Wednesday, October 5, 2011

பாம்பணையை விட்டெழுந்து வாரும்..!

நித்தநித்தம் இலவயங்கள் நேர்வருமோ என்றேங்கிப்
புத்துணர்ச்சி நீர்குடித்துப் புரள்எங்கள்  துயர்களையச்
சொத்துபல ஒளித்துவைத்துச் சுகமாகத் தூங்குகின்ற
பத்மனாபச் சாமிகளே! பாம்பணையை விட்டேழுமே!              01

கல்வியாம் ஞானக்  கண்ணடைக்கும் பள்ளிகளே!
கொல்விடப் போதைக் குடிதிறக்கும் குடியரசே!
நில்எனாது ஏறி நிலவிருக்கும் விலைபொருளே!
சொல்லொணாச் செல்வச் சொத்தெதற்கோ சுரர்,அரசே!        02

முத்துரத்னப் பவளநகை மூட்டைகளைப் பின்மறைத்துப்
பத்தெதுவும் அற்றவன்போல்ப்   படுத்துறக்கம் கொள்பவரே!
சொத்தழித்துச் சுரர்களுக்குச் சுடர்க்கல்வி தரவென்று
நித்தநித்தம் அலைகின்ற நிலைக்கிரங்கி உதவிடுமே!            03

அடுக்கியபல் லாயிரத்தில் அலங்கார நகைபலவும்
மடக்கியுமது அங்கணத்துள் மறைத்துறக்கம் செய்பவரே!
உடுக்கையிழந்து ஓலமிட்டே ஓங்காரம் பயில்விக்க
நடுத்தெருநா ரணனானோம் நலிவெமது தீருமையா!             04

பாத்தாயி ரங்கோடி பலலட்சம் என்றெல்லாம்
சொத்துநீர் மறைத்துள்ள  சொற்கேட்டேம் அரசியலார்
பித்தாட்டம் விடப்போமோ?  பிறகுஎங்ஙன் துயர்களைவோம்?
பத்திவிட்டுப் போவோமோ? பயங்களைய எழுமைய்யா !      05

                                                          <0> 

கடவுளின் மனிதர்

            ஏசுவின் மலையில் அவர் வீட்டில் ,
                     என்றுமே வாழ்வார் எவர்? சொல்லும்.
           ஆசையின் வழி மேற் செல்லாரே ;
                   அறநெறி கெட்டோர் அண்டாரே !
            பூசைகள்  அவர்க்கே  செய்வாரே!
                    பொன்னடி மறவார் மதிப்பாரே!
           மாசறு  நெஞ்சம் உடையோரை ,
                   மறுத்துகை யூட்டை வாங்காரே !   

          பூரியார் அழிக்கும் தேவனவர்
                    புகழுக் கஞ்சி வாழ்பவரே!
          நேரிய  செயல்கள் செய்பவரே!
                    நெஞ்சறி உண்மை நவில்பவரே!
           சீரிய செய்யார் நட்பினையே ,
                      சிந்தனை செய்யா நல்லவரே!
           சேரிடர் எதுவாய் இருந்தாலும்
                      செய்தவாக் குருதி மீறிலரே!

           மாறிய வாக்கோர் மதியாரே ,
                       மதிக்கும் அன்பர் தமக்கென்றும்
           ஊறுறும்  செயல்கள் செய்யாரே!
                       ஒழிவிடத் திகழ்ச்சி பேசாரே! 
           கூறுவார் வாசம் சீயோனில் 
                       கொண்டவர் புகழே ! அவர்சொல்லை 
           மீறுவோர் கூட்டை  எண்ணாரே!
                         வெஞ்சினம் நீக்கி வாழ்வாரே!

           அடைக்கலம் கர்த்தர் என்பார்!
                        அவரையே தலைவர் என்பார்!
            எடுக்கிலம் கர்த்தர் அன்றி 
                       எவரது பெயரும் நாவில் 
           அடுக்கிய கோடி கண்டும் 
                      அடிமையாம் அவர்க்கே என்பார்!
           கொடுக்கிலம் இரத்தம் சிந்தும் 
                     கொடுமையின் பலிகள் என்பார்!     

            ஏசுவின் மலையில் வீட்டில் இருப்பவர் இவரே காணும்!

                                                          <௦>

தம்பழி மனிதர் நீக்கத் தயவுகள் காட்டும் தேவா!


துன்பமே கொடுப்போர் விட்டுத்
      தூரமே வையும் என்னை!
முன்னரே நியாயத் தீர்ப்பை
      மொழிந்தவர் நீரே அன்றோ?
என்னிலே நியாயம் உண்மை
      இருப்பதை அறிந்தீ ரன்றோ?
உன்னதத் திருந்தெ ழுந்தே
      உடனொரு நியாயம் செய்யும்!         01

என்னுடன் இணங்கி னோர்க்கே
      ஏதொரு தீதும்  செய்யேன்;
என்னொரு பகைவ னுக்கும்
      ஏற்றவோர் கார ணந்தான்
முன்னிலாப் போது மேற்போய்
      மூர்க்கமாய்த் தாக்கி  லேனே!
என்னிலை நியாயம் கண்டே
      இரங்கிநீர் காக்க வாரும்!              02

 நீதியின் தேவ தேவே!
      நீரெம்,உள் புலன்கள் தம்மைச்
சோதனை செய்து கொள்ளும்;
      சுத்தமாய் உள்ள பேர்க்கே
நீதியின் படியே, ஏற்ற
      நியாயமும் செய்ய வாரும்!
நீதியை நிலைக்கப் பண்ணும்;
      நீசனை ஒழித்துக் கட்டும்!             03

செம்மையின் வழியே செல்வோன்
      சிரசுக்குக் கேட கம்நீர்!
உம்முளே சினத்தீ தோன்றி
      ஊற்றுமே பாவி கள்மேல்!
சிம்மமாய் எழுந்த நீசன்
      சிந்தையில் கர்ப்பம் கொண்ட,
மும்மலப் பாவம் கொல்ல,
      முழுப்படை ஏந்தி வாரும்!             04
‘தம்வினை தம்மைத் தாக்கும்,
      தன்குழி தனக்கே ஆகும்
இம்மொழி நிற்கும் வண்ணம்
      எழுந்துநீர் சாத்தா னுக்காய்
உம்முளே எடுத்து வைத்த
      ஒருபல ஆயு தங்கள்,
செம்மையோர் வாழ என்றே,
      சேர்த்தவன் தலைமேற் கொட்டும்!      05

உம்மொழி வேத வாக்காம்!
      உம்வழி நீதிப் போக்காம்!
உம்கழி செம்மைக் கோலாம்!
      உம்இழி வேதும் இன்றாம்!
தம்பழி மனிதர் நீக்கத்
      தயவுகள் காட்டும் தேவா!
உம்வழி யுன்ன தத்தை
      உணர்ந்துநான் பாடு வேனே!           06