சங்:31 : 10-09-2011
இறைவனே என் நம்பிக்கை!
உற்றவனாய் இருப்பேனோ? உடன்இ ருப்போர்
தொற்றவரும் பயம்களைந்து துயர்து டைத்து
மற்றவரின் மகிழ்ச்சிக்கே உதவு வேனோ?
1அற்றான்போல் ஆவேனோ அருமை யோர்முன்!
[ 1இறந்தான் ]
குற்றமெனப் பலர்கூறிக் குறைகள் பேச
முற்றவரும் பகைகூடி முன்னின்று என்னைச்
சுற்றிவரும் இகழ்சியுடன்; சூழ்ச்சி கூட்டிப்
பற்றி,எனது உயிரினையும் பறிக்கப் போமோ?
கொற்றவனே! நீயே,என் கேட கம்,ஆம்!
கற்பாறை கோட்டையுமாம்! கைக ளுக்குள்
அற்பனெனை அடைக்கலமாய் அணைக்க வாரும்!
பற்றுடையோர்க்கு உறுதுணையே! பிறழா வாக்கே!
தளர்உடலேன் எனைநீயே தாங்க வேண்டும்!
உளம்,உயிரின் வருத்தங்கள் ஒழிக்க வேண்டும்!
களம்,எதிலும் கைவிட்டுக் கண்டி லேனே!
வளங்கொடுத்து வாழ்வளிக்க வாரும் அய்யா!
வெய்யோராம் பொல்லாரை வெட்கச் செய்யும்!
பொய்வாய்கள் அடைபடவே பூட்டுப் போடும்!
கைநேர்மை யற்றவரைக் கட்டி வையும்!
செய்திடும்,என் தலையுயர்த்திச் சிறக்கும் வாழ்வே!
உனையஞ்சி நடப்போர்க்குன் உள்ளத் தன்பு
தினையெனினும் நன்மைகளோ தேடி வந்து
பனையளவு கிட்டிடுமே! பழி,ப யங்கள்
வினைகெடுமே! வேதனைகள் விலகிப் போமே!
நீர்,எடுத்துக் காத்திடவே நினைத்து விட்டால்
யாரெடுக்கும் சூழ்ச்சிகளும், பூசல் தாமும்
நீரெடுத்த உப்பாக நில்லா தோடும்!
பேரெடுத்த ஆண்டவரே! போற்றி! போற்றி!
தேரெடுத்துப் பகைவரினும் திணறேன்! அஞ்சேன்!
பேர்,எடுத்த எனைக்காக்கும் பெருமை கொண்டீர்!
நீர்,எடுத்த கூடாரத் துள்நிற் கின்றேன்
கூரெடுத்த உம்பார்வை கொடுக்கும் காப்பே!
†
1
கர்த்தருள் நிலைத்திரு..!
(29-09-2011)
கர்த்தருக் காகநீ காத்திரு,
கைகொடுத் தவருமே உதவுவார்!
கர்த்தரின் வார்த்தைகள் கேட்டிரு!
கவனமும் ஞானமும் கூட்டுவார்!
கர்த்தருக் கொப்புனைக் கொடுத்திரு,
கருத்துடன் நல்வழி நடத்துவார்!
கர்த்தரின் வழியிலே நடந்திடு,
கால்கள்தள் ளாடிட விட்டிடார்!
கர்த்தரால் என்றுநீ செயல்படு!
காரியம் வென்றிடப் பண்ணுவார்!
கர்த்தரை நம்பிநீ களித்திரு,
காணும்,உன் மகிழ்ச்சியைப் பெருக்குவார்!
பொல்லாப்பு செய்பவர் ஒதுக்குவாய்!
பொறுமையால் எரிச்சலை அடக்குவாய்!
நல்லன யார்க்குமே செய்குவாய்!
நன்மையாற் தீமையை நீக்குவாய்!
செம்மையாய் நேர்மையாய்ச் செயல்படு!
செழுமையும் வளமுமே வாய்த்திரு!
அம்மையப் பன்,அவர் என்றெடு
அவர்துதி! அதில்நீ நிலைத்திரு!
தந்தைதாய் கனம்பெற நடந்திடு!
தாங்குவார் கர்த்தரும் திடம்பெறு!
மந்தையுள் அவர்துதி செய்திரு!
மகிழ்ந்தவர் தாங்கிடக் களித்திரு!
