03-02-2012 06:27:29 PM
நாலாறு மாதமெனை நலுங்காமல் குலுங்காமல்
நடுவயிற்றுள் பேணியபின்
நானிலத்திற் பெற்றாளை
நூலேறப் பொறுக்காத
நுண்ணிடையின் முன்,எனை,முந்
நூறுநாட் சுமந்திருந்து
நொந்தவளாய் ஈன்றாளை
மாலேறும் பெருவத்தில்
மழலையெனை மிகவிரும்பி
மகிழ்ந்து,அதனை நீத்தாளை
மனத்திலெனை நிறைத்தாளைச்
சேலேறும் தடங்கண்ணாம்
சிறுகோட்டை தனிலென்னைச்
சிறைவைத்துத் தனைமறந்தாள்
சேர்ந்திருப்ப தெந்நாளோ? (1 )
என்னோடு தான்தூங்கி
என்விழிக்குள் உறவாடி
இன்பமென, இளவலென,
எப்பொருட்கும் முன்,நாடிப்
பொன்னோடு பல்துகிலும்
பூட்டியெனை அழகூட்டிப்
பொங்குமனம் ஆனந்தப்
புனல்கூட்டப் பாராட்டித்
தன்னோடு வந்தபொருள்
தன்னுயிரின் தனிச்சொத்து,
தரணியிதில் தாய்மைதனைத்
தந்தபெரும் வள்ளலென
முன்னோடப் பின்வந்து
முழுதுனெனுள் தனைமறந்து
முத்தமழை பெய்தாளை
முகம்பார்ப்பது எந்நாளோ? (2 )
†
No comments:
Post a Comment