======

மக்கள்(சன) நாயகம்..

   மக்களுக்காக
   மக்களை வைத்தே
   மக்களைக்
   கொள்ளையடிப்பது

                 ========

இந்திரனுக்கு இருக்கட்டும்
உடம்பெல்லாம் கண்கள்..
எனக்கு வேண்டியது
இருப்பைச் சுற்றி
ஏராளமான கைகளே..
இலவசங்கள் வாங்க..

                ==========

கருப்பினை அன்று
காகிதம் மணந்தது..
கைகளில் அன்று
கவிதை பிறந்தது..
வெறுப்பினை இயேசுவின்
பொறுமையும் வென்றது..
விடியலைச் சிலுவையில்
உலகமும் கண்டது..

                        †

சேருவீர்..! பாடுவீர்..!




கற்றவர் களிக்கும் சோதி!
     கயவரே கலங்கும் நீதி!
உற்றவர்க்கு உதவும் ஆதி!
     உணர்ந்தவர்க்கு உயிரின் பாதி!
குற்றமே உணர்ந்து, நெஞ்சம்
     குழைந்துவந் தோர்க்கு வாதி!
அற்றமே காத்துத் தன்னோடு
      அணைத்திட வரும்,நம் நாதி!

பற்றினுக்கு உரிய சாதி!
     பகைமையை அழிக்கும் தாதி!
முற்றிலும் மன்னிக் கின்ற
     முரண்தொடை கூட்டும் வீதி!
சொற்றிறம் என,இ ருந்து
     சுந்தர மனித னாகி
நற்றிறம் வாழ்ந்து காட்டி
     நமையெலாம் காக்கும் வேதி!

அய்யனை உணர்ந்து பாடு!
     அருந்தவ வாழ்வு நாடு!
மெய்யென வருவோர் கூடு!
     மேதினம் அதுவென்று ஆடு!
கைவரும் நலங்கள் சேரு!
     கவலைகள் விட்டு வாழு!
செய்யரும் செயல்கள் தேரு!
     சேர்ந்துவாழ்ந்து உயர்ந்து மீளு!

                                    †

வரையில்லா வாழ்வு வந்தது, எம் மீட்சி கொண்டு!


வெய்யோனொளி, குருசேறினன் விரிகைகளில் மறைய,

மெய்யேஇவர் மகனேஒரு தேவர்க்கெனச் சிலரும்,

அய்யோஇது தகுமோதுயர் அடுமோஎனச் சிலரும்,

மெய்சோர்ந்தனர்! மிடிசேர்ந்தனர்! மிகவேதனில் அழிந்தே!


விரிந்தன கைகள், எங்கள்

     விலங்குகள் உடைய என்று;

சரிந்தது தலையும் உந்தன்

     சனமெமைக் கண்டு கொள்ள;

சொரிந்தது குருதி, நாங்கள்

     சுனையதில் மூழ்கி மீள;

மரித்ததும் உடலே! எம்மை

     மறுபடி எழுப்பிக் காட்ட!


நீள்வரை குலுங்கிற்று அன்று,

     நின்னுளெம் சுமைகள் கண்டு!

கோள்களும் மறைந்த உம்மேல்

     கொடுமைகள் இழைக்கப் பார்த்து!

தாழ்திரை மேல்கீ ழாகத்

     தன்னுளே கிழிந்தது அன்று!

வாழ்,வரை யில்லா வாழ்வு

      வந்தது,எம் மீட்சி கொண்டு!

                              < † >

குரோம்பேட்டைத் திருக்குறள் பேரவைக்கு ஒரு பாராட்டு..



சுற்றுப் புறத்தினை முற்றும் கெடுத்தது

பற்றிச் சினந்திடல் மாணடி! -மேகம்

சுற்றி முகத்திலே நெற்றி மறைத்துநீ

ஒற்றி நடப்பது வீணடி! -நிலவே

முற்றிக் குறைவது நாணடி!


கல்வி நிறைந்தவர் வெல்லும் மொழியினர்

சொல்ல மறுப்பதுன் சோகமோ? -நெஞ்சம்

கல்லென் றிருத்திநீ புல்லென் றுனக்குளே

மெல்லக் கறுவுதல் ஆகுமோ? -நிலவே

சில்லென் றிருப்பதும் போகுமோ?


நல்ல நினைப்பினர் வெல்லும் முனைப்பினர்

மெல்ல இணைந்தனர் பாரடி -தங்கள்

வெல்லத் தமிழினில் சொல்லும் வகையினில்

ஒல்கும் பகையிது தேரடி! நிலவே!

