Thursday, October 20, 2011

உலகமொழி அனைத்திற்கும் தமிழ் முகப்பு!




மண்ணென்றால் அதன்முகப்பு வயலே ஆகும்!
      மதியென்றால் அதன்முகப்போ அடக்க மாகும்!
தண்ணிலவும் அல்லிருட்டின் முகப்பே ஆகும்!
      தளிரிதழ்கள் காதலியின் முகப்பாம்! அன்னாள்
கண்ணிரண்டும் அவள்காதல் முகப்பாம்! அன்னை
      கையிரண்டும் கருணைக்கு முகப்பாம்! சொல்லும்
எண்களுக்கோ முகப்பு,ஒன்று! சூனி யத்தின்
      முகப்பெங்கும் தேடாதீர்! என்னைப் பாரும்!


தாழ்விற்கு முகப்பெதிலும் தயக்கம் காட்டல்!
      தன்னம்பிக் கைமுகப்பு வெற்றிக் குண்டு!
காழ்ப்புணர்வு முகப்பெடுத்தால் அழியும் நட்பு!
      கையூட்டும் முகப்பெடுக்கக் கலையும் ஆட்சி!
வாழ்வுக்கு முகப்பாகும் வண்மை! ‘பொய்மை
      வழங்காத நா,முகப்பாம் சான்றோ ருக்கே!
ஏழ்மைக்கு முகப்பாகும் சோம்பல்! தேடல்
      இல்லாத வாழ்க்கைக்கோ முகப்பே இல்லை!


உலகமொழி அனைத்திற்கும் தமிழ்மு கப்பு!
      உரிமைகளின் முகப்பென்றால் உழைப்பே ஆகும்!
மலடறியாக் கற்பனையின் வளந்தான் அன்றோ
      மனிகுல உயர்வுக்கே முகப்பாம்! காணும்
இலையில்லை பூவன்றோ கனிமு கப்பு!
      இளைமைதான் செயல்களுக்கு முகப்பாம்! வானில்
மலைக்கவரும் வில்லன்றோ மனிதர் மேலே
      மறையவனின் கருணையதன் முகப்பைக் காட்டும்!

                             

No comments:

Post a Comment