Thursday, October 27, 2011

’65 நல்லைநீ இல்லை நெஞ்சே..!

உட்பகை புறப்ப கையால்
உறுதுயர் கொண்ட நாடு
நட்புகை வாரா நின்று
நலிவுறும் இந்த வேளை
உட்புகும் துயர்க ளைந்தே
உவப்புநா டேற்க ஏதும்
பெட்பொடு செய்தல் எண்ணாய்
பெண்ணினுக் கழிவாய் நெஞ்சே!                         01

கொல்லுமோர் சிந்தை கொண்டு
  கூற்றெனப் பகைவர் வந்தார்!
புல்லிடும் வெங்க ளத்தில்
  புண்படப் புண்ப டத்தம்
சல்லடை மேனி சாய்த்துச்
  சத்தியங் காகும் வீரர்
அல்லலை எண்ணாய்! அன்பின்
  அழகியை எண்ணல் ஏனோ?                                 02

எல்லையில் பகைவர் கூட்டும்
  இன்னலை ஏற்று வீரர்
அல்லலுற் றலையும் சேதி
  அறிந்தும்,உன் காதற் பெண்ணின்
முல்லைவெண் முறுவல் எண்ணி
  முன்வராள் என்று மாய்ந்து
நெல்லுமி யாவாய் நெஞ்சே!
  நல்லையோ நீயே சொல்லு!                                03

சத்தியம் முன்னே தள்ளச்
  சாவுமுன் நின்றே கொள்ளத்
தத்தமாய் உயிரைப் போக்கித்
  தாயர்நா டிதனைக் காக்க
நித்தமும் அழிவார் தங்கள்
  நினவுகள் மறந்தே உந்தன்
சித்திரைப் பெண்ணைச் சிந்தை
  செய்வதும் சிறப்போ நெஞ்சே!                            04

                                    †







No comments:

Post a Comment