அல்கும் முகக்குறை தீரடி!


                         (வேறு)

எழுத்தில் உயர்ந்த வள்ளுவனை

     எண்ணம் சிறந்த பலர்கூடி

வழுத்திப் பேசிக் கேட்போர்க்கு

     வழிகள் காட்ட வந்தனரே!

அழுத்திப் பேசி அவர்சொன்ன

     அத்தனை பேச்சும் மணியன்றோ!

தழைத்து வாழ்க இவர்முயற்சி!

      தரணி பெறட்டும் பலயெழுச்சி!

                               (வேறு)

தென்பொதிகை இளங்காற்றைத் தேன்வழியும் மதிக்கீற்றைத்

தெம்மாங்கின் பொலிவேற்றுத் தெறித்துவிழும் அன்பூற்றை,

எம்மோர்க்குத் தமிழூட்டை, எதிர்ப்புகளின் வாய்ப்பூட்டை,

செம்மாந்த திறங்கண்டு சிறப்பூட்டும் கற்கண்டை

அம்மானை! இளங்கோவை! அடிபணிந்தே ஏத்துவனே!

                                                 < + >

நிலவே முகக்குறை தீரடி..!



சுற்றுப் புறத்தினை முற்றுங் கெடுத்தது

பற்றிச் சினந்திடல் மாணடி! மேகம்

சுற்றி முகத்திலே நெற்றி மறைத்துநீ

ஒற்றி நடப்பது வீணடி -நிலவே!

முற்றிக் குறைவது நாணடி!                                                 01


கல்வி சிறந்தவர் வெல்லும் மொழியினர்

சொல்ல மறுப்பதுன் சோகமோ?-நெஞ்சம்

கல்லென் றிருத்திநீ புல்லென் றுனக்குளே

மெல்லக் கறுவுதல் ஆகுமோ? -நிலவே

சில்லென் றிருப்பதும் போகுமோ?                                       02


ஏரி மடக்கியே கூரை போடுவார்

சேரி உயர்த்திடப் பாடுவார் -நாங்கள்

‘லாரி’ நிரப்பியே சேரும் வாக்குகள்

வாரி இறைத்திடல் குமுறியோ -நிலவே

‘காரி’ பனியென உமிழ்வையோ?                                          03


நல்ல நினைப்பினர் வெல்லும் முனைப்பினர்

மெல்ல இணைந்தனர் பாரடி -நாளை

சொல்லும் வகையினில் சூழும் தேர்தலில்

செல்லும் பதில்தரு வாரடி! -நிலவே

அல்கும் முகக்குறை தீரடி!                                                         04

                                              < 0 >

Thursday, November 17, 2011

சாட்சி..

தோழி:                        ஆர(ல்)மீன் குருகு பார்த்தே
                                                  அமைந்தவோர் நதியின் ஓரம்
                                       நீரகல் தவளை கூவி
                                                     நித்தமும் சொல்லி நிற்க
                                      வீரனை அணைந்த போது
                                                    வேறு,ஒரு சாட்சி யில்லை!
                                      யாரிடம் சொல்லு வாய்நீ?
                                                     யாதுநாம் செய்யப் போமோ?

தலைவி:               தேடிய கண்கள் சாட்சி;
                                                  திறந்தவாய் மீன்கள் சாட்சி!
                                 கூடிய புட்கள் சாட்சி;
                                                குளிர்மலை அருவி சாட்சி!
                                 பாடிய குயிலும் சாட்சி;
                                                பதுங்கிய நிலவும் சாட்சி!
                                ஓடிய   தலைவ னோடென்
                                                உள்ளமும் இருக்கும் சாட்சி!

                                                                 †

Monday, November 14, 2011

கண்ணுறங்கு மகளே! கண்ணுறங்கு..!


[முதலமைச்சர் பிறந்த நாளுக்கு ஏழைகளுக்கு 5 படி அரிசி அளிக்கப்படும்-செய்தி]

கண்ணுறங்கு மகளே!நீ
        கண்ணுறங்கு! கண்ணுறங்கு!
கஞ்சி யின்னும் வரவில்லை
       கண்ணுறங்கு! கண்ணுறங்கு!

அரசாணை வரவில்லை,
       அஞ்சுகமே கண்ணுறங்கு!
அதுமெல்லப் பிரசவிக்கும்!
       அதுவரைக்கும் கண்ணுறங்கு!

பஞ்சையென் வாழ்வினிலே
       பட்டுப்போல் வந்தவளே!
பஞ்சமிது பட்டுப்போம்
       நாள்வரலை கண்ணுறங்கு!

