Tuesday, July 16, 2013


குன்றா ஒழுக்கம் குறைவிலாப் பண்பாடு 
நன்றாய் இவைகல்வி நல்குமேல்-இன்றேன் 
பணத்தின்மேற் செல்லுமோ பள்ளிகள்? கற்றும் 
குணத்தின்மேல் வையார் குறி!               (1) 

ஆன்ற குடிப்பெருமை, ஆகிவரும் நல்லொழுக்கம் 
தோன்றப் படிபறிவு தூண்டுமேல்- சான்றோரே 
எங்கும் இருப்பர்! இருக்காதே கையூட்டும்! 
தங்குமே நேர்மை தழைத்து!                  (2) 

ஏனில்லை தூய்மை இதயத்தில்? இன்சொல்லில் 
ஏனில்லை வாய்மை எமக்குள்ளே? -ஏனில்லை 
நேர்மை செயலில். நிகழ்வுகளில்? காசாசை 
சீர்மை அழிக்கும் சிதை!                       (3) 

பொருளையே ஆதாரம் போற்சொன்னோம்;  வாழ்வை 
இருளிலே வேட்டைஎனச் செய்தோம்! -அருளிலாக் 
காட்டுள் அனுப்பியபின் காட்டுவரோ (நல்லொழுக்கம்? 
கேட்டுப் பயனென்,இங் கே!                    (4) 

நல்லொழுக்கம் ஆன்மீகம்! நாட்டொழுக்கம் இங்கதனால்; 
இல்ஒழுக்கம் கூட்டும் இவையெலாம்! - -தொல்லொழுக்கின் 
சான்றோர் பலரும் சரியென்று இவைசொன்னார்! 
ஊன்றி இவைவளர்ப்பாய் உள்!.         (5) 
< 0 >

No comments:

Post a Comment