Thursday, November 10, 2011

ஒளியின் முகங்கள்..!


குழந்தை முகத்தில் சிற்றிதழில்
   குலவும் நகையின் ஒளிதானோ
கொழுந்துச் சுடரோன் கீழ்த்திசையில்


   குழைத்துத் தீட்டும் நிழலொளிதான்?

மழலைச் சிறுவர் இளமுகத்தில்
    மண்டும் குறும்பின் ஒளிதனோ
மழையைச் சிதறும் கருமேகம்
    மலரச் செய்யும் மின்னொளிதான்?


ஆர வாரம் கொள்ளிளைஞர்
    அடக்கா நகையின் ஒளியோசொல்
பேர லைகள் புரண்டுவரப்
    பெரிதாய் எழும்பும் நுரையொளிதான்!


உச்சி வெயிலோன் ஊனுருக்க
    உருக்கும் வெள்ளி ஒளியோசொல்
நச்சுக் கண்டன் திரிபுரத்தை
    நசிக்க நகைத்த பேரொளிதான்!


கருத்தைக் கவர்வான் முன்வெட்கம்
    கவிழ்த்த முறுவல் ஒளியோடா
பருத்த மேகத் திரையுள்ளே
    பதுங்கும் நிலவின் இளவொளிதான் !


நின்றாள் வெட்கம் நினைத்தவனின்
    நீர்த்த இதழின் ஒளியோடா
அன்றப் பொழுதே அலரும்,மலர்
    அழகு,ஏறு இதழின் புத்தொளியும்!


காதல் இருவர்க்கு அலர்கூட்டிக்
    கண்கள் சிமிட்டும் ஒளியோடா
கூதிர்ப் பருவ விண்மீன்கள்
    கூடிச் செய்யும் கூரொளிதான்!

                             < 0 >

No comments:

Post a Comment