Sunday, October 30, 2011

அந்தி சாயும் நேரம் ..! [1986]


01. அந்தி சாயும் நேரம் -எந்தன்
                 ஆவி போகும் தூரம்!
      வந்து நின்று நீயும் -காதல்
                 வார்த்தை சொல்லப் போமோ?

02. கூடி வாழ்ந்த நாட்கள்; -அன்பைக்
                கொடுத்து மகிழ்ந்த நாட்கள்;
     வாடி நின்ற நாட்கள் -தேவை
               வளர்ந்து நின்ற நாட்கள்
     ஓடிச் சென்ற போதும் -அந்நாள்
               உணர்வி ழந்த நாட்கள்;
     தேடி வந்து நீயும் -இன்றுத்
                திரும்பக் கூட்டு வாயோ?

03. இளமை தந்த மோகம் -புதிய
                  இணக்கம் தந்த வேகம்
      கழியும் போது கூடக் -கண்கள்
                  காண மறுத்த நாட்கள்
     அழகுப் பிள்ளை ராகம் -பின்னர்
                அதுந டந்த வேகம்
     பழகிக் கண்ட இன்பம் -மீண்டும்
               படித்துக் காட்டு வாயோ?

04. பள்ளி சென்ற பிள்ளை -வந்து
              படித்த வற்றைச் சொல்லி
     அள்ளி அள்ளித் தந்த -கேள்வி
             அணைக டந்தும் ஓட
     எள்ளி, வியர்த்துத் தள்ளி -மீண்டும்
            இரவில் நமக்குள் பேசித்
    துள்ளி மகிழ்ந்த நாட்கள் -இன்னும்
            தொடரச் சொல்லு வாயோ?

05. துள்ளி வளர்ந்த பிள்ளை -தன்னுள்
              துடுக்கும் அடங்கி நின்றாள்;
     தள்ளி ஒதுங்கிச் செல்வாள்; -வானைத்

            தரையைப் பார்த்துப் பாடி
     உள்ளுக் குள்ளே மகிழ -நாமும்
            ஒளிந்து மறைந்து கண்டோம்!
     புள்ளி வைத்த நிலையில் -இன்று
            புறத்தில் கிடக்கின் றேனே!


                             அந்தி சாயும் நேரம் -எந்தன்
                                   ஆவி போகும் தூரம்!
                             வந்து நின்று நீயும் -காதல்
                                    வார்த்தை சொல்லப் போமோ?
                                                       
                                                     †

No comments:

Post a Comment