†
6
02-10-2011 ‘வாசல்’ கவியரங்கக் கவிதை
தலைப்பு : ’மக்கள் மனத்தில் மகாத்மா’
மக்கள் வாழச் சுதந்திரமே
மாற்றென் றெண்ணிச் சிறைசென்று
செக்கை இழுத்து மடிந்தவராம்
செம்மல் வ.உ. சிதம்பரனார்
பக்கம் இருந்து வருபவனாய்ப்
பழைய மரபில் படிக்கின்றேன்:
மக்கள் மனத்தில் மகாத்மாவாய்
மரணம் வென்று நீற்பதையே!
இக்கணம் எனக்கும் உதவிடவே
எழுவார் இயேசு பெருமானே!
தாமரை மலரில் இல்லை,
தகிக்குமோர் மலைமேல் தொங்கிக்
காமுறு கவிதை இல்லை,
கசப்புறு வசவு கேட்டுச்
சாமரச் சேவை யில்லை,
சரீரத்து ஆணி ஏற்றுக்
கோமுறை கூட்டிப் பாவக்
கொடுமைதீர்த் தெழுந்தார் போற்றி!
தண்டா மரைபோல் தவழும் சிரிப்பதனால்
வண்டாய்த் தமிழ்முரலும் வாயுடையோன் -கொண்டாடும்
வாசலிற் பாடி வசந்தமுற நிற்பவரின்
நேசத்தை வாழ்த்தி நினை.
பக்: 2 பார்க்க
மரணத்தை வென்ற மகாத்மா..!
துன்பமின்றித் துயரமின்றி வாழ எண்ணித்
துடிக்கின்ற மானிடமே! இதனைக் கேட்பாய்:
அன்புசெய்யப் பழகிடுவாய்! ஆகா தோர்க்கும்
ஆறுதலைக் கொடுப்பதற்கே முயற்சி செய்வாய்!
இன்பமென்ற பகற்பொழுதே இருந்து விட்டால்
இரவென்ற ஓய்விங்கு கிடைக்கப் போமோ?
அன்பும்,‘ஒரு தப்படி’தான், வாம னன்போல்
அளந்ததுலகை அதுவெல்லும் ஆளும் என்றும்!
முன்பிருந்த துயரெண்ணி மலைத்தி டாமல்,
முயன்றுபலர் நன்மைக்கே முடிவில் வென்று
பின்பெழுந்த காந்தியினை எண்ணிப் பாரும்!
பிறர்க்குவரும் நன்மைகளைப் பெரிதாய் எண்ணி,
அன்புசெய்த இயேசுவைத்தான் அவர்,உ ணர்ந்தார்!
அதிலுள்ள சுகமறிந்தார் துயர்ம றந்தார்!
தென்புவர, மனத்துள்ளே தேவை குன்ற,
தேவனைப்போல் முயன்றெழுந்தார்! இன்றும் வாழ்வார்!
நிலந்தாங்க வளர்மரங்கள் ஓரு யிர்தான்,
நின்றயிடத் தேஅவைகள் பூவும் தேனும்
உலர்ந்தழியும் முன்பளிக்கும் உண்மை கண்டார்!
ஒருபயனும் இல்லாத உயிர்கள் இல்லை,
அலந்துழன்று வாழ்வதெல்லாம் அடுத்த வர்க்கொன்று
ஆற்றுவதற் கென்றுணர்ந்தார்! அன்பே செய்தார்!
குலம்சாதி மதமென்று குறைத்துப் பேசிக்
குடிமக்கள் பிரிவதனைச் சாடித் தீர்த்தார்!
தன்னிலும்,ஓர் இனியனெனெ ஒருவர் கண்டார்!
‘தனைப்பிறர்க்காய் கொடுத்தவரை’த் தன்னுள் கொண்டார்!
தன்னிலவர் இருப்பதனைத் தினமும் நம்பித்
தவறுகளுக் காய்வருந்தித் திருந்தி, வேண்டி
நன்மைகளே பிறர்க்காற்ற உறுதி பூண்டார்!
நாளுமொரு பிறப்பெடுத்து நடந்து காட்டி
இன்னுயிரும் அவர்போலக் கொடுத்தெ ழுந்தார்!
இன்றுமவர் மரணத்தை வென்று வாழ்வார்!
†
No comments:
Post a Comment