Thursday, October 20, 2011

நம்பிக்கை தளராதே சங்:42


   
நீருக் கலையும் கலைமான்போல்,
   நிமலா! நெஞ்சும் கலங்கக்,கண்
நீரைக் குடித்துப் பகலிரவின்
   நினைப்பும் இன்றித் தவிப்பேனே!
வேரிற் கொட்டும் வெந்நீராய்
   வெஞ்சொல் மாந்தர் சொல்கின்றார்:
‘யாருன் கடவுள்? அவரெங்கே?
   யானென்  சொல்வேன்? செய்வேனோ?

 தெள்ளத் தெளிந்த நீர்போலும்
   தேவை அறிந்த தாய்போலும்
அள்ளித் தெளித்த பனிபோலும்
   அலையாய்த் தழுவும் அன்போனே!
வெள்ளி முளைக்கும் வேளையிலும்
   விடியா இரவுப் பொழுதிலுமே
உள்ளம் புழுங்கி அழுகின்றேன்!
   உம்மை நினைத்துத் தொழுகின்றேன்!
  
கறையில் லாத தூயோனே!
   கரையில் லாத அன்போனே!
துறையாய் இருந்து காப்போனே!
   துதிப்போர்க் கே,செவி சாய்ப்போனே!
மறைகள் காட்டி நடந்தோனே!
   மனிதர் உய்யப் பிறந்தோனே!
மறைந்தே கைவிட் டொளித்தாயோ?
   மாற்றார் கேலி பேசிடவோ?
  
நம்பிக் கைநான் கெடமாட்டேன்!
   நன்றி  மறந்து விடமாட்டேன்!
வெம்பித் தளர்ந்து வீழ்ந்துவிடேன்!,
   விரக்தி கொண்டு தாழ்ந்துவிடேன்!
எம்பி ரானும் நீரன்றோ!
   என்றும் வாழும் இறையன்றோ!
அம்ப ரத்தில் இருந்துமுகம்
   அடியேன் மேல்வைத்து அருள்வீரே!
  
யோர்தான், எர்மோன், மீசாரில்
   இருந்து கலங்கித் தவிக்கின்றேன்!
நீர்தான் எல்லாம் என்றுள்ளேன்!
   நெருங்கி வரக்காத் திருக்கின்றேன்!
சோர்வேன்! தளர்வேன்! என்றாலும்
   சொந்தம் கூடி உடன்வரவே
ஓர்நாள் உமதா லயத்துள்ளே
   உருகிப் பாடி வருவேனே!

நம்பி னார்க்கே அருள்கின்ற
   நதியே! கடலே! நறும்புனலே!
எம்பி ரானே! கற்பாறை,
   என்றென் வாழ்வைத் தாங்கிடுவோய்!
‘கம்பி காய்ச்சி என்புருவக்
   காயம் செய்தாற் போற்சொற்கள் 
அம்பில் இட்ட இரும்பாக
   அவற்றை அழிக்க வருவீரே!

நம்பிக் கைநான் கெடமாட்டேன்!
   நன்றி  மறந்து விடமாட்டேன்!
வெம்பித் தளர்ந்து வீழ்ந்துவிடேன்!,
   விரக்தி கொண்டு தாழ்ந்துவிடேன்!
எம்பி ரானும் நீரன்றோ!
   என்றும் வாழும் இறையன்றோ!
அம்ப ரத்தில் இருந்துமுகம்
   அடியேன் மேல்வைத்து அருள்வீரே!

       

கண்ணீரைத் தினங்குடித்துக் காத்து நிற்கிறேன்! உன்
காலடியில் நான்நடந்து சோர்ந்து நிற்கிறேன்!
தண்ணீரைத் தேடுகின்ற கலைமான் போலே உன்
தயவுக்கே இரவுபகல் தவித்து நிற்கிறேன்!!
வெண்ணீராய் எனக்குள்ளே பூத்து நிற்கிறேன்! நீ
விலகிடவே பிறரிகழப் பார்த்து நிற்கிறேன்!
மண்ணூறும் தோண்டிடவே! கண்டி ருக்கிறேன்! நீ
மறுத்துவிடின் வாழ்வதுபோல் மாண்டு நிற்கிறேன்!

                                 

No comments:

Post a Comment