Tuesday, December 6, 2011

உழைப்பு உயர்வுக்கு அழைப்பு -அல்லது- உழைக்கும் வர்க்கம்!



 ( வாசல் கவியரங்கக் கவிதை- )

வீணரைச் செல்வரை வீழ்ந்திவர் வணங்கிலர்!
ஆணவக் காரருக்கு அடிதரத் தயங்கிலர்!
கோணலில் உதவிகள் கொடுப்பதில் சுணங்கிலர்!
காணலில் இவர்களின் கைபடா நலங்களே!

சோர்விலும் தோழரைச் சுறுசுறுப்பு ஊட்டுவர்!
பேர்பெறும் படைப்புகள் பின்வரச் செல்பவர்!
ஆர்வமும், உழைப்பும் அமைதியும் நாடுவர்!
தேர்வடம் இவர்பின், தேசமுன் னேற்றமே!

வேட்ட உரிமைகள் மறுக்கப் படினும்
கேட்ட சலுகைகள் கிடைக்காப் போதும்,
கோட்டம் உழைப்பில் குறுக்கிட விட்டிலர்
பாட்டில் இவரைப் பாடியே மகிழடி!

சத்தியைப் பாடும் சந்ததி இவரடி!
புத்தியால் படைப்பர் புதுமைகள் இவரடி!
சித்தியின் கைகளால் சிறப்பவர் இவரடி!
நத்தியே பின்செல நமக்கும் உயர்வடி!

அன்பில் கனிந்தவர்! ஆண்மையில் நிறைந்தவர்!
துன்புகண் டொதுங்கார்! தூங்காக் கையினர்!
முன்புவைத் துழைப்பை மூவுல கெழுப்புவர்!
இன்பமும் இவர்பின்! எழுந்திநீ செல்லடி!

சாதனை இவர்க்குச் சம்பவம் ஆமடி!
வேதனை இவர்க்கு விளையாட் டாமடி!
சோதனை இவர்க்குச் சொர்க்கப் படியடி!
சீதனம் நலங்களே சிரித்து,பின் செல்லடி!

வீழினும் பிறரது வீழ்ச்சியை எண்ணிலர்!
தாழினும் பிறர்துயர் தாங்கிடும் மேலவர்!
சூழினும் சூழ்பவர் சுகத்தையே நாடுவர்!
வாழினோ உழைக்கும் வர்க்கமாய் வாழடி!

உழைப்பே பூமியில் உரிமைக் கழைப்பு!
உழைப்பே மனிதருள் உறவுக் கழைப்பு!
உழைப்பே மனிதரின் உயர்வுக் கழைப்பு!

ஃஃஃஃஃ

No comments:

Post a Comment