அன்பினுக்கு வெளிச்சம் காட்டும்!,
ஆசைக்கு வேகம் கூட்டும்!
உன்புகழ் உயர்த்திக் காட்டும்! ,
உறவினை நெருக்கிப் பூட்டும்!
முன்பினாய் உள்ள பேர்க்கும் ,
முறையான் பாதை காட்டும்!
தென்பிலார்க்கு அதனைச் சேர்க்கும்!,
தேவைகள் பூர்த்தி யாக்கும்! 01
மூடியுள்ள கதவைக் கூடச்,
சாவியின்றித் திறந்து காட்டும்!
கூடியுள்ள பேருக் குள்ளும்,
குழப்பத்தை யுண்டு பண்ணும்!
பாடிவரும் கவிஞர் முன்பு,
பரிசெனச் சிரித்து நிற்கும்!
தேடுவோர் கண்முன் வாக்கைத்,
திரட்டியே காட்டி மின்னும்! 02
கல்விக்கு மூன்றாம் கண்ணாம்!,
காதலுக் கிதுவே காலாம்!
செல்வராய்ப் பெயர்கொண் டோரின்,
சிறந்தகைக் கோலாய்ச் சுற்றும்!
‘இல்லையாம் வறுமை’ ஓட்ட,
எழுபவர் தடியாய் நிற்கும்!
ஒல்லைநீ கைக ளுக்குள்,
ஒடுக்கிடு காசை இன்றே! 03
உறுதியை மனத்திற் கூட்டும்!,
உழைப்பினுக் குயர்வைச் சேர்க்கும்!
பெரிதெனும் சபையி னுள்ளும்,
பேசவுன் குரலாய்க் கேட்கும்!
செறுநரை எதிர்த்துச் செல்லும்,
சிறந்ததோர் கருவி யாகும்!
இறுதிநாள் வரைக்கும் நண்பன்,
எனவரும் காசைத் தேடு! 04
†
No comments:
Post a Comment