வசந்த காலம் தனில்மலரும்
வண்ணப் பூக்கள் பலவெனினும்,
ஒசந்த மரத்தை அவைவிட்டே
உதிரத் தவறி வாழ்வதில்லை;
நிசமென் றறிவாய் இவ்வாழ்வும்
நீர்மேல் எழுத்தாம் என்பதுவும்!
கசந்து வீணே பயனில்லை!
காலம் அறிந்து செயலாற்று! 01
நீயே யன்றி இவ்வுலகில்
நித்தம் தோன்றும் எல்லோரும்
போயோர் முடிவை எய்துவதால்
போதும் வெறும்வாழ்வு எனல்வேண்டாம்!
காயாய்ப் பழமாய்ப் பலமலர்கள்
கனிந்து மாயும் நிலையெண்ணு!
தாயாய் மனிதர் பலர்வாழத்
தன்னால் ஆகும் செயல்பண்ணு! 02
ஆரும் இங்கே நிலைப்பதிலை;
அகிலம் அறிந்தது இந்தநிலை!
சேரும் பொருட்கள் தொடர்வதிலை!
சேர்ந்தோர் பிரிவும் இயற்கைநிலை!
ஊரும் நாடும் உயரநினை!
உலகம் ஒன்றாய் வாழமுனை!
ஊறும் அன்பில் உதவநினை!
ஊட்டும் அதுவே தியாகநிலை! 03
†
No comments:
Post a Comment