உம்மைச்
சரணாய் உடையவர் மகிழ்வர்
02-02-2012 06:56:52 AM
உண்மையும் நேர்மையும் உள்ள கடவுளே! ஒளிக்கா தெமக்கே உதவிட வாரும்.
கண்மறைக் காது காத்திட வாரும்!
காலையில் உமது கருணையைக் கேட்பேன்!
காத்த பொறுமை கைவிட் டெழுமே!
வேலையில் துரும்பாம் வேதனை தீரும்!
விடியலில் உமக்காய் வேண்டினேன் வாரும்!
சூழ்ச்சிக் காரர் வீழ்ச்சி யடையவும்
சூதுகள் செய்வோர் வேதனைப் படவும்
காட்சிக் கொதுக்கிக் கடிந்தவர் வெறுப்பீர்!
ஆட்சிக் குள்ளே அவரை மறுப்பீர்!
கோணல் மனத்தர், குறளை சொல்வோர்
கொடுஞ்செயல் செய்வோர் கொலைபுரி கின்றோர்
ஆணவக் காரர் அசுத்த நாவினர்
அனைவரும் எம்மை அண்டாது அழிப்பீர்!
அஞ்சி உமதடி அனுதினம் பாடும்
அன்பர் எமக்கே அருளிட வாரும்!
கெஞ்சி அழைப்பேன் கேடுகள் நீக்கும்!
கீழ்ப்படி கின்றேன் கேடகம் தாரும்!
செம்மை வழியாம் உம்வழி நடத்தும்!
சீடருக்கு உம்மருள் வீடது கூட்டும்!
உம்மைச் சரணாய் உடையவர் மகிழ்வர்!
உள்ளம் களிப்பர் உன்னில் நிலைப்பரே!
(†)
No comments:
Post a Comment