Wednesday, February 1, 2012

28-1-12 பொங்கல் புத்தாண்டு.!



உழைத்துச் சேர்த்த நெல்லைக் கூட்டி
உறவு மார்கள் முகத்தைப் பார்த்தே
          உண்ணும் நாளிது!
உழைப்பில் வந்த களைப்பைப் போக்கி
உறவில் கிட்டும் சுகத்தை நம்பி
          உயிர்க்கும் நாளிது!
இழைத்த செயலில் உதவி யாக
இருந்த மாடு கன்றைக் கூட்டி
          இனிக்கும் நாளிது!
பிழைத்து வாழ்வ தற்கு நன்றி
பிறந்த பூமி பரிதி முன்பு
           படைக்கும் நாளிது!
              
பழைய நாட்கள் எண்ணிப் பார்த்துப்
பதுக்கி வைத்த பகைமை போக்கப்
        பழகும் நாளிது!
விளைவு நல்ல தாக வேண்டி
விரும்பு நல்ல செயல்கள் செய்ய
        விழையும் நாளிது!
உழவு மாட்டை முன்,நி றுத்தி
உயிர்கள் யாவும் வாழ வேண்டி
        உதவும் நாளிது!
பொழுது விடிந்த தைப்போல் நன்மை
பொங்கும் என்ற உணர்வு நெஞ்சில்
        புரளும் நாளிது!
              
எழுது பொருட்கள் எடுத்து வைத்தே
இறைவ னாக அவற்றை எண்ணி
          இறைஞ்சி நின்றதும்
பழுது நீக்கும் பொருள்து லக்கிப்
படைய லிட்டு மகிழ்ந்து நின்று
          பார்த்த நாட்களும்
உழுது கூட வாழ்ப வற்றை
உணர்வி னோடும் நெகிழ்ந்து போற்றி
          உணரும் நாட்களும்
முழுது மாக இயற்கை யோடு
முரண்ப டாத தமிழர் வாழ்வை
           முரலும் நாட்களே!

எழுக இங்கு புதிய நாட்கள்!
எழுக நாளும் புதிய எண்ணம்!
          எழும்,அந் நேமிபோல்!
எழுக இங்கு புதிய பூமி!
எழுக உயிர்கள் வாழும் நீதி!
         எழுக! சாமியே
எழுக என்ற எண்ண மாகும்!
எழுக இன்பம் என்ப தாகும்
         எவ்வு யிர்க்குமே!
கழிக இதனின் மாற்று நோக்கும்!
கரங்கு பூமி புதிய ஆண்டு
          காணப் போகுமே!
        

No comments:

Post a Comment