நெஞ்சுதைத்துப் பயனில்லை!
      நேசமணி ! கண்ணுறங்கு!
நெடுநாளைக் கனவிதுவும்
      நிசமாகும் கண்ணுறங்கு!

காரிருளை மையாக்கிக்
        கண்களிலே இட்டவளே!
நீராலே தரைநனைய
       நிலமகளும் தாங்காளே!

நீராடி அப்பனுமே
      நெடுங்கிடையாய்க் கிடக்கின்றான்!
போராடி அழவேண்டாம்!
      பொய்த்தூக்கம் அவன்கலையான்!

உன்பிறந்த நாளிதிலே
       உழக்கரிசி வீட்டிலிலை!
ஏன்பிறந்தாய் எனக்கேட்க
      என்மனசு தாளவில்லை!

எட்டுப்பட்டி ஊர்த்தலைவர்
       எடுக்கின்றார் பிறந்தநாள்!
கிட்ட,இதோ நாள்வருது!
       கிடைக்குமடி அரிசியுமே!

தட்டித் தவிடெடுப்பேன்!
       தரமான பாலிடுவேன்!
கட்டித் தங்கமேநான்
       கஞ்சியுமே தந்திடுவேன்!

கட்டிவெல்லம் இட்டுத்தாரேன்!
       கற்கண்டும் அதிலிட்டுக்
கட்டாயம் நான்தாரேன்!
       கரையாதே கண்ணுறங்கு!

காவி சுவர்விட்டுக்
        கழன்று விழுகுதடி!
ஆவி போவதுபோல்
        அழுவாதே பொறுத்திடடி!

துன்பம் பழகிக்கொள்!
        தூங்கிடவும் கற்றுக்கொள்!
அன்பே! இரத்தினமே!
        ஆருயிரே! கண்ணுறங்கு!

கண்ணுறங்கு மகளேநீ
          கண்ணுறங்கு! கண்ணுறங்கு!
கஞ்சி யிதோ வந்துவிடும்
          கண்ணுறங்கு! கண்ணுறங்கு!

                                < 0 >



இன்றைய பாமரன்..!


வறுமையெனும் கோட்டிற்குக் கீழே வாழ்வான்!
         வாழ்க்கையெனும் மேட்டிற்குப் படியாய் நிற்பான்!
பொறுமையெனும் கோட்டிற்குக் கீழே ஊர்வான்!
        போலிகளை விற்பதற்குச் சந்தை யாவான்!
உரிமையெனும் கம்பெடுத்தார் கையில் ஆடி,
        உண்பதற்கே அவர்விரித்த இலையாய் வீழ்வான்!

சாதியெனும் கோலத்தில் புள்ளி யாவான்!
        சாய்க்கடையில் நெளிகின்ற புழுவாய்ப் போனான்!
வாதியெனும் வாழ்க்கையின்முன் தோற்று நிற்பான்!
       வாக்குடையோர் பட்டியலில் வாழ்ந்தி றந்தான்!
சோதியெனும் தேசத்தின் சொத்தாய் நிற்பான்!
       சூழ்நிலையின் கைதியிவன் மவுனி யாவான்!


                                               < 0 >

சிரிப்பிலே எழுந்த கவிதை..!

வானம் சிரிக்கக் கண்டேன் -மழைநீர்
                  வந்தே விழுந்தது!
மேகம் சிரித்து நின்றது -கண்ணில்
               மின்னல் தெறித்தது!


நிலவு சிரித்து மறைந்தது -வின்மீன்கள்
               வானை நிறைத்தன!
கடலும் சிரித்துக் குதித்தது  -மீன்கள்
                கரையில் துள்ளின!
அலைகள் சிரித்து நகர்ந்தது -கரையில்
                அலவன் ஒளிந்தது!
மரங்கள் சிரித்து நின்றன -கிளையில்
                 மலர்கள் மணந்தன!


களவு சிரித்துக் கலந்தது -ஊருள்
             அலர்கள் பரந்தது!
உழைப்புச் சிரித்துக் களைத்தது -உடலில்
             வேர்வை பூத்தது!
குழந்தை சிரித்த போதோ -எதிரில்
              கடவுள் தெரிந்தது!


என்னவள் சிரித்து நகர்ந்தாள் -நெஞ்சில்
              ஏக்கம் பிறந்தது!
எட்டி நடந்து மறைந்தாள் -என்முன்
              பிரிவு சிரித்தது!
கவிஞன் சிரித்து நின்றான் -உமக்குக்
             கவிதை கிடைத்தது!
                                    < 0 >