துன்பமே கொடுப்போர் விட்டுத்
தூரமே வையும் என்னை!
முன்னரே நியாயத் தீர்ப்பை
மொழிந்தவர் நீரே அன்றோ?
என்னிலே நியாயம் உண்மை
இருப்பதை அறிந்தீ ரன்றோ?
உன்னதத் திருந்தெ ழுந்தே
உடனொரு நியாயம் செய்யும்! 01
என்னுடன் இணங்கி னோர்க்கே
ஏதொரு தீதும் செய்யேன்;
என்னொரு பகைவ னுக்கும்
ஏற்றவோர் கார ணந்தான்
முன்னிலாப் போது மேற்போய்
மூர்க்கமாய்த் தாக்கி லேனே!
என்னிலை நியாயம் கண்டே
இரங்கிநீர் காக்க வாரும்! 02
நீதியின் தேவ தேவே!
நீரெம்,உள் புலன்கள் தம்மைச்
சோதனை செய்து கொள்ளும்;
சுத்தமாய் உள்ள பேர்க்கே
நீதியின் படியே, ஏற்ற
நியாயமும் செய்ய வாரும்!
நீதியை நிலைக்கப் பண்ணும்;
நீசனை ஒழித்துக் கட்டும்! 03
செம்மையின் வழியே செல்வோன்
சிரசுக்குக் கேட கம்நீர்!
உம்முளே சினத்தீ தோன்றி
ஊற்றுமே பாவி கள்மேல்!
சிம்மமாய் எழுந்த நீசன்
சிந்தையில் கர்ப்பம் கொண்ட,
மும்மலப் பாவம் கொல்ல,
முழுப்படை ஏந்தி வாரும்! 04
‘தம்வினை தம்மைத் தாக்கும்,
தன்குழி தனக்கே ஆகும்’
இம்மொழி நிற்கும் வண்ணம்
எழுந்துநீர் சாத்தா னுக்காய்
உம்முளே எடுத்து வைத்த
ஒருபல ஆயு தங்கள்,
செம்மையோர் வாழ என்றே,
சேர்த்தவன் தலைமேற் கொட்டும்! 05
உம்மொழி வேத வாக்காம்!
உம்வழி நீதிப் போக்காம்!
உம்கழி செம்மைக் கோலாம்!
உம்இழி வேதும் இன்றாம்!
தம்பழி மனிதர் நீக்கத்
தயவுகள் காட்டும் தேவா!
உம்வழி யுன்ன தத்தை
உணர்ந்துநான் பாடு வேனே! 06
No comments:
Post a Comment